ACJU/NGS/2023/186
2023.09.18 (1445.03.02)
கலாநிதி. ரொஹான் குணரத்ன,
அண்மையில் தங்களால் வெளியிடப்பட்ட மேற்சொன்ன நூல் தொடர்பாக எமது அதிருப்தியையும் அதிலுள்ள போலியான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எமது மறுப்பையும் இக்கடிதம் மூலம் நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களது இந்த நூலில் ஆதாரபூர்வமற்ற, ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஏராளமான கூற்றுக்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான அதிகாரபூர்மில்லாத, போதுமான தெளிவில்லாத, அனுமானத்தின் அடிப்படையிலான கூற்றுக்களை தங்களுடைய நூலுக்கு ஆதார மேற்கோள்களாகக் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது கண்டனத்துக்குரியது.
அந்தவகையில் தங்களுடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான, கள சூழ்நிலைகளுக்கு முரணான, திரிபுபடுத்தப்பட்ட ஒருசில பகுதிகளை இங்கு நாம் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம்.
ஆரம்பமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது இஸ்லாமிய மார்க்க ரீதியான வழிகாட்டல்களை வழங்கக்கூடிய ஒரு சபையே அன்றி சட்டத்தை அமுல்படுத்தக்கூடிய அதிகாரம் படைத்த ஒரு நிறுவனம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
01) 60 ஆவது பக்கம்: 'அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மத விவகாரங்களை நாளாந்தம் மூலோபாய ரீதியாக நெறிப்படுத்தவில்லை'
சமூகத்தில் சில காலப்பகுதிகளில் இடம்பெற்ற சமூக மற்றும் மார்க்க ரீதியாக சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தே இக்கூற்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிகழ்வுகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் அதுசார்ந்து சட்டமுலாக்கம் செய்யக்கூடிய நிறுவனங்களுக்குமே உண்டு. மாறாக அது, ஜம்இய்யாவின் பொறுப்பு அல்ல. இஸ்லாமிய மார்க்க சபை என்ற அடிப்படையில் நமது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் காலத்துக்குக் காலம் தேவையான வழிகாட்டல்களை நாம் வழங்கிவருகிறோம்.
02) 203 ஆவது பக்கம்:
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கமிடையில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிஸம்பர் மாதத்தில் நடiபெற்ற கலந்துரையாடலில் அதிகமாக தீவிரமயமாக்கல் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டது.
அதே பக்கத்தில் அக்கூற்றுக்கு முன்னாள் உள்ள கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'சிறிசேன நிர்வாகத்திற்கோ அல்லது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கோ குறித்த நிலைமையின் தீவிரத்தை போதுமானளவு புரிந்துகொள்வதற்கு தேவையான அதிநவீன நிபுனர்களைக் கொண்ட குழுவொன்று இருந்ததாகத் தெரியவில்லை.'
இங்கு மத வழிகாட்டுதலை வழங்குவதற்கும் தீவிரமயமாக்கல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அடையாளம் காணத் தவறிவிட்டீர்கள் என்பது கவனிப்புக்குரியது. ஆனால் அதற்கு முந்தைய பக்கத்தில் கூறப்பட்ட, குறித்த நிலைமையினை புரிந்துகொள்கின்ற அறிவு, நிபுனத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றைக் கோரும் பகுதியானது எமது அதிகாரத்துக்கு உட்பட்டவை அல்ல.
மேலும் இப்புத்தகத்தில் நீங்கள், மத அமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள செயல்பாடுகள், அதிகாரம், கடமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை வரையறுக்கத் தவறிவிட்டீர்கள். இதில் பல இடங்களில் இதுபோன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள தரப்பினருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலையிடவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. என்றாலும் இது காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மார்க்க ரீதியாக இதில் சம்பந்தப்படுவதாயின் இவ்விடயத்தில் அதனை தலையிடும்படி அரசே வேண்டிக்கொள்ள வேண்டும். மாறாக ஜம்இய்யா தாமாக அதில் தலையிட முடியாது.
03) 191 ஆவது பக்கம்: 'சஹ்ரானை கைது செய்ய முஃப்தி ரிஸ்வி காவல்துறைக்கு உதவியிருக்கலாம்.'
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 2019 ஜனவரியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோவைச் சந்தித்து, சஹ்ரானின் வெறுப்புப் பேச்சுக்கான ஆதாரங்களை கையளித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என்பது அனைவரும் அறிந்த, மறுக்க முடியாத உண்மை. துரதிர்ஷ்டவசமாக, இந்த முறையீடு சில அறியப்படாத காரணங்களுக்காக அதிகாரிகளால் கவனிக்கப்படவில்லை.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் ஏனைய பிரஜைகளுக்குமிடையில் சகவாழ்வையும் சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக மேற்கொண்டு வருகின்ற பணிகளை பல சந்தர்ப்பங்களில் ஆதாரபூர்வமாக உங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இக்குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
அந்தவகையில் இதுதொடர்பாக ஜம்இய்யாவினால் வெளியிப்பட்ட ஊடக அறிக்கைகள், பிரகடனங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.
• 2013.03.06 – 'ஒற்றுமை மற்றும் சகவாழ்வுக்காக பிரார்த்திப்போம்'
• 2013.01.04 – 'அமைதி மற்றும் ஒற்றுமையைக் நிலைநாட்டுவதில் சமயத் தலைவர்களின் கடமைகள்'
• 2013.03.20 – 'புத்த பிக்குகள் மீதான தாக்குதலை ஜம்இய்யா கண்டிக்கிறது'
• 2013.07.08 - 'புத்தகயா தாக்குதல் - மிருகத்தனமானது மற்றும் மனிதாபிமானமற்றது'
• 2013.08.26 - 'எகிப்து மற்றும் சிரியா தாக்குதலை ஜம்இய்யா கண்டிக்கிறது'
• 2014.05.15 - 'கொந்தளிப்பான சூழ்நிலையின் போதான வழிகாட்டுதல்'
• 2014.06.10 - 'சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்கும் கருத்தரங்கு'
• 2014.07.06 – ISIS க்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று SLBC உரையில் முஸ்லிம் சமூகத்திற்கு ஜம்இய்யாவின் தலைவர் அறிவிப்பு.
• 2014.09.04 - 'ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கிறது'
• 2015.02.03 - 'ஐ.எஸ்.ஐ.எஸ் இனால் ஜப்பானிய பத்திரிகையாளர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை ஜம்இய்யா கண்டிக்கிறது'
• 2015.07.23 - இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றி முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்.
• 2015.11.16 - 'பாரிஸில் நடந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கிறது'
• 2016.11.11 - வெறுப்பு பேச்சு பற்றிய கூட்டு அறிக்கை
• 2016.11.21 - 'சகவாழ்வு நிலைநாட்டப்பட பிரார்த்தனை செய்வோம் '
• 2017.05.19 - 'சகவாழ்வு நிலைநாட்டப்பட பிரார்த்தனை செய்வோம் '
• 2018.03.26 - 'கண்டி சம்பவம் தொடர்பான சஹ்ரானின் காணொளிக்கு ஜம்இய்யா கண்டனம்'
• 2018.12.26 - 'புத்தர் சிலைகள் தாக்கப்பட்டதை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கிறது'
• 2019.01.02 - சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான சாட்சியங்களை கையளிப்பதற்காக பாதுகாப்புத்துறை உடன் சந்திப்பு.
• 2019.04.21 – 'கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதலை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கிறது'
• 2019.04.25 - ‘Sunday Mass க்கு ஆதரவளிப்போம்'
• 2019.05.02 - தற்கொலை குண்டுதாரிகளின் உடல்கள் தொடர்பான அறிவிப்பு
இது இவ்வாறிருக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை ஆதாரமற்ற, திரிபுபடுத்தும் கருத்துகளால் குற்றம்சாட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எனவே உங்களுடைய இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்து, பிழைகளைத் திருத்தி, ஆதாரபூர்வமான உண்மைகளுடன் மீண்டும் வெளியிடுமாறும் உண்மையான தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா