2024.10.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் மாலைத்தீவு விஜயத்தினையடுத்து அந்நாட்டிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரங்க குணவர்தன மற்றும் மாலைத்தீவு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி அலி ஸாஹிர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
மாலைத்தீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரங்க குணவர்தன அவர்களை சந்தித்து கலந்துரையாடிய ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்கள் அந்நிகழ்வில் குழுமியிருந்த மாலைத்தீவு வாழ் இலங்கையர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் 'இலங்கையர்களாகிய நாம் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை கடைப்பிடித்து வாழவேண்டியதன் அவசியம்' எனும் தொனிப்பொருளில் உரையொன்றும் நிகழ்த்தினார்கள்.
இதன்போது, ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் உயர்ஸ்தானிகர் ரங்க குணவர்தன அவர்களுக்கு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், மாலைத்தீவு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (IUM) உபவேந்தர் கலாநிதி. அலி ஸாஹிர் அவர்களுடனும் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அவர்கள் சந்திப்பினை மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள்.
அக்கலந்துரையாடலில் மாலைத்தீவு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களை இலங்கை மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்துவது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதோடு இத்திட்டத்தில் புரிந்துணர்வினடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோடு இணைந்து செயற்படுவது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
- ACJU Media -