இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

அக் 12, 2023

ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு 

 

ACJU/NGS/2023/251

2023.10.12 (1445.03.26)

 

கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு,

 

எதிர்வரும் 2023.10.13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தை 'வக்ப் சொத்துக்களைப் பாதுகாப்போம்' எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.

 

 

வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாப்போம். உலகில் இரண்டாவதாக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித், மஸ்ஜிதுல் அக்ஸாவாகும்.

ஒருவர் தனக்கு சொந்தமான பொருளாதாரத்தை அவரது விருப்பத்துடன் இறை பாதையில் செலவழிப்பதை இஸ்லாம் ஆர்வமூட்டியுள்ளது. அதற்காக வேண்டி, ஹத்யா கொடுத்தல், ஸக்காத் வழங்கல், ஸதகா வழங்கல், வஸிய்யத் செய்தல், வாரிசுரிமைப் பகிர்வு, நேர்ச்சை செய்தல், வக்ஃப் செய்தல் போன்ற இன்னோரன்ன அமல்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹதிய்யா என்பது ஒரு பொருளை அல்லது பணத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அன்பு மற்றும் கௌரவத்திற்காக எந்தவித கோரிக்கை மற்றும் நிபந்தனையின்றி வழங்குவதாகும்.

ஸக்காத் என்பது கட்டாயமான ஒரு வணக்கமாகும். ஸக்காத் கொடுக்க கடமையானவர் கடமையாகிய சமயத்தில் கடமையான பொருளில் இருந்து குறிப்பிட்ட ஸக்காத் பங்கை, பெறுமதியை வேறாக்கி அதனை ஸக்காத் பெற தகுதியானவர்களுக்கு உரிய முறைப்படி வழங்கிவிட வேண்டும்.

ஸதகா என்பது ஒருவர் அல்லாஹ்வுக்காக வேண்டி ஏழைகள் மற்றும் தேவையுடையோர்களுக்கு வழங்குவதாகும்.

வஸிய்யத் என்பது ஒருவர் தனது சொத்தில் இருந்து ஒரு பகுதியை மௌத்திற்குப் பின்னால் கொடுப்பதாக கூறிவைத்தலாகும். தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதிவரை வஸிய்யத் செய்யலாம். அதை விடவும் அதிகமாக செய்வதாக இருந்தால் அனந்தரக்காரர்களின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். அனந்தரக்காரர்களுக்கு வஸிய்யத் செய்வது முடியாது. அவ்வாறாயின் பிற அனந்தரக்காரர்களின் அனுமதியை பெறல் வேண்டும்.

வாரிசுரிமை சட்டம் என்பது ஒருவர் மரணித்த பின்னர் அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை அவரது உயிருடன் உள்ள வாரிசுகளுக்கு மத்தியில் பிரித்துக் கொடுப்பதாகும்.

நேர்ச்சை என்பது ஒருவர் அல்லாஹ்விடம் தனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் தனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகின்றேன் அல்லது நோன்பு நோற்கின்றேன் அல்லது ஒரு தொகைப்பணத்தை தர்மம் செய்கின்றேன் என்ற வார்த்தைகளைக் கொண்டு கூறும் ஒர் அமலாகும். எந்த விடயத்திற்காக நேர்ச்சை வைத்தாரோ அந்த விடயம் நடைபெற்றால் அவரது நேர்ச்சையை நிறைவேற்றுவது கட்டாயமாகும்.

அவ்வாறே 'வக்ஃப்' என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு நிரந்தர தர்ம காரியமாகும். இது அல்லாஹு தஆலாவினாலும் நபியவர்களினாலும் ஆர்வமூட்டப்பட்ட ஒரு வணக்கமாகும்.

இக்காரியத்தை யார் செய்கின்றாரோ அதன் மூலம் பிரயோசனம் பெறப்படும் காலமெல்லாம் அவருக்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

عن جَابِرَ بْنَ عَبْدِ الله رضي الله عنهما، يَقُولُ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمِّ مَعْبَدٍ حَائِطًا، فَقَالَ: (يَا أُمَّ مَعْبَدٍ، مَنْ غَرَسَ هَذَا النَّخْلَ؟ أَمُسْلِمٌ أَمْ كَافِرٌ؟» فَقَالَتْ: بَلْ مُسْلِمٌ، قَالَ: «فَلَا يَغْرِسُ الْمُسْلِمُ غَرْسًا، فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ، وَلَا دَابَّةٌ، وَلَا طَيْرٌ، إِلَّا كَانَ لَهُ صَدَقَةً إِلَى يَوْمِ الْقِيَامَةِ)، (صحيح مسلم: (1552

(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு மஃபத் ரழியல்லாஹு அன்ஹா அவர்களது பேரீச்சந்தோப்புக்குச் சென்றார்கள். அவர்களிடம், 'உம்மு மஃபதே! இந்தப் பேரீத்தமரங்களை நட்டி வைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறை மறுப்பாளனா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இல்லை, ஒரு முஸ்லிம் தான் (நட்டு வைத்தார்)' என்று விடையளித்தார். (அப்போது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'முஸ்லிம் ஒரு மரத்தை நட்டி வைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு கால்நடையோ அல்லது ஒரு பறவையோ உண்டால், மறுமைநாள் வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்' என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (ஸஹீஹு முஸ்லிம்: 1552)

வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.

ஒரு தடவை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் யாரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹு! அலைஹி வஸல்லம் இதுவரை எனக்குக் கிடைத்திராத மிகவும் பெறுமதியான சொத்தை கைபரில் பெற்றுக் கொண்டேன். அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீங்கள் விரும்பினால் அது விற்கப்படவோ நன்கொடையாக வழங்கப்பட அனந்தரமாக்கப்படவோ முடியாத ஸதகாவாக வக்ப் செய்து விடுங்கள் என்று கூறினார்கள்.

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமைகளுக்கும், போராளிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் வக்ஃப் செய்தார்கள். ( சஹீஹுல் புகாரி - 2737)

ஒருவர் ஒரு பொருளை அல்லது ஓர் இடத்தை வக்ஃபு செய்துவிட்டால் அது அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாக மாறிவிடும். மேலும், அவர் குறிப்பிடும் சகல நிபந்தனைகளும், குர்ஆன் ஹதீஸ்களின் வார்த்தைகளை மாற்ற முடியாதது போன்று, எவ்வித மாற்றமும் இன்றிப் பின்பற்றப்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு விதி வக்ஃப் சட்டங்கள் விடயத்தில் உள்ளது.


ஒரு நோக்கத்துக்காக வக்ஃப் செய்யப்பட்ட பொருளை, இன்னும் ஒரு தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றி இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.


வக்ஃப் செய்யப்பட்ட பொருளை அதன் அடிப்படைத் தோற்றத்திலிருந்து மாற்றுவது கூடாது. அதாவது, வீடாக வக்ப் செய்யப்பட்டதைத் தோட்டமாகவோ அல்லது குளியலறையாகவோ அல்லது தோட்டமாக வக்ஃப் செய்யப்பட்டதை வீடாகவோ மாற்றுவது கூடாததாகும். ஆனால், வக்ஃப் செய்தவர் வக்ஃப் செய்யும் பொழுது, வக்ஃபை கண்காணிப்பவர் தேவையைக் கருதி பயன்படுத்த முடியும் என்று கூறினால் மாத்திரம் தேவைக்கேற்ப அதை மாற்றிக் கொள்ளலாம்.'


எனவே, வக்ஃப் செய்யப்பட்ட பொருளை அல்லது இடத்தை வக்ஃப் செய்யப்பட்ட நோக்கத்துக்காவே பயன்படுத்த வேண்டும். அந்நோக்கத்திற்கு மாற்றமாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதோ அல்லது அதை எவ்விதச் செயற்பாடும் இன்றிப் பாழாக்குவதோ கூடாது.


வக்ஃப் என்ற அமலை மஸ்ஜித், மத்ரஸா, பாடசாலை, அடக்கஸ்தலம், வைத்தியசாலை, உள்ளிட்டவைகளுக்காக செய்ய முடியும்
மஸ்ஜிதுக்காகக் காணியை வக்ஃப் செய்தல்.


அல்லாஹ்வால் விரும்பப்படும் உலகின் மிகச் சிறந்த இடம் அவனது மஸ்ஜித்கள் என்று அழைக்கப்படும் இறை இல்லங்களாகும்.

 

பொதுவாக எமது முன்னோர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், முதன் முதலில் அங்கே பள்ளிவாசல் ஏதேனும் இருக்கின்றதா என்றுதான் பார்ப்பார்கள். இல்லையெனில் தங்களுக்கென்றொரு வீட்டைக் கட்டுவதை விட பள்ளிவாசலைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். இதற்குச் சான்றாக எமது முன்மாதிரித் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சம்பவம் ஹதீஸ் நூட்களில் கூறப்பட்டிருக்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்ததும் தமக்கென்று தங்குவதற்கான வீட்டைக் கட்டுவதற்கு முன்னதாக முதலில் மஸ்ஜிதுல் குபாவை நிறுவி அதனை வக்ஃப் செய்து விட்டு இரண்டாவது மதினாவுக்கு சமுகமளித்து பனூ நஜ்ஜார் குலத்தினரிடமிருந்து ஒரு காணியைக் பெற்று அதில் மஸ்ஜிதுந் நபவியை நிறுவி வக்ஃப் செய்தார்கள். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.


عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ: يا بني النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا؟ قَالُوا : لا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ. (صحيح البخاري: 2198 இكتاب الوصاياஇ باب إذاقال الواقف لانطلب ثمنه إلا إلى الله فهو جائز)


அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் பனுன் நஜ்ஜார் குலத்தினர் அளித்த இடத்தில் மஸ்ஜித் கட்டும்படி உத்திரவிட்டபோது, 'பனுன் நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஹதீஸ்: 2198)


அன்று முதல் இன்று வரை இன்னும் மறுமை நாள் வரை மஸ்ஜிதுன் நபவியில் தொழும் கோடான கோடி மக்களின் நன்மைகள் இந்த வக்ஃபுக்கு யார் யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு கிடைக்கின்றன.


மஸ்ஜித், மத்ரஸா, பாடசாலை, அடக்கஸ்தளம், வைத்தியசாலை, உள்ளிட்டவைகளுக்காகக் காணியை வக்ஃப் செய்தல்
பொதுச் சேவைகளுக்கான காணிகள் தேவைப்படும் நேரத்தில் அவற்றுக்காகவும் வக்ஃப் செய்யலாம்.

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رضي الله عنه أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْمِرُهُ فِيهَا ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالَا قَطُّ أَنفُسَ عِنْدِي مِنْهُ ، فَمَا تَأْمُرُني بِهِ ؟ قَالَ: إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا ، وَتَصَدَّقْتَ بِهَا قَالَ: فَتَصَدَّقَ بهَا عُمَرُ أَنَّهُ لا يُبَاعُ ، وَلا يُوْهَبُ ، وَلا يُورَثُ ، وَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ ، وَفِي الْقُرْبَى ، وَفِي الرِّقَابِ ، وَفِي سَبِيلِ اللَّهِ ، وَابْنِ السَّبِيلِ ، وَالضَّيْفِ ، لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيهَا أَنْ يَأْكُل مِنْهَا بِالْمَعْرُوفِ ، وَيُطْعِمُ غَيْرَ مُتَمَوّلٍ ، قَالَ: فَحَدَّثْتُ بِهِ ابْنَ سِيرِينَ இ فَقَالَ: غَيْرَ مُتأَتِّلٍ مَالا (صحيح البخاري:2737)
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அது விடயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! 'நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீங்கள் விரும்பினால் அது விற்கப்படவோ, நன்கொடையாக வழங்கப்படவோ ,அனந்தரமாக்கப்படவோ முடியாத ஸதகாவாக வக்ஃசெய்து விடுங்கள் என்று கூறினார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமைகளுக்கும், போராளிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் வக்ப் செய்தார்கள். (நூல் : சஹீஹுல் புகாரி )2737)

அந்த வகையில் உலகில் முதல் முதலாக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமாகும். இரண்டாது முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவாகும். அதனை அடுத்து வக்ஃப் செய்யப்பட்டவகைள் மஸ்ஜிதுல் குபா மற்றும் மஸ்ஜிதுந் நபவி ஆகியவைகளாகும்.


எனவே, இவற்றை பாதுகாப்பது முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்.


• مسجد مكة هو أول وقف في الأرض، ثم بيت المقدس الوقف الثاني

عن أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلَ؟ قَالَ: «المَسْجِدُ الحَرَامُ» قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ «المَسْجِدُ الأَقْصَى» قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ: «أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الفَضْلَ فِيهِ» متفق عليه.


3366: அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ''அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள், ''அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) இறை யில்லம்' என்று பதிலளித்தார்கள். நான், ''பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள், ''(ஜெரூஸலத்தில் உள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா' என்று பதிலளித்தார்கள். நான், ''அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அவர்கள், ''நாற்பதாண்டுகள்' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது). பிறகு, ''நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது' என்று சொன்னார்கள். (புகாரி, முஸ்லிம: 3366)

• فالمسجدُ الأقصى أُسريَ بالنبيِّ -عليهِ الصلاة والسلام- إليهِ، وذلكَ قبلَ أنْ يُعرَجَ بهِ إلى السماءِ

قال اللهُ -جلَّ وعلا-: (سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِير) ஜالإسراء: 1ஸ؛ففلسْطينُ هيَ الأرضُ المباركةُ.. ففيها المسجدُ الأقصَى الذي باركَ اللهُ حَولَه.


(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம் நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல் இஸ்ராஃ: 01)

• بيت المقدس أرض المحشر والمنشر


عن ميمونة بنت سعد – رضي الله عنها – قالت: قلت يا رسول الله أفتنا في بيت المقدس، قال: أَرْضُ الْمَنْشَرِ، وَالْمَحْشَرِ، ائتُوهُ فَصَلُّوا فِيهِ، فَإِنَّ صَلَاةً فِيهِ كَأَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ...) وإسناد الحديث صحيح، ورجاله ثقات (أي الأرض التي يحشر الناس إليها عند قيام الساعة، ويبعثون بعد الموت)


மைமூனா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நான் நபி ஸல் அவர்களிடம். யாரஸுலல்லாஹ், பைத்துல் மக்திஸைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (இறுதி நாள் ஏற்படும் போது மக்கள் எழுப்பப்படும் பூமி, அங்கு சென்று தொழுது கொள்ளுங்கள். அங்கு ஒரு தொழுகையைத் தொழுவது ஏனைய இடங்களில் தொழும் 1000 தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.


• لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ


عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي هَذَا، وَالْمَسْجِدِ الْأَقْصَى. (متفق عليه)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது அபூ{ஹரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

கிணற்றை வக்ஃப் செய்தல்


ஸஹாபாக்கள் தங்களது காணிகளை வக்ஃப் செய்ததைப் போன்றே மனிதர்களுக்கு மிகவும் இன்றியமையாத கிணறுகளை வக்ஃப் செய்திருக்கிறார்கள்.


عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ رضي الله عنه أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ « الْمَاءُ ». قَالَ فَحَفَرَ بِرًا وَقَالَ هَذِهِ لأُمِّ سَعْدٍ) سنن أبي داود:1681)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ஸஅதின் தாயார் மரணித்து விட்டார் (அவருக்காக) எந்த ஸதகா செய்வது சிறந்தது? எது அதிகமாக நன்மைகளைப் பெற்றுத்தரும்? என்று கேட்கப்பட்டபோது 'தண்ணீர்' என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்டதும்) கிணறு தோண்டி 'இது உம்மு ஸஅத் அவர்களுக்காக' என்று கூறினார்கள். (சுனனு அபீதாவூத்: 1681)
தோட்டத்தை வக்ஃப் செய்தல்


அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ (3:92)


நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள் எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (3:92) என்ற வசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடம் வந்து அல்லாஹ் தன் வேதத்தில் நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள் என்று கூறுகின்றான். எனக்கு மிக விருப்பமான பீருஹா தோட்டத்தை அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் அறக்கொடையாகத் தந்து விடுகிறேன். என்று கூறினார்கள்.


வாகனத்தை வக்ஃப் செய்தல்:


பெரிய அளவில் ஒருவருக்கு வக்ஃப் செய்ய முடியவில்லை என்றாலும், தன்னிடம் இருக்கும் வாகனத்தைக் கொடுத்தாவது மார்க்கப் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.


இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது மனிதர் ஒருவரை ஏற்றி இறைவழியில் செல்வதற்காக தர்மம் செய்து அனுப்பி வைத்தார்கள். அந்த குதிரையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கொடுத்திருந்தார்கள்.


