ACJU/FTW/011/F/2011/0141
2016.08.16
கேள்வி: ஜுமுஆத் தொழுகைக்கான அதானின் எண்ணிக்கை சம்பந்தமாக தெளிவுபடுத்தவும்.
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
ஜுமுஆவுக்காக அழைக்கப்படும் அதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலும், அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது காலத்திலும் ஒரு அதானாகவே இருந்து வந்தது. அது இமாம் மிம்பர் மீது அமர்ந்தவுடன் ஒலிக்கும் அதானாகும்.
ஸாஇப் இப்னு யஸீத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றாகள்:
“வெள்ளிக்கிழமையின் அதான் இமாம் மிம்பரில் ஏறி உட்காரும் பொழுதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரது காலத்தில் இருந்து வந்துள்ளது. உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்களும் அதிகரித்த பொழுது உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு இன்னும் ஒரு அதானை ஸவ்ராஃ எனுமிடத்தில் கூறும்படி ஏவினார்கள். அதன்படியே அது (இன்றுவரை) அமுலில் இருந்து வருகிறது.” (ஸஹீஹுல் புகாரி, கிதாபுல் ஜுமுஅஹ், பாபுத் தஃதீன் இன்தல் குத்பஹ்)
இமாம் மிம்பரில் உட்கார்ந்தவுடன் கூறப்படும் அதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்தே வந்துள்ளது என்பதும் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், மக்கள் தொகை அதிகரித்ததனால், குறித்த நேரத்தில் ஜுமுஆவுக்குத் தயாராகும் வகையில் மிம்பரில் அமர்ந்தவுடன் சொல்லப்படும் அதானுக்கு முன்னதாக இன்னுமொரு அதானை ஏற்படுத்தினார்கள் என்பதும் மேலுள்ள ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்படுத்திய அதான் ஸுன்னத் என்பதாக இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் மற்றும் பல உலமாக்கள் கூறியுள்ளார்கள்.
இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் இது பற்றி தனது ஃபதாவாவில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
“இவ் அதான் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகப்படுத்தி முஸ்லிம்கள் அதன் மீது ஒன்று பட்டதன் மூலம் மார்க்கமாக்கப்பட்ட அதானாக ஆனது.” (மஜ்மூஃ பதாவா இப்னி தைமிய்யா, பாகம்: 24, பக்கம்: 193)
ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
“உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்பற்றத்தக்க கலீபாவாக இருந்ததனாலும் அவர்களது செயலை மக்கள் பின்பற்றியுள்ளார்கள் என தெரியவருகிறது.” (பத்ஹுல் பாரி, பாகம்: 02, பக்கம்: 394)
ஷாபிஈ மத்ஹபைப் பொறுத்தவரை, இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் 'அல்-உம்மு' வில் குறிப்பிடும் பொழுது,
“நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காலத்தில் இருந்ததே எனக்கு மிகவும் விருப்பமானது” என்று கூறியுள்ளார்கள்.
ஷாபிஈ மத்ஹபின் முக்கிய இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜர் அல்-ஹைதமி ரஹிமஹுல்லாஹ் தனது துஹ்பாவில் ஜுமுஆவுடைய பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
“(இமாம் மிம்பருக்கு ஏறுமுன்( மினாராவில் கூறப்படும் அதான், மக்கள் அதிகமான பொழுது உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்படுத்தியதாகும். இதனை ஏற்படுத்தியவர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்பதாகவும் ஒரு கருத்து கூறப்படுகின்றது. எனவே, தேவைக்கேயன்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அமுலில் இருந்த நடைமுறையை பின்பற்றுவதே மிகச் சிறந்தது.” (துஹ்பதுல் முஹ்தாஜ், பாகம்: 03, பக்கம்: 370)
எனவே, மேற்கூறப்பட்ட அறிஞர் பெருமக்களின் கருத்துகளுக்கு அமையவும் குலபாஉர் ராஷிதீன்களின் வழிமுறை பின்பற்றப்படவேண்டும் எனும் நபி மொழிக்கமைவாகவும் இவ்விடயத்தில் பின்வரும் முடிவு எடுக்கப்படுகிறது.
மக்களை ஜுமுஆவிற்கு உரிய நேரத்தில் வருவதற்காகத் தயாராக்குதல் போன்ற தேவை இருப்பின், இமாம் மிம்பருக்கு ஏறுமுன் இன்று அமுலில் இருக்கும் அதான் வேண்டத்தக்கதாகும். ஆயினும் இரு அதான்களுக்கிடையிலும் உள்ள நேரம் ஒரு மனிதன் சாதாரணமாக தயாராகுவதற்குப் போதியளவுடைய நேரமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா