2024.03.20 (1445.09.09)
மகிழ்ச்சி ஓர் அறிமுகம்
மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது உணர்வு ரீதியானது. உள்ளம் சார்ந்தது. மனநிறைவு திருப்தி அகமலர்ச்சி மற்றும் பிற இனிமையான நேர்மறையான உணர்வுகளின் கலவை ஆகும்.
வாழ்வின் சுவையும் அர்த்தமும் மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கின்ற மகிழ்ச்சியிலும் நல்வாழ்விலுமே தங்கியிருக்கிறது. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மனிதன் எதனையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கின்றான்.
மகிழ்ச்சி தொடர்பான இஸ்லாமிய பார்வை
அல்லாஹ்வின் மீதான உறுதியான நம்பிக்கையும் (ஈமான்) நல்லமல்களும் ஓர் அடியானுக்கு மன மகிழ்ச்சியான நல்வாழ்வையும் நற்கூலியையும் பெற்றுக்கொடுக்கும். அல்-குர்ஆன் வசனம் இதனை உறுதிப்படுத்துகிறது.
مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً ۚ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ (6:97)
"ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் நற்செயல்களை செய்கிறாரோ அவர்களை நாம் மணமிக்க நல்வாழ்க்கையை வாழச்செய்வோம். இன்னும் மறுமையில் அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்." (ஸூறா அந்நம்ல்: 97)
அதேபோன்று எமது வாழ்க்கையை நாம் பிறர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் எமக்குத் தரப்பட்டுள்ள அருட்கொடைகளை திருப்தியோடு ஏற்றுக்கொள்வதும் அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துவதும் நிகழ்கால வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்வதும் மகிழ்ச்சியான நல்வாழ்வுக்கான வழிகளாகும். அல்-குர்ஆன் வசனம் இதனை பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது.
وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَ ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ ؕ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى (20:131)
"இன்னும் அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர். (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்." எனக் குறிப்பிடுகின்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ عليكم (سنن الترمذي: 7449)
'உங்களை விட கீழ் நிலையில் இருப்பவனைப் பாருங்கள். உங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவனை பார்க்காதீர்கள். ஏனெனில் இதுவே நீங்கள் அல்லாஹ்வின் அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்க மிகவும் பொருத்தமானது.' (ஸுனதுத் திர்மிதி : 7449)
வாழ்வில் மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதற்கான வழிகாட்டல்கள்
வாழ்க்கையை நாம் எப்போதும் கோபம், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய குணங்களை விட்டும் நீங்கியதாக ஆக்கிக் கொள்வதுடன் புன்னகையோடும் நேர்மறையான எண்ணங்களோடும் எதிர்கொள்வது உள்ளத்தில் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் நிலைத்திருக்கச் செய்யும். மனிதர்களை புன்னகையோடும் மலர்ந்த முகத்தோடும் சந்திப்பதை இஸ்லாம் ஸதகாவாகக் கருதியிருக்கிறது.
அத்துடன் இஸ்லாம் ஒருவர் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவை வாழ்க்கையில் அடையவேண்டுமெனில் அவர் உளத்தூய்மையில் (தஸ்கியத்துன்-நப்ஸ்) அதிகம் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்துகின்றது. செல்வம், தன்னிறைவு என்பது அதிகம் செல்வம் மற்றும் பட்டம் இருப்பதில் இல்லை. போதுமென்ற மனம் படைத்திருப்பதே மிகப் பெரும் செல்வமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இது தவிர ஒரு மனிதன் தனித்து துறவரம் மேற்கொள்ளாமல் குடும்ப வாழ்க்கையில் இணைந்து கணவன் மனைவிக்கிடையே அன்பையும், நேசத்தையும் மற்றும் மகிழ்வையும் அடைந்து கொள்வதற்கு இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.
மேலும் மனிதர்களோடு தப்பபிப்பிராயங்கள் எதிர்மறையான எண்ணங்கள் இன்றிப் பழகுவதும் பிறரது வளர்ச்சி முன்னேற்றத்தில் தானும் அகமகிழ்வதும் ஒருவர் மீதான காழ்ப்புணர்வையும் போட்டி பொறாமையையும் கோபத்தையும் கெட்ட எண்ணங்களையும் நீக்கி மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெற்றுத்தருகிறது.
அதேபோன்று தன் குடும்பத்தினர் மற்றும் அயலவர்களுடன் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்துகொள்ளுதல், அவர்களுடன் நல்ல முறையில் உறவைப் பேணுதல், தம்மிடம் இருப்பதைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு உதவுதல், எந்த விடயமாக இருந்தாலும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயங்களுக்கு முதலிடம் வழங்குதல், எப்போதும் நன்மைக்கும் நியாயத்திற்கும் மாத்திரம் துணைபோதல், அன்பளிப்புகளை வழங்குதல், நம்பிக்கையான ஆக்கபூர்வமான வார்த்தைகளைப் பரிமாறல் என்று எண்ணற்ற விடயங்களை இஸ்லாம் மகிழ்ச்சிக்கான வழிகளாக அடையாளப்படுத்தியிருக்கின்றது.
மகிழ்ச்சியின் மூலம் ஏற்படும் பயன்கள்
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைத்து மகிழ்ச்சியடைவது அவனுக்கு நன்றி செலுத்துவதாக அமைவதுடன் அருட்கொடைகள் அதிகப்படுத்தப்படுவதற்கும் காரணமாக உள்ளது. அவ்வாறே அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கைக்கு சான்றாக இருப்பதுடன் இறைவிசுவாசிகளிடையே அன்பையும், கருணையையும் பகிர்ந்து கொள்வதற்கு காரணமாக உள்ளது.
சர்வேதச மகிழ்ச்சி தினத்தை ஐ.நா பிரகடனப்படுத்தல்
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கில் சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழவேண்டும் என நாம் ஆதரவு வைக்கிறோம். அல்லாஹு தஆலாவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வழிகாட்டியுள்ள பிரகாரம் மகிழ்ச்சிக்கான வழிகளை அடைந்துகொள்வதனூடாக இறைதிருப்தியையும் சுவனத்தையும் அடைந்து நிலையான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ள வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம்.
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா