ACJU/FTW/2019/02-353
2019.01.16 (1440.05.09)
கேள்வி : பள்ளியில் பாவனைக்கு உதவாத ஏணிகள், மின்விசிறிகள், அம்பிலிபெயர், பெட்டகம், பிளாஸ்ட்ரிக் கதிரைகள், ஜன்னல் கதவுகள், ஸ்பீக்கர் கோன், பச்சை நிற வேலி வலைகள், கம்பிகள், கம்பு வகைகள் என்பனவற்றை விற்பனை செய்து வரும் கிரயத்தை பைத்துல் மால் நிதியில் சேர்ப்பது மார்க்கத்துக்கு உடன்பட்டதா?
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
உங்கள் மஸ்ஜிதில் பாவனைக்கு உதவாது நீண்ட காலம் தேங்கி நிற்கும் பொருட்களை விற்பனை செய்து அப்பணத்தை பைத்துல் மாலில் சேர்ப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா என கோரியிருந்தீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அப்பொருட்கள் உங்கள் மஸ்ஜிதுக்கு பின்வரும் ஏதாவது ஒரு முறையில் கிடைத்திருக்க வேண்டும்.
1. வக்ப் வழியில் மஸ்ஜிதுக்கு கிடைத்தவை. (ஒருவர் ஒரு பொருளை நான் இதை மஸ்ஜிதுக்கு வக்ப் செய்கிறேன் என்று கூறி மஸ்ஜிதுக்கு ஒப்படைத்தவை).
2. ஹத்யாவாக (அன்பளிப்பாக) மஸ்ஜிதுக்கு கிடைத்தவை
3. மஸ்ஜிதுக்கு சொந்தமான பணத்தின் மூலம் வாங்கிக்கொண்டவை
வக்பின் மூலம் மஸ்ஜிதுக்கு கிடைத்த பொருட்களாக இருந்தால், அப்பொருட்களை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.
மேலும், ஒரு பொருளை வக்பு செய்த நபர் எந்த நோக்கத்துக்காக வக்பு செய்தாரோ, அந்த நோக்கத்துக்குப் பங்கம் ஏற்படாமலும், அதனை மாற்றாமலும் பயன்படுத்துவது நிருவாகிகளின் கடமையாகும். அத்துடன் அப்பொருளை அது வக்பு செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்தவது மிகப் பெரிய தவறாகும்.
'உமர் ரழி அவர்கள் தனது பேரீத்தம் பழத் தோட்டம் ஒன்றின் விடயத்தில் ஆலோசனை செய்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோட்டத்தை வக்பு நிய்யத்துடன் ஸதகா செய்யும் படியும், அவ்வாறு வக்பு நிய்யத்துடன் ஸதகா செய்தால் அத்தோட்டம் மீண்டும் விற்கப்படவும் மாட்டாது, நன்கொடையாக வழங்கப்படவும் மாட்டாது, அனந்தரச் சொத்தாக்கப்படவும் மாட்டாது, இருப்பினும் அத்தோட்டத்தின் பழங்கள் தர்மம் செய்யப்படும் என்று கூறினார்கள்.' [1]
தாரகுத்னியின் அறிவிப்பில் 'வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அது வக்பு செய்யப்பட்டதாகவே இருக்கும்' என வந்துள்ளது.[2]
இவ்வடிப்படையில் வக்ப் செய்யப்பட்ட பொருட்களை விற்பது கூடாது என்றிருந்தாலும், அப்பொருட்கள் பாவனைக்கு அருகதையற்றதாகி அவற்றினால் பயன்பெற முடியாத நிலையை அடைந்தால், அவற்றை விற்றுப் பணமாக்கலாம் என்ற கருத்தை பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த முக்கிய அறிஞர்களில் ஒருவரான இமாம் அந்நவவி றஹிமஹுமுல்லாஹு அவர்கள் தனது 'மின்ஹாஜுத் தாலிபீன்' என்ற நூலில் மேற்படி விடயம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்:
"பள்ளிக்கு வக்ப் செய்யப்பட்ட பாய்கள் உக்கிப்போய், மரக்குற்றிகள் உடைந்துபோய் எரித்து பயன்பெறுவது தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தால் அவற்றை விற்கலாம் என்பதே (ஷாபிஈ மத்ஹபின்) வலுவான கருத்தாகும்." (பாகம் : 282, பக்கம்: 06)[3]
எனவே, உங்களது மஸ்ஜிதில் உள்ள வக்ப் செய்யப்பட்ட பொருட்கள் இத்து பாவனைக்கு உதவாத நிலையில் இருக்குமாயின், அப்பொருட்களை உரிய முறையில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மஸ்ஜிதின் நிதியில் சேர்ப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
மேலும், வக்ப் செய்யப்பட்டுள்ள பொருட்களில் பாவிக்க முடியுமான நிலையில் உள்ள பொருட்கள், உங்களது மஸ்ஜிதின் தேவைகளுக்கு மேலதிகமாக இருக்குமாயின், அவற்றை தேவையுள்ள வேறொரு மஸ்ஜிதுக்குக் கொடுத்தல் வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பொருட்கள் ஹதியாவாக கிடைத்திருந்தால் அல்லது மஸ்ஜிதுடைய பணத்துக்கு வாங்கி வக்ப் செய்யப்படாததாக இருந்தால், அவற்றை மஸ்ஜிதின் நலனைக் கருதி உரிய முறையில் விற்பனை செய்து அப்பணத்தை மஸ்ஜிதின் நிதியில் சேர்த்தல் வேண்டும்.
மேற்கூறப்பட்ட பொருட்களை விற்றுப் பெறும் பணத்தை பள்ளியின் தேவைகளுக்காக மாத்திரமே செலவு செய்தல் வேண்டும். மாறாக பைத்துல் மாலில் சேர்த்து ஏழை எழியவர்களுக்கு செலவு செய்வது கூடாது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
----------------------------------------------------------------------------------------------------
[1] روى البخاري (2764) ، ومسلم (1632) أن عمر بن الخطاب رضي الله عنه أراد أن يتصدق بنخل له ، فاستشار النبي صلى الله عليه وسلم ، فأمره أن يوقفه ، فقال صلى الله عليه وسلم : (تَصَدَّقْ بِأَصْلِهِ ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ) . ولفظ مسلم : (لَا يُبَاعُ أَصْلُهَا، وَلَا يُبْتَاعُ).
[2] قال الحافظ ابن حجر رحمه الله : زَادَ الدَّارَقُطْنِيُّ مِنْ طَرِيقِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ : ( حَبِيسٌ [أي : وقف] مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ ) - باب الوقف للغني والفقير والضيف، كتاب الوصايا، فتح الباري شرح صحيح البخاري
[3] وَالْأَصَحُّ جَوَازُ بَيْعِ حُصْرِ الْمَسْجِدِ إذَا بَلِيَتْ وَجُذُوعِهِ إذَا انْكَسَرَتْ) ، أَوْ أَشْرَفَتْ عَلَى الِانْكِسَارِ (وَلَمْ تَصْلُحْ إلَّا لِلْإِحْرَاقِ) لِئَلَّا تَضِيعَ فَتَحْصِيلُ يَسِيرٍ مِنْ ثَمَنِهَا يَعُودُ عَلَى الْوَقْفِ أَوْلَى مِنْ ضَيَاعِهَا وَاسْتُثْنِيَتْ مِنْ بَيْعِ الْوَقْفِ؛ لِأَنَّهَا صَارَتْ كَالْمَعْدُومَةِ وَيُصْرَفُ ثَمَنُهَا لِمَصَالِحِ الْمَسْجِدِ إنْ لَمْ يَكُنْ شِرَاءَ حَصِيرٍ أَوْ جُذُوعٍ بِهِ (منهاج الطالبين مع تحفة المحتاج, باب في احقام الوقف المعنوية)