இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

டிச 21, 2023

ACJU/RP /2023/007

2023.12.21 (1445.06.06)

 

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

எதிர்வரும் 2023.12.22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை 'இஸ்லாமும் அரபு மொழியும்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

'இஸ்லாமும் அரபு மொழியும்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:

https://drive.google.com/file/d/1CgrikkdEkk6mPTEJGsjHeXUqL5FTUC8D/view?usp=drive_link

 

உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளன அவற்றில் சுமார் 18 மொழிகள் செம்மொழிகளாக அறியப்படுகின்றன. அவற்றுள் அரபிமொழியும் ஒன்றாகும். 1973ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அரபு மொழியை தம் அமைப்பின் ஆறாவது உத்தியோகப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது. உலக அரபு மொழி தினம் 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

அரபு மொழியும் அதன் தோற்றமும்

அரபு மொழி கண்ணியமானதும் மிகவும் பழமை வாய்ந்ததுமான ஒரு மொழியாகும். அரபு மொழியை முதலில் பேசியவர் யார் என்பதில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் ஹூத் அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி, சமாதானம் உண்டாவதாக!) என்றும் மற்றும் சிலர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் என்றும் ஏனையோர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இமாம் இப்னு கதீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது “அல்-பிதாயா வந்-நிஹாயா”1 எனும் நூலில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்பதே மிகப் பொருத்தமான கருத்தாகும் எனக்கூறுகின்றார்கள். அரபு மொழி தற்போது சுமார் 26 நாடுகளில் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பல மில்லியன் மக்களின் தாய்மொழியாகவும் திகழ்கின்றது.

 

அரேபியர்கள் இரு வகைப்படுவர்

1. ஹஸ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி, சமாதானம் உண்டாவதாக!) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த ஹஸ்ரத் ஹூத் அலைஹிஸ்ஸலாம், அவர்களது சமுதாயத்தினரான ஆது, ஹஸ்ரத் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கூட்டத்தினரான தமூது மற்றும் ஹஸ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கூட்டத்தினரான மத்யன் உட்பட பல கோத்திரங்கள் (அல்-அரபுல் ஆரிபா) அரபு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

2. ஹஸ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்; வழித்தோன்றலிருந்து வந்தவர்கள் (அல்-அரபுல் முஸ்தஃரிபா) அரபு மொழியை தங்களது மொழியாக ஆக்கிக் கொண்டவர்கள் என்றும் இரு வகையினர்களாக அழைக்கப்படுகின்றனர்.2 (அல்-பிதாயா வந்-நிஹாயா)

 

அரபு மொழியின் மாண்புகள்

இஸ்லாத்தின் வருகையுடன் மத்திய கிழக்கு மக்களின் பேச்சு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது சர்வதேச மொழியாக செல்வாக்குப் பெற்றது. இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் அரபு மொழியில் அமையப்பெற்றதானது அதன் அந்தஸ்தை உலக அளவில் பறைசாற்றுவதற்கு மிகப் பிரதான காரணமாக இருந்தது.

 

அரபு மொழியின் மாண்புகளை கூறும் அல்-குர்ஆன் வசனம்

قال الله تعالى في القرآن. "إِنَّآ أَنزَلْنَٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ  (سورة يوسف: 02)

 

“நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.” என்று கூறுகின்றான். (ஸூறா யூஸுப் : 02)

 

அரபு மொழியின் மாண்புகளை எடுத்துக்கூறும் ஹதீஸ்கள்

عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: «( أحبوا العرب لثلاث: لأني عربي، وكلام أهل الجنة عربي، والقرآن الكريم باللغة العربية )              (الطبراني: 11141، الحاكم: 6999، شعب الإيمان 1364) 

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “மூன்று விடயங்களுக்காக அரபிகளை நேசியுங்கள். ஏனெனில் நான் அரபியாக இருக்கின்றேன், அல்-குர்ஆனும் அரபியில் உள்ளது மற்றும் சுவனவாதிகளின் மொழியும் அரபியாகும்.” (அத்-தபரானீ:11141, அல்-ஹாகிம்: 6999, ஷுஅபுல் ஈமான் 1364:)

ஹதீஸ்கலை வல்லுனரான இமாம் அல்-அஜலூனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸ் ஹஸன் எனும் தரத்தில் உள்ள ஹதீஸாகும் என்று கூறியுள்ளார்கள். (கஷ்புல் கபா வமுஸீலுல் அல்பாஸ்...)3

 

عَنْ أَبِي ذَرٍّ فِي حَدِيثِهِ الطَّوِيلِ فِي ذِكْرِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ قَالَ فِيهِ: «. مِنْهُمْ أَرْبَعَةٌ مِنَ الْعَرَبِ ; هُودٌ، وَصَالِحٌ، وَشُعَيْبٌ، وَنَبِيُّكَ يَا أَبَا ذَرٍّ»         (صحيح ابن حبان:361)

நபிமார்களில் ஹூத் ஸாலிஹ், ஷுஐப், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (அலைஹிமிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) ஆகிய நான்கு நபிமார்கள் அரபியர்களாக இருந்தனர். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்:361) இது அரபு மொழிக்கு மேலும் கண்ணியத்தையும் மாண்பையும் சேர்க்கின்றது.

அரபு மொழியின் மாண்புகளை உணர்த்தும் ஸஹாபாக்கள், அறிஞர்களின் கருத்துக்கள்

அரபு மொழியின் மாண்புகளை ஸஹாபாக்கள் மற்றும் பல இமாம்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

وقال عمر بن الخطاب رضي الله عنه:  تعلموا العربية فإنها في دينكم.    (السنن الكبرى: 2274)

உமர் பின் அல்-கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் “அரபி மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் மார்க்கத்தில் உள்ளதாகும். (சுனனுல் குப்றா: 2274)

 

وقال الإمام الشافعي: اللسان الذي اختاره الله عز وجل لسان العرب فأنزل به كتابه العزيز، وجعله لسان خاتم أنبيائه محمد -صلى الله عليه وسلم- ولهذا فينبغي لكل أحد يقدر على تعلم العربية    (الرسالة:48)

இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹு தஆலாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி அரேபியர்களின் மொழியாகும். அல்லாஹு தஆலா தனது வேதமான அல்-குர்ஆனை அரபு மொழியிலே இறக்கியுள்ளான். அவ்வாறே முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மொழியாகவும் அதனை ஆக்கினான். எனவே, அரபு மொழியைக் கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் முக்கியமானதாகும்.” (அர்-ரிஸாலாஹ்: 48)

 

وقال ابن تيمية رحمه الله: (فإن اللسان العربي شعار الإسلام وأهله.   (اقتضاء الصراط المستقيم، ص 203) 

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களும் “அரபு மொழி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களினதும் அடையாளச் சின்னமாகும்” என்று கூறுகின்றார்கள். (இக்திளாஉ அஸ்-ஸிராத்தில் முஸ்தகிம்).

 

وقال ابن القيم الجوزية رحمه الله:  وإنما يعرف فضل القرآن مَنْ عرف كلام العرب.     (الفوائد المشوق إلى علوم القرآن وعلم البيان)

இமாம் இப்னுல் கைய்யூம் அல்-ஜவ்ஸியா ரஹிமஹுல்லாஹ் அவர்களும் “அரபு மொழியை அறிந்தவருக்கு மட்டுமே அல்-குர்ஆனின் மாண்புகள் மிக ஆழமாக புரியும்” என்று கூறுகின்றார்கள். (அல்-ஃபவாயித் அல்-முஷவ்விக் இலா உலூமில் குர்ஆன்)

மேற்குறித்த அறிஞர்களின் கருத்துக்களை உற்று நோக்குகையில் அரபு மொழிக்கு எவ்வளவு முக்கியத்துவமும் மாண்புகளும் உள்ளன என்பது தெளிவாகின்றது.

இது தவிர அரபு மொழி ஒரு செழுமை மிக்க மொழியாகும். சொற் சுருக்கம், கருத்துச் செறிவு, போன்றன அரபு மொழியின் சிறப்பம்சங்களாகும். அரபு இலக்கணத்தில் ஒருமை, பன்மை போல் இருமையும் பயன்படுத்தப்படுகின்றது. அறிவுக் கலாசாரத்தை ஊக்குவிப்பதிலும் அறிவியலை முழு உலகிற்கும் பரவச்செய்வதிலும் அரபு மொழியின் பங்கு காத்திரமானது.

அரபு மொழிக்கும் இலங்கைத் திரு நாட்டுக்குமிடையிலான தொடர்பு

வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, இலங்கையில் இஸ்லாம் வருவதற்கு முன்பிலிருந்தே அரபு மொழிக்கும் இலங்கைத் திருநாட்டுக்குமிடையிலான தொடர்பு, கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடமாக இருந்து வருகின்றது. பண்டைய அரேபிய வர்த்தகர்கள் சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் கரையோர நகரங்களில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சீன, பாரசீக, கிரேக்க, ரோமானிய வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரபல அரசியல்வாதி சுந்தரலிங்கம் இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டு கால வரலாறு இலங்கைக்கும் அரேபியர்களுக்குமிடையில் உள்ளது என தனது “சன்” எனும் ஆங்கில பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

அரபு மொழியின் மேம்பாட்டிற்கு இலங்கை மத்ரஸாக்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளின் வகிபாகங்கள்

இலங்கையின் பழைமையான பல்கலைக்கழகமான பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு, இஸ்லாமிய நாகரிகத் துறை ஒன்றுள்ளது. அத்தோடு கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் அரபுத் துறை மற்றும் இஸ்லாமிய கற்கைகள் துறை என இரண்டு தனித்தனியான திணைக்களங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவ்வாறே கொழும்பு பல்கலைக்கழகம் அரபு, இஸ்லாமிய நாகரிகத் துறையில் தனியான ஒரு அலகைக் கொண்டுள்ளது.

மேலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிக்கான பீடமொன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளமை விஷேட அம்சமாகும். இப்பீடத்தில் அரபு மொழித் துறைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தனியாக மாணவர்கள் உள்வாங்கப்படுவதோடு அங்கு பொதுக் கலை பட்டமும் இரண்டு விசேட கலைப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டளவில் தென்னிலங்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தலைமையில் அரபு மொழியிலான இஸ்லாமிய சமயக் கல்விப் போதனைகள் மத்ரஸா மட்டத்தில் துவக்கிவைக்கப்பட்டன. மத்ரஸாக்களில் அரபு மொழி தனியான ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. அரபு மொழிக்கான மத்ரஸாக்களின் பங்களிப்புக்களும் ஏராளமானவையாகும்.

1969ஆம் ஆண்டளவில் அரபு மொழித்துறையில் இஸ்லாமிய நாகரிகம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரபு மொழி உள்நாட்டு பாடவிதானத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அரபு மொழியை கற்பதன் பயன்கள்

• முஸ்லிம்கள் அல்-குர்ஆனையும் அல்-ஹதீஸையும் புரிந்து கொள்வதற்கும் தொழுகைகளை உயிரோட்டமாக அமைத்துக் கொள்வதற்கும் அன்றாட வணக்க வழிபாடுகளை பொருளுணர்ந்து நிறைவேற்றுவதற்கும் அரபு மொழியைக் கற்றுக் கொள்வது இன்றியமையாததாகும்.

• இன்றைய அரபுலகம் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக முன்னேறுவதை உலகம் கண்கூடாகக் காண்கிறது. எமது நாட்டிலும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத துறைசார்ந்தவர்கள் அரபு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு முனைவதனூடாக அரபுலகின் சிந்தனைக் கருவூலங்களைப் படித்து எமது நாட்டின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்ய முடியும்.

• மத, கலாசார பன்முகத்தன்மையை மதித்து செயற்பட்டு மானுடத்திற்கு பங்காற்றுவதற்கு அரபு மொழியை கற்பது பிரயோசனமானதாகும்.

 

முடிவுரை

எனவே, இஸ்லாத்தின் அடிப்படை மூலதாரங்களின் மொழியான அரபு மொழியை கற்றுக்கொள்வதுடன் அதை மக்கள் மயப்படுத்துவோம். இலங்கையிலுள்ள அரபு நாட்டுத் தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர உறவைப் பேணும் நிறுவனங்கள் ஊடாக அரபு மொழியை மேம்படுத்துவதற்காக முயற்சிகளை முன்னெடுப்போம். மற்றும் அரச பாடசாலைகளின் பாட விதானத்தில் இணைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மொழிகளில் ஒன்றான அரபு மொழியை எமது மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்வோம்.

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு தஆலா அரபு மொழியின் மாண்புகளை விளங்கி அம்மொழியைக் உரியவர்களிமிருந்து கற்று பயன்பெற எம்மனைவருக்கும் தௌபீக் செய்வானாக!

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் நாகூர் ளரீப்
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

---------------------------------------------------------------------------------------------

[1] قوله و"يُقَالُ:إِنَّ هُودًا  أَوَّلُ مَنْ تَكَلَّمَ بِالْعَرَبِيَّةِ. وَزَعَمَ وَهْبُ بْنُ مُنَبِّهٍ أَنَّ أَبَاهُ أَوَّلُ مَنْ تَكَلَّمَ بِهَا.  وَقَالَ غَيْرُهُ أَوَّلُ مَنْ تَكَلَّمَ بِهَا نُوحٌ. وَقِيلَ آدَمُ وَهُوَ الْأَشْبَهُ. وَقِيلَ: غَيْرُ ذَلِكَ، وَاللَّهُ أَعْلَمُ. وَكَانَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَوَّلَ مَنْ تَكَلَّمَ بِالْعَرَبِيَّةِ الْفَصِيحَةِ الْبَلِيغَةِ، وَكَانَ قَدْ أَخَذَ كَلَامَ الْعَرَبِ مِنْ جُرْهُمَ الَّذِينَ نَزَلُوا عِنْدَ أُمِّهِ هَاجَرَ بِالْحَرَمِ.   ( البداية والنهاية )

 

[2]. يُقَالُ لِلْعَرَبِ الَّذِينَ كَانُوا قَبْلَ إِسْمَاعِيلَ : الْعَرَبُ الْعَارِبَةُ. وَهُمْ قَبَائِلُ كَثِيرَةٌ مِنْهُمْ ; عَادٌ، وَثَمُودُ، وَجُرْهُمُ، وَطَسْمٌ، وَجَدِيسُ، وَأَمِيمُ، وَمَدْيَنُ، وَعِمْلَاقُ، وَعَبِيلٌ، وَجَاسِمٌ، وَقَحْطَانُ، وَبَنُو يَقْطُنَ، وَغَيْرُهُمْ . وَأَمَّا الْعَرَبُ الْمُسْتَعْرِبَةُ فَهُمْ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ الْخَلِيلِ،   (البداية والنهاية)

 

[3] قال إسماعيل بن محمد العجلوني الجراحي (المتوفى: 1162هـ) وقد وردت أخبار كثيرة في حب العرب يصير الحديث بمجموعها حسنا، وقد أفردها بالتأليف جماعة منهم الحافظ العراقي ومنهم صديقنا الكامل السيد مصطفى البكري لا زالت علينا عوائد الأفضال تجري   (كشف الخفاء ومزيل الإلباس عما اشتهر من الأحاديث على ألسنة الناس)

Last modified onவியாழக் கிழமை, 21 டிசம்பர் 2023 06:45

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.