2024.09.11ஆம் திகதி, இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச 'முஸ்லிம் எய்ட்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டனர்.
குறித்த சந்திப்பில், பிரதிநிதிகளை வரவேற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வருகை தந்திருந்தவர்களுக்கு ஜம்இய்யா பற்றிய அறிமுகத்தினை வழங்கியதோடு கடந்த காலங்களில் ஜம்இய்யாவினால் மேற்கொள்ளப்பட்ட மனிதநேயப் பணிகள், மற்றும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பிலும் விளக்கக் காட்சிகளுடனான தெளிவுகளை வழங்கினார்கள்.
இதனையடுத்து, ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், முஸ்லிம் எய்ட் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியவற்றிடையே நீடித்துவரும் நல்லுறவு, புரிந்துணர்வு பற்றி கலந்துரையாடியதோடு, இந்நாட்டில் மனிதநேய உதவிகளை மேற்கொள்ளல், சகவாழ்வை கட்டியெழுப்புதல் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்கள்.
மேலும், அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும், சமாதான மையம் (Harmony Center) ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் குறித்து சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள் அவை தொடர்பிலான ஜம்இய்யாவின் முன்னெடுப்புகள் மற்றும் வேலைத் திட்டங்களுக்கு முடியுமான பங்களிப்புக்களை வழங்குமாறும் குறித்த பிரதிநிதிகள் குழுவினரிடம் கோரிக்கையொன்றினை விடுத்தார்கள்.
இச்சந்திப்பில், முஸ்லிம் எய்ட் நிறுவனம் சார்பில் அதன் தலைமை அதிகாரி முஸ்தபா கமால் பாரூக்கி, பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்ஹர் அஸீஸ், அதிகாரிகளான அந்லீன் ரஸ்ஸாக் மற்றும் அப்துல் அஸிஸ், நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைஸர் கான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில், தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோருடன் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஸ்வர், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் மற்றும் ஜம்இய்யாவின் சமூக சேவைக் குழுவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் வருகை தந்திருந்த பிரதிநிதிகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெளியீடுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ACJUMEDIA-