அந்த மனிதர் அதை விற்பதற்தாக (சந்தையில்) நிறுத்தி வைத்திருப்பதாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அந்த குதிரையைத் தாமே வாங்கிக் கொள்ள (அனுமதி) கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அதை நீங்கள் வாங்க வேண்டாம்; உங்கள் தருமத்தை ஒருபோதும் திரும்பப் பெற வேண்டாம் என்று கூறினார்கள் (ஸஹீஹுல் புகாரி: 2775)


வக்ஃபுடைய அமல் ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் காலங்களில் இருந்ததைப் போலவே அவர்களைப் பின்பற்றி வந்த தபஉத் தாபியீன்களின் காலத்திலும் இருந்திருக்கின்றது. எந்த அளவு ஆசையுடனும் ஆர்வத்துடனும் அவர்கள் வக்ஃப் செய்திருக்கின்றார்கள் என்பதற்கு கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களின் மனைவி (ரஹ்மதுல்லாஹி அலைஹா) ஹாஜிகள் தாகம் தீர்ப்பதற்காக அரஃபா, முஸ்தலிபாஃ மற்றும் மினா ஆகியவற்றைச் சூழ ஓர் ஆற்றை உருவாக்கியமை சான்றாக உள்ளது.


வக்ஃப் சொத்துக்களைப் பேணிப் பாதுகாப்பதுடன் அவற்றை முறையாக கையாளுதல்


எமது நாட்டிலும் நமது முன்னோர்கள் எதிர்கால சந்ததியினர்களுக்காக நல்ல பல பணிகளைச் செய்து விட்டே சென்றிருக்கிறார்கள். அத்தோடு நாட்டின் நாலா பாகங்களிலும் பல மஸ்ஜித்களை, அடக்கஸ்தளங்களை, பொதுக்காணிகளை வக்ஃப் செய்திருக்கின்றார்கள். அவற்றை முறையாக பாதுகாப்பதுடன் உலகில் இரண்டாவதாக வக்ஃப் செய்யப்பட்ட முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாப்பதும் அதன் விடுதலைக்காக பிரார்த்திப்பதும் நமது தலையாய கடமையாகும்.

அதே நேரம் அல்லாஹ்வுக்காக செய்யப்பட்ட வக்ஃப் சொத்துக்களை தவறான நோக்கத்தில் சுய இலாபத்திற்காக அதனை நிர்வகிப்பவர்கள் மற்றும் ஏனையோர்கள் பயன்படுத்துவது, கையாளுவது மற்றும் அபகரிப்பது பெரும் குற்றமாகும்.


ஒருவரது சொத்தை அவரது அனுமதியின்றி மற்றவர் சொந்தமாக்கிக் கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். அல்லாஹு தஆலா குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் 'உங்களது சொத்துக்களை உங்களுக்கு மத்தியில் அநியாயமாக உண்ண வேண்டாம்' (அல்-பகரா, வசனம் : 188)


'யார் ஒருவரது நிலத்தில் இருந்து ஒரு சாண் அளவேனும் அநியாயமாக கைப்பற்றுகின்றாரோ கியாமத் நாளில் அவரது கழுத்தில் ஏழு பூமிகளை வலயமாக அணிவிக்கப்படும்.' ( ஸஹீஹுல் புகாரி: 1610 )


தனிப்பட்ட ஒருவருடைய சொத்தை அபகரிப்பதன் விளைவு இவ்வாறெனில் வக்ஃப் சொத்துக்களை அபகரிப்பது அதை விட பாவமான செயலென்பதை யாரும் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் வக்ஃப் சொத்தின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. வக்ஃப் சொத்தை எடுப்பது அல்லாஹ்வின் சொத்தை எடுப்பதற்கு சமமாகும்.

அவ்வாறே வக்ஃப் சொத்துக்களை வாடகைக்கு விடும் போது அவற்றின் நலன்களைக் கருத்திற் கொள்ளுமாறும், நீண்ட காலங்களுக்கு வாடகைக்கு கொடுப்பதை தவிர்க்குமாறும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

எனவே, சமுதாயத்தின் தேவைகள் என்னென்ன என்பதனை கண்டறிந்து முறையான திட்டமிடலுடன் அவற்றைப் பூர்த்தி செய்வதற்காக நாம் வக்ஃப் செய்தோமென்றால் அல்லாஹு தஆலாவுடைய உதவியால் சமூகத்தில் உள்ள பல பிரச்சினைகளை குறைக்க முடியும்.


நற்கருமங்களை செய்வதற்குரிய ஆர்வத்தையும், பௌதீக வளத்தையும் அல்லாஹு தஆலா நமக்கு வழங்கி எமது நல்லமல்களையும் ஏற்றுக் கொள்வானாக!

 

 

அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீப்  
செயலாளர் - ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Last modified onவெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2023 08:31

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.