ACJU/FTW/2008/010
2016.08.04
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
எவ்வகையிலும் வட்டித் தொடர்பு வைத்துக் கொள்வதை ஒரு போதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அத்துடன் அதனைப் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் உறுதி செய்கின்றன:
"வட்டியை, அதை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டவர்களாக இருந்தும் (அதை) வாங்கி வந்ததன் காரணமாகவும் மனிதர்களின் செல்வங்களை அவர்கள் நியாயமின்றி உண்டு வந்ததன் காரணமாகவும் அவர்களில் (இத்தகைய) நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்." (அந்-நிஸா : 161)
"விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் (உண்மையாக) விசுவாசம்கொண்டவர்களாக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். (அல்-பகரா : 278)
இவ்வசனங்கள் வட்டி அமைப்பிலான வங்கிகளில் தனது பணத்தை வைப்புச் செய்வதனால் அவருக்கு அவ்வங்கிகளில் இருந்து வட்டிப் பணம் வழங்கப்படுமாயின் அதனை பெற்றுக்கொள்வதையும் தடைசெய்கின்றன. ஏனெனில் அப்பணம் அடிப்படையில் அவருக்குச் சொந்தமில்லாத ஒன்றாகும். அதனைப் பெற்று, அதனை ஏழைகள், தேவையுடையவர்களுக்கு உதவி செய்வதோ, பொது விடயங்களில் செலவு செய்வதோ கூடாது. அதுவும் ஹராமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:
"ஓர் அடியான் ஹராமான முறையில் பணமீட்டி அதனைச் செலவிட்டாலும், அல்லது தர்மமாகச் செலவிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவன் அதனை விட்டுச்செல்லும் போது நரகின் கட்டுச்சாதனமாகவே அன்றி விட்டுச்செல்வதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்." (முஸ்னத் அஹ்மத்)
எனினும், முஸ்லிம் அல்லாத நாடொன்றின் வங்கிகளில் வட்டி நோக்கமின்றி வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்திற்குக் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வட்டியடிப்படையிலான இலாபம் கிடைக்குமாயின் அதனை எடுத்து, அப்பணத்தை முஸ்லிம்களின் பொது வேலைகளான பாதைகள் அமைத்தல், செப்பனிடல், பாடசாலைகள் கட்டுதல், வைத்தியசாலைகள் கட்டுதல் போன்றவற்றிற்காகப் பயன்படுத்துவதில் தடையில்லை என்றும், அதனை எடுக்காது வங்கிகளிலேயே விடப்படுவதால் அது எமக்கெதிராகவோ, ஷரீஅத்தில் ஹராமான விடயங்களிலோ பயன்படுத்தப்படலாம் என்றும் 1960 களில் அல்-அஸ்ஹர் சர்வதேசப் பல்கலைக்கழகம் ஃபத்வா வழங்கியது. (அல்-ஃபிக்ஹுல் இஸ்லாமிய்யு வஅதில்லத்துஹு - பாகம்: 05, பக்கம்: 3746)
ஒருவர் ஹராமான முறையில் கிடைத்த பணத்தை விட்டும் நீங்கி தௌபா செய்ய நாடினால், அப்பணத்தின் உரிமையாளர் அல்லது அவரது பிரதிநிதியிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும். உரிமையாளர் மரணித்திருந்தால் அவரது அனந்தரக்காரர்களிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும். உரிமையாளர் யார் என்று அறியப்படாதவராக இருந்தால், அப்பணத்தை பொதுவாக முஸ்லிம்கள் பயனடையும் விதத்திலான பாலங்கள் கட்டுதல், தங்குமடங்கள் அமைத்தல் போன்றவற்றிற்காக செலவிடுவது கட்டாயமாகும். அப்படி இல்லையாயின் அப்பணத்தை ஓர் ஏழை அல்லது பல ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுக்க வேண்டும் என்று இமாம் அல்-கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும், இவ்வாறான பணத்தை அழிப்பதோ, கடலில் எறிவதோ முறையாகாது. அதனை முஸ்லிம்களின் பொது நலன்களில் செலவிடுவதே முறையாகும் என்று இமாம்களான அஹ்மத் இப்னு ஹன்பல், ஹாரிஸ் அல்-முஹாஸிபி (ரஹிமஹுமல்லாஹ்) ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர். (அல்-மஜ்மூஃ - பாகம்: 09, பக்கம்: 258)
எனவே, இத்தகைய முறைகளில் கிடைக்கப்பெறும் பணத்தை ஸதக்காவின் நிய்யத் இல்லாது, நன்மையை எதிர்பாராது அங்கவீனர்கள், பாரிய வியாதிகளால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை போன்ற வைத்திய செலவினைச் சுமக்கமுடியாத நோயாளிகளுக்கு செலவிடலாம்.
மேற்கூறப்பட்ட ஃபத்வா ஒருவரின் கைக்கு ஹராமான பணம் வந்துசேரும் சந்தர்ப்பத்திற்கும் ஹராமான பணத்தை எடுக்காமல் விடும்போது அது மிகவும் மோசமான பாவகாரியங்களுக்காக செலவழிக்கப்படும் என்பது உறுதியான சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமானதாகும். மாறாக வட்டி வங்கிகளுடன் தொடர்புகளை வைத்துக்கொள்வதில் கவனயீனமாகவும் சாதரணமாகவும் நடந்து கொள்வதற்கும், தனது ஹலாலான பணத்திலிருந்து உதவிகளைச் செய்யாமல் வங்கியிலிருந்து பெறப்படும் வட்டிப் பணத்தின் மூலம் ஏனையோருக்கு உதவும் பழக்கத்துக்கு ஆளாகுவதற்கும் இம்மார்க்கத் தீர்ப்பு துணைபோகக் கூடாது.
மேலும் வங்கிகளுடன் வட்டி கிடைக்கும் விதத்திலான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்வது பொதுவாக ஒரு முஸ்லிமின் கடமையாகும். அவற்றுக்கு மாற்றீடாக இஸ்லாமிய வங்கிகளை ஸ்தாபிப்பதும் அவற்றை மேம்படுத்துவதும் ஒரு சமூகப் பொறுப்பு என்பதை சகலரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
அஷ்-ஷைக் டப்ளியு. தீனுல் ஹஸன்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா