இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

பிப் 13, 2024

ACJU/RP/2024-2-11
2024.02.13 (1445.08.02)

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

எதிர்வரும் 2024.02.16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை 'ஷஃபானுடைய அமல்கள் மூலம் ரமழானுக்கு தயாராவோம்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

'ஷஃபானுடைய அமல்கள் மூலம் ரமழானுக்கு தயாராவோம்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

https://drive.google.com/file/d/17EfeeXnwMGtBHfNt5gCRNyJyvxSBuz9Y/view?usp=sharing

------------------------------------------------------------------------------------------------------------------

ஷஃபான் மாதம்

அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ஷஃபான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. ஷஃபான் மாதம் சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும். இது புனிதமிக்க ரமழானுக்கு முன்னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாதமாகும்.

ஷஃபான் எனும் அரபுச் சொல் ‘ஷிஃபுன்’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஷஃபான் எனும் சொல் அரபு மொழியில் கணவாய், ஒன்றுசேர்தல், பரவுதல் என்ற பல கருத்துக்களை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது. ரமழான் மாதத்தைப் போன்று இந்த மாதத்திலும் அதிகமான நன்மைகள் ஒன்று சேர்ந்து பரவிக் காணப்படுவதனால் ஷஃபான் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது என இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.1

 

ஷஃபானின் மாண்புகள்

இம்மாதத்தின் சிறப்பைப் பற்றி பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

عن أسامة بن زيد رضيَ الله عنهما أنَّه سأل النَّبيَّ صَلَّى الله عليه وسَلَّم فقال: يا رسول الله، لم أركَ تصوم شهرًا منَ الشهور ما تصوم في شعبان، فقال صَلَّى الله عليه وسَلَّم: (ذلك شهر يغفل عنه الناس بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى الله تعالى فأحب أن يُرْفعَ عملي وأنا صائم ) (أخرجه النسائي في السنن، كتاب الصيام : 2357)

உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள் ‘மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் (ஷஃபான்) விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அம்மாதத்தில் அல்லாஹு தஆலாவின் பால் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. எனது அமல்கள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்’ எனக் கூறினார்கள். (நஸாஈ: 2357)

 

ஷஃபான் மாதத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

1. ஹிஜ்ரி 02ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டமை. (அல்-மஜ்மூஉ: பாகம்: 06)2

2. ஹிஜ்ரி 03ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹப்ஸா பின்த் உமர் ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தமை. (அத்தபகாத்துல் குப்ரா : பாகம்: 08)3

3. ஹிஜ்ரி 04ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் ஹுஸைன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தமை. (அல்-பிதாயஹ் வன்நிஹாயஹ்: பாகம்: 04)

4. ஹிஜ்ரி 09ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அருமை மகளும் கலீபா உஸ்மான் பின் அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியுமான உம்மு குல்தூம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணமடைந்தமை (அல்-பிதாயஹ் வன்நிஹாயஹ்: பாகம்: 05)4

 

ஷஃபானில் நோன்பு நோற்றல்

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، حَدَّثَتْهُ قَالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ " (رواه صحيح البخاري : 1970)

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஃபானில் முழு மாதமும் நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.” (ஸஹீஹுல் புகாரி: 1970)

عَبْدَ اللهِ بْنَ أَبِي قَيْسٍ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ رضي الله عنها، تَقُولُ: (كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللهِ ﷺ أَنْ يَصُومَهُ شَعْبَان كَانَ يَصِلُهُ بِرَمَضَانَ) (سنن النسائي2350 : – سنن أبي داود:2101)

“நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும் அதனைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும்” என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (அபூதாவூத்: 2101, நஸாஈ: 2350)

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து ஷஃபானில் அதிகமதிகம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் என மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

 

ஷஃபானின் கடைசி 15 நாட்களில் நோன்பு நோற்றல்

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருந்த போதிலும், இந்த மாதத்தின் ஆரம்ப 15 நாட்களில் நோன்பு நோற்காமல் இருந்த ஒருவர் கடைசி 15 நாட்களில் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டதாகும். இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக உள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا بَقِيَ نِصْفٌ مِنْ شَعْبَانَ فَلَا تَصُومُوا»: (رواه الترمذي :738 ,وقال رحمه الله «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ)

“நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள், ஷஃபான் மாதத்தின் அரைப்பகுதி எஞ்சியிருந்தால் நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம் எனக் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.”5

என்றாலும், ஷஃபான் மாதத்தின் ஆரம்ப 15 நாட்களில் சில நோன்புகளை நோற்றவர், வழமையாக திங்கள் மற்றும் வியாழன் நாட்களில் நோன்பு நோற்பவர் அவ்வாறே அய்யாமுல் பீழ் உடைய நாட்களில் நோன்பு நோற்றவருக்கு இம்மாதத்தில் இரண்டாவது 15 நாட்களில் நோன்பது நோற்பதற்கு தடையேதுமில்லை. அதேபோன்று வாஜிபான நேர்ச்சை, (கப்பாரா) குற்றப் பரிகாரத்திற்குரிய நோன்புகள் மற்றும் (கழா) விடுபட்ட நோன்புகள் போன்றவற்றை ஷஃபான் உடைய கடைசி 15இல் நோற்பதற்கு அனுமதியுண்டு என இமாம் “இப்னு ஹஜர் ஹைதமீ” ரஹிமஹுல்லாஹ் உட்பட ஏனைய அறிஞர்களும் கூறுகின்றனர்.6

 

ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவின் சிறப்புக்கள்

ஷஃபான் மாதம் பிறை 15ஆம் இரவுக்கு லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்று அழைக்கப்படுகின்றது.7

ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவைப் பொறுத்தவரையில் அவ்விரவு ஒரு சிறப்பான இரவாகும். இதனை பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹு தஆலா தனது படைப்பினங்களில் கொலை செய்தவர் இன்னும் குரோதம் வைத்துக் கொண்டிருப்பவர் ஆகிய இரண்டு பேரையும் தவிர ஏனையோருக்கு ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவன்று பாவமன்னிப்பு வழங்குகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.8

 

15ஆம் இரவு பற்றிய மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள்

மேற்குறித்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸை அடிப்படையாக வைத்து ஷஃபானின் 15ஆம் இரவை தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ரு, துஆக்கள் மற்றும் ஹதீஸ்களில் வந்துள்ள அமல்கள் மூலம் உயிர்ப்பிப்பது சுன்னத்தாகும் என்று நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களும் கூறுகின்றனர்.

 

இமாம்களின் கூற்றுக்கள் பின்வருமாறு:

இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள்: ஷஃபானுடைய 15ஆம் இரவும் துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய இரவாகும் என்று கூறியுள்ளார்கள். (அல்-உம்மு)9

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு நுஜைம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ரமழானுடைய பத்து இரவுகள், இரண்டு பெருநாட்களுடைய இரவுகள், துல் ஹிஜ்ஜாவின் பத்து இரவுகள், ஷஃபானுடைய 15ஆம் இரவு ஆகிய இரவுகளை அமல்களைக் கொண்டு உயிர்ப்பிப்பது சுன்னத்துகளில் உள்ளதாகும். (அல்-பஹ்ருர் றாஇக்)10

மேலும், மாலிக் மத்ஹபுடைய அறிஞர்கள்: அந்த இரவுகளை (அதாவது ஷஃபான் நடுப்பகுதியின் இரவை) உயிர்ப்பிப்பது விரும்பத்தக்கதாகும் என்று கூறுகின்றனர். (அத்-தாஜ் வல்- இக்லீல்)11

ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களும் இக்கருத்தையே கூறுகின்றனர். இப்னு தைமிய்யா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஷஃபான் 15 ஆம் இரவைப் பொறுத்தவரையில் அதனது சிறப்புகள் சம்பந்தமாக அதிகமான ஹதீஸ்களும், அறிவிப்புக்களும் வந்துள்ளன. ஸலபுகளில் ஒரு கூட்டம் இந்த இரவில் தொழக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரவில் மாத்திரம் ஒருவர் குறிப்பிட்டுத் தொழுவதற்கு ஸலபுகளின் முன்மாதிரியும், ஆதாரங்களும் இருக்கின்றன. இது போன்றவைகள் மறுக்கப்படமாட்டாது. (மஜ்மூஃ அல்-பதாவா)12

எனவே இவ்விரவில் தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர், துஆக்கள் இன்னும் ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ள வழமையாகச் செய்துவரும் அமல்களைச் செய்வதில் கவனம் செலுத்தல் முக்கியமானதாகும்.

 

15ஆம் நாளில் நோன்பு நோற்றல்

15ம் நாளில் நோன்பு நோற்பது பற்றி பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். “ஷஃபான் மாதத்தின் அரைப் பகுதியின் இரவு வந்து விட்டால் அதன் இரவில் நின்று வணங்குங்கள். மேலும் அதன் பகல் பொழுதில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹு தஆலா அன்று இரவு தனது அடியார்களைப் பார்த்து 'உங்களில் எவரும் என்னிடத்தில் பாவமன்னிப்பு கேட்கக் கூடியவர் இல்லையா? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன். ரிஸ்க்கை (வாழ்வாதாரத்தை) கேட்கக் கூடியவர் இல்லையா? நான் அவருக்கு அதை வழங்குகின்றேன். உங்களில் நோய்வாய்ப்பட்டவர் இல்லையா? அவருக்கு ஆரோக்கியமளிக்கின்றேன்' என்று பஜ்ர் வரைக்கும் கேட்கின்றான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.13

என்றாலும் இந்த ஹதீஹுடைய அறிவிப்பாளர் வரிசை மிகவும் பலவீனமானது என்று சில ஹதீஸ் கலை அறிஞர்களும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய அப்துர் ரஹ்மான் இப்னு அபீ சப்ரஹ் என்பவர் “இட்டுக் கட்டக் கூடியவர்” என்று மற்றும் சில அறிஞர்களும் கூறுகின்றனர். மேலும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள நாட்களில் நோன்பு பிடிக்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டியுள்ள விடயமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் அல்லது நான் செவியுற்று கொண்டிருக்க மற்றொரு மனிதரிடம்: “நீர் இந்த (ஷஃபான்) மாதத்தின் நடுப்பகுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான் “இல்லை" என்றேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீர் (ரமழான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.14

இந்த ஹதீஹுக்கு இமாம் நவவி றஹிமஹுமுல்லாஹ் அவர்கள் “இந்நாட்கள் நோன்பு நோற்பதற்கு சுன்னத்தான நாட்களான அய்யாமுல் பீழ் உடைய 13, 14, 15ஆம் நாட்கள்” என்று விளக்கம் கூறியுள்ளார்கள்.15

இவ்வடிப்படையில், ஷஃபான் மாதம் 15ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்பது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸாக இல்லாவிட்டாலும் அந்நாளில் மேற்குறிப்பிட்டதன் பிரகாரம் ஷஃபான் மாதத்தின் பொதுவான சுன்னத்தான நோன்பு என்ற அடிப்படையிலோ அல்லது 13, 14, 15 ஆகிய அய்யாமுல் பீழ் உடைய நாட்கள் என்ற அடிப்படையிலோ நோன்பு நோற்கலாம். இக்கருத்தையே இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.16 அல்லது வழமையாக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பவர் என்ற அடிப்படையிலும் நோன்பு நோற்கலாம்.

 

ஷஃபான் ரமழானுக்கான பயிற்சிப் பாசறையாகும்

ஷஃபான் மாதத்தை அடுத்து வரும் சங்கைமிகு ரமழான் மாதத்தில் நற்காரியங்களில் அதிமதிகம் ஈடுபடுவதற்கு முற்கூட்டியே நாம் தயாராக வேண்டும். அந்த வகையில் இம்மாதத்தில் நபியவர்களைப் போன்று அதிகமதிகம் நோன்புகளை நோற்று பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமழான் மாதத்தில் நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது. ஆண்களும், பெண்களும் சென்ற ரமழானில் விடுபட்ட நோன்புகளை கழாச் செய்துகொள்ள இம்மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

எனவே இம்மாதத்தின் சிறப்பையும் அதில் புரியும் நல்லமல்களையும் எமது சகோதரர்களுக்கு எடுத்துக் கூறுமாறு மஸ்ஜித் இமாம்களையும் கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் சங்கைமிகு ரமழானை அடைந்து அதன் சகல பாக்கியங்களையும் பெற்றுக் கொள்ளவும், இந்நாட்டில் அபிவிருத்தி மேலோங்கவும், உலக வாழ் மக்களுக்கிடையில் ஐக்கியமும் சமாதானமும் கட்டியெழுப்பப்படவும் வல்ல நாயன் அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றது.


அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

[1] فقال "إن شعبان اشتق اسمه من الشعب وهو الاجتماع وسمى به لأنه يتشعب فيه خير كثير كرمضان وقيل لأنهم كانوا يتشعبون فيه بعد التفرقة ويجمع على شعابين وشعبانات، وقال ابن دريد سمى بذلك لتشعبهم فيه، أى لتفرقهم فى طلب المياه، وفى المحكم سمى بذلك لتشعبهم فى الغارات، وقال بعضهم إنما سمى شعبانا لأنه شعب أى ظهر بين رمضان ورجب، وكان شعبان شهر تتشعب فيه القبائل أى تتفرق لقصد الملوك والتماس العطية"  (عمدة القارئ فى شرح صحيح البخارى)

 

[2] صام رسول الله ﷺ رمضان تسع سنين ، لأنه فرض في شعبان في السنة الثانية من الهجرة وتوفي النبي ﷺ في شهر ربيع الأول سنة إحدى عشرة من الهجرة اهـ   "المجموع" 6/250 "

 

[3] .تزوَّج النبي صلى الله عليه وسلم من السيدة حفصة في شعبان بعد أن حلَّت من عدتها، وذلك في سنة ثلاث من الهجرة    [الطبقات الكبرى, 08].

 

[4] قَالَ الْوَاقِدِيُّ وَفِي رَجَبٍ مِنْهَا مَاتَ النَّجَاشِيُّ صَاحِبُ الْحَبَشَةِ وَنَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّاسِ.وَفِي شَعْبَانَ مِنْهَا - أَيْ مِنْ هَذِهِ السَّنَةِ - تُوُفِّيَتْ أُمُّ كُلْثُومٍ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلَّم فغسَّلتها أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ وصفية بن عَبْدِ الْمُطَّلِبِ، وَقِيلَ غسَّلها نِسْوَةٌ مِنَ الْأَنْصَارِ فيهن أُمُّ عَطِيَّةَ. (البداية والنهاية: فصل كَانَ فِي هَذِهِ السَّنَةِ - أَعْنِي فِي سَنَةِ تِسْعٍ - مِنَ الْأُمُورِ الْحَادِثَةِ

 

  1. [5] قال ابن حجر الهيتمي رحمه الله تعالى: "هذه الأحاديث لا تنافي الحديث المحرم لصوم ما بعد النصف من شعبان؛ لأن محل الحرمة فيمن صام بعد النصف ولم يصله؛ ومحل الجواز بل الندب فيمن صام قبل النصف وترك بعد النصف أو استمر؛ لكن وصل صومه بصوم يوم النصف؛ أو لم يصله وصام لنحو قضاء أو نذر أو ورد" انتهى. (الفتاوى الفقهية الكبرى: 2/ 82)

 

[6] قال النووي رحمه الله :قَالَ أَصْحَابُنَا: لا يَصِحُّ صَوْمُ يَوْمِ الشَّكِّ عَنْ رَمَضَانَ بِلا خِلافٍ.. فَإِنْ صَامَهُ عَنْ قَضَاءٍ أَوْ نَذْرٍ أَوْ كَفَّارَةٍ أَجْزَأَهُ، لأَنَّهُ إذَا جَازَ أَنْ يَصُومَ فِيهِ تَطَوُّعًا لَهُ سَبَبٌ فَالْفَرْضُ أَوْلَى. وَلأَنَّهُ إذَا كَانَ عَلَيْهِ قَضَاءُ يَوْمٍ مِنْ رَمَضَانَ، فَقَدْ تَعَيَّنَ عَلَيْهِ  (المجموع شرح المهذب: مسائل تتعلق بصيام)

 

[7] وقال عكرمة: كان ابن عباس يسمي ليلة القدر ليلة التعظيم , وليلة النصف من شعبان ليلة البراءة (تفسير الماوردي, سورة القدر)

 

[8] عن عبد الله بن عمرو، أن رسول الله - صلي الله عليه وسلم - قال: "يطَّلعُ الله عَزَّ وَجَلَّ إلي خلقه ليلةَ النصف من شعبان، فيغفر لعباده، إلا لاثنين: مشاحنٍ، وقاتِلِ نفسٍ". رواه الإمام أحمد في "المسند" (6642)

 

[9] وقال الشافعي رحمه الله: (بلغنا أنه كان يقال: إن الدعاء يستجاب في ليلة الجمعة، وليلة الأضحى، وليلة الفطر، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان، وبلغنا أن ابن عمر كان يحيي ليلةَ جمعٍ، وليلةُ جمع هي ليلة العيد لأن في صبحها النحر... ثم قال(أي الشافعيّ): وأنا أستحبُّ كل ما حكيت في هذه الليالي من غير أن يكون فرضا)  (الأم)

قال النوويُّ رحمه الله: (واستحبَّ الشافعيُّ والأصحابُ الإحياء المذكور مع أنَّ الحديث ضعيف لما سبق في أول الكتاب أن أحاديث الفضائل يتسامح فيها ويعمل على وفق ضعيفها)

 

[10] وقال ابن نجيم من الحنفية  رحمه الله: "ومن المندوبات إحياء ليالي العشر من رمضان، وليلتي العيدين، وليالي عشر ذي الحجة، وليلة النصف من شعبان، كما وردت به الأحاديث"   "البحر الرائق".

 

[11] وجاء في "التاج والإكليل" (3/319) من كتب المالكية: "رغب في قيام تلك الليلة" [يعني منتصف شعبان].

 

[12] وهو مذهب الحنابلة أيضا، كما في "شرح منتهى الإرادات" للبهوتي، وقال ابن تيمية: "وأما ليلة النصف فقد روى في فضلها أحاديث وآثار، ونقل عن طائفة من السلف أنهم كانوا يصلون فيها، فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا"  "مجموع الفتاوى".

 

[13] عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال، قال رسول الله –صلى الله عليه وسلم-: (إذا كانت لَيْلَةُ النِّصْفِ من شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فإن اللَّهَ يَنْزِلُ فيها لِغُرُوبِ الشَّمْسِ إلى سَمَاءِ الدُّنْيَا فيقول: ألا من مُسْتَغْفِرٍ لي فَأَغْفِرَ له، ألا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، ألا مبتلى فَأُعَافِيَهُ، ألا كَذَا ألا كَذَا حتى يَطْلُعَ الْفَجْرُ - سنن ابن ماجه

 

[14] عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُ: - أَوْ قَالَ لِرَجُلٍ وَهُوَ يَسْمَعُ - «يَا فُلَانُ، أَصُمْتَ مِنْ سُرَّةِ هَذَا الشَّهْرِ؟» قَالَ: لَا، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ، فَصُمْ يَوْمَيْنِ» - رواه صحيح مسلم

 

[15] فَكَأَنَّهُ يَقُولُ يُسْتَحَبُّ أَنْ تَكُونَ الْأَيَّامُ الثَّلَاثَةُ مِنْ سُرَّةِ الشَّهْرِ وَهِيَ وَسَطُهُ وَهَذَا مُتَّفَقٌ عَلَى اسْتِحْبَابِهِ وَهُوَ اسْتِحْبَابُ كَوْنِ الثَّلَاثَةِ هِيَ أَيَّامُ الْبِيضِ وَهِيَ الثَّالِثَ عَشَرَ وَالرَّابِعَ عَشَرَ وَالْخَامِسَ عَشَرَ (شرح النووي على مسلم)

 

[16] وقال الشافعي رحمه الله: أما صيام يوم النصف من شعبان فيسن على أنه من الأيام البيض الثلاثة، وهي: الثالث عشر، والرابع عشر، والخامس عشر، لا على أنه يوم النصف من شعبان، فإن حديث الصيام فيه لا يصلح للاحتجاج،

Last modified onசெவ்வாய்க்கிழமை, 13 பிப்ரவரி 2024 15:27

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.