அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி - 2024

ஏப் 10, 2024

ACJU/NGS/2024/314

2024.04.10 (1445.10.01)

 

இறுதி வேதமான அல்-குர்ஆன் அருளப்பெற்ற சங்கைமிகு ரமழான் மாதத்தில் உலகளாவிய ரீதியில் உள்ள இரண்டு பில்லியன் அளவிலான முஸ்லிம்களும் அல்-குர்ஆனை மனனமிட்டும் பார்த்தும் மஸ்ஜிதுகளிலும் வீடுகளிலும் தொழுகைகளின்போதும் அதிகம் ஓதியும் செவிமடுத்தும் அதனுடனான தொடர்பைப் பேணிவந்தோம்.

தங்களது ஆன்மீக மேம்பாட்டிற்காக உடலாலும் உள்ளத்தாலும் பொருளாலும் நோன்பு நோற்று திக்ர்களில் ஈடுபட்டு ஸகாத் ஸதகாக்களை வழங்கி இரவு வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு அல்லாஹு தஆலாவின் அன்பையும் மன்னிப்பையும் நரக விடுதலையையும் ஆதரவு வைத்தவர்களாக ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளை அடைந்திருக்கிறோம்.

இந்நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கத்துவம் வகிக்கும் ஆலிம்கள் சார்பில் தமது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த ரமழானில் நாம் எவ்வாறு அல்லாஹு தஆலாவுடனும் அல்-குர்ஆனுடனும் தொடர்பில் இருந்தோமோ, வணக்க வழிபாடுகளில் மூழ்கித்திழைத்தோமோ, பாவங்களை விட்டும் தூரப்பட்டு நன்மைகளில் அதிகமதிகம் ஈடுபட்டோமோ, அதனைப் போன்று எதிர்வரக்கூடிய காலங்களிலும் வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், குடும்ப சமூக வாழ்வு, பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக திகழவேண்டும். அதற்கான பயிற்சியினையே சென்ற ரமழான் எமக்கு அளித்துவிட்டுச் சென்றிருக்கிறது.

அதே போன்று அனைத்து முஸ்லிம்களும் ரமழானிலே எப்படி ஒருமித்து நோன்பு நோற்று சமூக ஒற்றுமையினை வெளிக்காட்டினோமோ, அதே ஒற்றுமையினை தேசத்தின் நலனுக்காகவும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்காகவும் கடைபிடித்து நாட்டிற்கு பாத்திரமானவர்களாக திகழவேண்டுமென இப்பெருநாள் தினத்திலே வலியுறுத்துகிறோம்.

ஈதுல் ஃபித்ர் பெருநாள் என்பது ஈகையினை அடிப்படையாகக் கொண்டதாகும். அந்தவகையில் ஒரு மாதகாலமாக அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, பசித்திருந்து, தாகித்திருந்து, புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்று, இரவு காலங்களில் நின்று வணங்கித் தமது கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று வெளிப்படுத்தும் நாம் எம்மைச் சுற்றியுள்ள ஏழை எளியவர்கள், தேவையுடையவர்களும் இத்திருநாளை நல்லமுறையில் கொண்டாடிட எம்மாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்து கொடுப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நாம் நோற்ற நோன்புகளையும் எமது அமல்களையும் அங்கீகரித்து உயர்ந்த நற்கூலிகளைத் தந்தருள்வதோடு, ரமழானில் நாம் அடைந்த பக்குவத்தையும் அல்-குர்ஆனுடனான நெருக்கமான உறவையும் கொண்டு, உலக நாடுகளிலும் குறிப்பாக பலஸ்தீனிலும் அமைதி ஏற்பட்டு, எமது நாட்டிலும் ஒற்றுமையும் சகவாழ்வு மேலோங்க அல்லாஹு தஆலா நல்லருள் புரிவானாக!

تقبل الله منا ومنكم

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.