009/ACJU/F/2006
2006.04.20
பொதிகள் சுற்றும் கடதாசிகள், பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், புத்தகக் மேலுறைகள் போன்றவற்றில் விலங்குகளின் உருவப் படங்களை அச்சிடுதல் இஸ்லாமிய ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்டதா ?
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
'நான் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களது சமூகத்தில் இருந்த வேளை, ஒருவர் வந்து தான் உருவப் படங்ளைச் செய்து உழைப்பதாக சொன்னார். அப்பொழுது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதைத் தவிர வேறு ஒரு விடயத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை என்று கூறிவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு சொன்னதை நான் செவியுற்றிருக்கின்றேன்: "யார் உருவத்தை வரைகின்றாரோ, அவர் அவ்வுருவத்துக்கு உயிர் கொடுக்கும் வரை அவரை அல்லாஹ் வேதனை செய்வான். அதற்கு அவரால் ஒரு போதும் உயிர் கொடுக்கமுடியாது" என்று சொன்னார்கள். இச் செய்தி கேட்டதும் அம்மனிதர் திகைத்து, முகம் மஞ்சளித்துப் போனார். அதைக் கண்ணுற்ற இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், "உங்களுக்கு கேடு உண்டாகட்டும். நீங்கள் இதனை மறுத்தால், இதோ இருக்கக்கூடிய மரங்களை வரையுங்கள்" என்று அம்மனிதனுக்குச் சொன்னார்கள் என்று ஸஈத் இப்னு அபில் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்: சஹீஹுல் புகாரி : 2225)
மேற்படி ஹதீஸுக்கு இமாம்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளனர்:
'உயிருள்ள விலங்குகளின் உருவங்களை வரைவது கடுமையாகத் தடுக்கப்பட்ட ஹராமான ஒரு விடயமாகும். அது ஒரு பெரும் பாவமுமாகும். அதனைச் செய்பவர் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கைக்குரியவராவார். அவர் அவ்வுருவத்தை சங்கைப்படுத்தினாலும், சங்கைப்படுத்தாவிட்டாலும் ஹராமாகும். அவ்வுருவங்களை புடவை, விரிப்பு, திர்ஹம், தீனார் (முற்கால நாணயங்களைக் குறிக்கும்), பாத்திரங்கள், சுவர்கள் போன்ற எவற்றில் வரைந்தாலும் அது ஹராமாகும். எனினும் மரங்கள் போன்ற உயிரற்றவைகளை வரைவது குற்றமாகாது' என்று இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனினும், பாடசாலைக் கல்வியோடு தொடர்புடைய தீய உணர்வுகளைத் தூண்டாத மாணவர்களுக்கு அத்தியாவசியத் தேவையுடைய உருவப் படங்களை மாத்திரம் தேவைக்கேற்ப வரையலாம்.
இதனை பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கின்றது:
'தபூக் யுத்தத்தில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்பி வந்த போது, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்த விளையாட்டு (பெண்களின் உருவமைப்பிலிருந்த) பொம்மைகளை (தடுக்காமல்) அங்கீகரித்துக்கொண்டார்கள்'. (நூல்: அபூ தாவூத்)
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
அஷ் ஷைக் டப்ளியு. தீனுல் ஹஸன்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல்
அஷ் ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர்,
உலமா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா