ஷவ்வால் மாதத்தின் மாண்புகள்

ஏப் 18, 2024

ACJU/RPL/2024/12/21
2024.04.18 (1445.10.09)

ஷவ்வால் மாதம்

ஷவ்வால் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் பத்தாவது மாதமாகும். இது ரமழான் மாதத்தை அடுத்து வரக்கூடியதாகும்.

ஷவ்வால் மாதம் என்பது 'அஷ்ஹுருல் ஹஜ்ஜு' (ஹஜ்ஜு மாதங்கள்) என பெயரிடப்பட்ட மூன்று மாதங்களில் முதன்மையானதாகும். ஹஜ்ஜின் அமல்கள் பொதுவாக துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பதின்மூன்று நாட்களில் செய்யப்படுகின்றன. இருப்பினும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளிலிருந்து தொடங்கி துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தின் 13ஆம் நாள் வரை ஹஜ்ஜின் காலமாக கணிக்கப்படுகின்றது. இக் காலகட்டத்தில் எந்த நேரத்திலும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜின் பயணத்தை ஆரம்பிக்கலாம்.

اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ (2:197)

ஹஜ்(ஜுக்கான காலம்) குறிப்பிட்ட சில மாதங்களாகும். அந்த மாதங்களில் ஒருவர் (தம்மீது) ஹஜ்ஜைக் கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜின் போது தாம்பத்திய உறவு கொள்வதோ, குற்றம் புரிவதோ, தர்க்கம் செய்வதோ கூடாது. (அல்-பகராஹ் : 197)

மேற்குறித்த வசனத்திற்கு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: "ஷவ்வால் துல்-கஃதஹ் மற்றும் துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தின் (முந்திய) பத்து நாட்கள் ஆகியவை ஹஜ்ஜுடைய மாதங்களாகும்."(தப்ஸீர் இப்னு கதீர்-பாகம் : 01)1

 

ஷவ்வால் மாதத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்:

01. ஹிஜ்ரி 01ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தமை - (அல்-பிதாயஹ் வந்-நிஹாயஹ் - பாகம் : 03)

02. ஹிஜ்ரி 01ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பிறப்பு இடம்பெற்றமை. இவர்களே ஹிஜ்ரத்தின் பின் முஹாஜிரீன்களின் முதல் குழந்தையாவார்கள் - (அல்-பிதாயஹ் வந்-நிஹாயஹ், பாகம் : 03)

03. ஹிஜ்ரி 04ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்முல் முஃமினீன் உம்மு ஸலமாஹ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தமை - (அல்-பிதாயஹ் வந்-நிஹாயஹ், பாகம் : 04)

 

ஷவ்வால் மாதத்தின் வணக்க வழிபாடுகள்:

ஷவ்வால் மாதத்திற்கென பிரத்தியேகமான வணக்க வழிபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் அதிகமானவைகள் ஈதுல் பித்ர் பெருநாளுடைய தினத்தில் நிறைவேற்றப்படுகின்றன. மீதமானவை ஆறு நோன்புகளாகும்.

 

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்:

நோன்பின் நோக்கம்

அல்லாஹு தஆலா தனது அடியார்கள் மீது பர்ழான வணக்கங்களுடன் உபரியான வணக்கங்களையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான். ஏனெனில் உபரியான வணக்கங்களைப் பொருத்தவரையில் அவை பர்ழான வணக்கங்களில் அடியார்களிடம் ஏற்படும் குறைகளை ஈடுசெய்யக்கூடியவையாக உள்ளன. அத்துடன் ஓர் அடியான் அல்லாஹு தஆலாவை உபரியான வணக்கங்களின் மூலமாக நெருங்கும் போது அவனை அல்லாஹு தஆலாவும் விரும்புகின்றான்.

 

ஆறு நோன்புகளின் சிறப்பு

ரமழான் மாதத்தை அடுத்துவரக்கூடிய ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்பதை மார்க்கம் எமக்கு சுன்னத்தாக ஆக்கியுள்ளது.

அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோற்றுள்ளதுடன் அதன் சிறப்புகளை எடுத்துக் கூறி ஆர்வமூட்டியுள்ளார்கள்.

عن أبي أيُّوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: مَن صام رمضان ثم أتبَعَه ستًّا من شوَّال، كان كصيام الدهر. (صحيح مسلم: 1164)

'ரமழான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளையும் நோற்பவர் அவ்வருடம் முழுவதும் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல்-அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 1164)

இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்குறித்த ஹதீஸுக்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.

قَالَ أَصْحَابُنَا وَالْأَفْضَلُ أَنْ تُصَامَ السِّتَّةُ مُتَوَالِيَةً عَقِبَ يَوْمِ الْفِطْرِ فَإِنْ فَرَّقَهَا أَوْ أَخَّرَهَا عَنْ أَوَائِلِ شَوَّالٍ إِلَى أَوَاخِرِهِ حَصَلَتْ فَضِيلَةُ الْمُتَابَعَةِ لِأَنَّهُ يَصْدُقُ أَنَّهُ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ قَالَ الْعُلَمَاءُ وَإِنَّمَا كَانَ ذَلِكَ كَصِيَامِ الدَّهْرِ لِأَنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا فَرَمَضَانُ بِعَشَرَةِ أَشْهُرٍ وَالسِّتَّةُ بِشَهْرَيْنِ (شرح النووي على مسلم இباب استحباب صوم ست أيام من شوال)

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளையும் ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நோற்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். எனினும், ஒருவர் அதனை அந்த மாதத்திற்குள் விட்டு விட்டு நோற்பதும் ஷவ்வால் மாதத்தின் ஆரம்பப் பகுதியை விட்டும் அதனை பிற்படுத்தி அம்மாதத்திற்குள் நோற்பதும் ஆகுமானதாகும்.

ஆகவே, ஒவ்வொருவரும் மேற்படி வழிகாட்டல்களுக்கமைய ஷவ்வால் மாதத்தின் மாண்புகளை புரிந்து கொள்வதுடன் அவரவர்களது சக்திக்கேற்ப ஷவ்வால் மாதத்தின் இந்நோன்புகளை நோற்க முயற்சி செய்வோம். வல்ல நாயன் அல்லாஹ் எம்மனைவருக்கும் அவனது திருப்பொருத்தத்தை வழங்குவானாக!

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

------------------------------------------------------------------------------------

[1] وقوله : ( أشهر معلومات ) قال البخاري : قال ابن عمر : هي شوال ، وذو القعدة ، وعشر من ذي الحجة . وهذا الذي علقه البخاري عنه بصيغة الجزم رواه ابن جرير موصولا حدثنا أحمد بن حازم بن أبي غرزة حدثنا أبو نعيم ، حدثنا ورقاء ، عن عبد الله بن دينار ، عن ابن عمر : ( الحج أشهر معلومات ) قال : شوال ، وذو القعدة وعشر من ذي الحجة .)  تفسير ابن كثير)

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.