ACJU/FTW/2019/31-382
2019.12.27 (1441.04.29)
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
Forex என்பது Foreign Exchange என்பதன் சுருக்கமாகும். இது வெளிநாட்டு நாணயங்களை பரிமாற்றம் செய்வதன் மூலம் இலாபம் ஈட்டும் ஒரு வியாபார முறையாகும்.
பொதுவாக வியாபாரம் எனப்படுவது ஒருவர் இன்னொருவரின் பொருத்தத்திற்கிணங்க ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை மாற்றிக் கொள்ளல், அல்லது பெறுமதியைக் கொடுத்து பொருளை வாங்கிக் கொள்ளல் என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இதற்கு மாற்றமாக பணத்தை வியாபாரப் பொருளாக பயன்படுத்தி இலாபம் ஈட்டுவது இஸ்லாமிய பொருளாதாரத்தின் அடிப்படை தத்துவத்திற்கு மாற்றமானதாகும். இதனால் தான் இஸ்லாம் வட்டியை ஹராமாக்கியுள்ளது.
ஒரு நாட்டின் பணத்தை அதே நாட்டின் பணத்துக்குக் கைமாற்றும் பொழுது, உதாரணமாக இலங்கை ரூபாவை இலங்கை ரூபாவுக்கு மாற்றும் பொழுது சரி சமமான அளவு இருத்தல், கைமாற்று ஒப்பந்தம் ஒரே நேரத்தில் நடைபெறுதல், உடனுக்குடன் எந்தவித தவணையுமின்றி கைமாற்றப்பட்டு சொந்தமாக்கிக் கொள்ளப்படுதல் என்ற மூன்று நிபந்தனைகளும் பின்பற்றப்படல் வேண்டும்.
அதேபோன்று, ஒரு நாட்டின் பணத்தை இன்னும் ஒரு நாட்டின் பணத்துக்கு மாற்றும் பொழுது, உதாரணமாக இலங்கை ரூபாவை அமேரிக்க டொலருக்கு மாற்றும் பொழுது சரி சமமான அளவு இருத்தல் என்ற நிபந்தனை தவிர்ந்த ஏனைய இரண்டு நிபந்தனைகளும் பின்பற்றப்படல் வேண்டும். இல்லாவிடின் அது வட்டியாக மாறிவிடும்.
இது தங்கத்தைத் தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும் விற்பனை செய்வதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய சட்டங்களாகும். என்றாலும், தற்காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளிக்குப் பகரமாக பணம் உபயோகிக்கப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளிக்கென்றுள்ள பிரத்தியேக சட்டங்கள் அனைத்தும், தற்காலத்தில் அவற்றிற்குப் பகரமாகப் பிரயோகிக்கப்படும் பணத்திலும் கவனிக்கப்படல் வேண்டும் என்பதே தற்கால ஃபத்வா அமைப்புக்களினதும், மார்க்க அறிஞர்களினதும் கருத்தாகும்.1
மேலும், Forex பணப்பரிமாற்ற முறை இரு நாடுகளின் பணத்தை மாற்றுவதன் ஊடாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு மாற்றப்படும் பொழுது, கைமாற்று ஒப்பந்தம் ஒரே நேரத்தில் நடைபெறுதல், உடனுக்குடன் எந்த வித தவணையுமின்றி கைமாற்றப்பட்டு சொந்தமாக்கிக் கொள்ளல் என்ற நிபந்தனைகள் எதுவும் பேணப்படுவதில்லை.
அவ்வாறே, Forex வியாபாரத்தில் இடம்பெறுகின்ற Spot Sale (உடன் விற்பனை), Margin Sale (விளிம்பு விற்பனை), Short Sale (குறுகிய விற்பனை), Speculation (யூகித்தல்), Forward and Future Sale (முன்னோக்கிய எதிர்கால ஒப்பந்தம்), Hedging (இழப்புக் காப்புறுதி), Option (தெரிவு) போன்றவைகள் மார்க்க சட்டதிட்டங்களுக்கு முரணானவை என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வடிப்படையில், Forex முறையில் பணப்பரிமாற்றம் செய்து இலாபம் ஈட்டுவது வட்டியை அடிப்படையாகக் கொண்ட வியாபார முறையாகும். இதில் ஈடுபட்டு இலாபம் ஈட்டுவது ஹராமாகும். இதுவே, தற்கால ஃபத்வா அமைப்புக்களினதும் தற்கால மார்க்க அறிஞர்களினதும் கருத்தாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்!
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
----------------------------------------------------------------
[1] القرارالسادس لمجمع الفقه الاسلامي بمكة المكرمة في دورته الخامسة بشأن العملة الورقية.