ACJU/NGS/2023/215
2023.09.21 (1445.03.05)
சாந்தி, சமாதானம், அமைதி என்பன இஸ்லாத்தோடு பின்னிப்பிணைந்த விடயங்களாகும். ஏனெனில் இஸ்லாம் என்ற வார்த்தை அந்தக் கருத்துக்களையே தருகின்றது. அதனால்தான் இஸ்லாம் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து வரலாறு நெடுகிலும் சாந்தி மார்க்கம் எனும் பெயரில் சிலாகித்துப் பேசப்பட்டிருக்கிறது. அல்லாஹு தஆலாவும் இஸ்லாத்தினை 'தாருஸ் ஸலாம்', அதாவது அமைதியின் இல்லம் என்றே அல்குர்ஆனில் வர்ணித்திருக்கிறான். (பார்க்க - ஸூறா யூனுஸ் : 25)
அமைதியும் சமாதானமும் பொதுவாக தற்கால உலகில் அவசியம் தேவையான விடயங்களாக காணப்படுகின்றன. குடும்பம், சமூகம், தேசியம், சர்வதேசம் என்ற ரீதியில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த முனனர் ஒவ்வொரு தனிமனிதனிடத்திலும் அமைதியான, பக்குவப்பட்ட ஒரு மனநிலை இருத்தல் அவசியமானதாகும். அப்படியான ஒரு மனிதனால்தான் அவன் வாழும் சூழலில் அமைதியை ஏற்படுத்த முடியும். அந்த உயர்நிலைக்கு மனிதனை இட்டுச்செல்லும் பணியினைத்தான் இஸ்லாமிய போதனைகளும் நம்பிக்கைகளும் வணக்கங்களும் மேற்கொள்கின்றன. அல்லாஹு தஆலா கூறியுள்ளான்.
"இறைவனை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன." (ஸூறா அர்-ரஃத் : 28)
அமைதியை பூமியில் நிலைநாட்டுவதே இஸ்லாத்தின் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகும். அல்லாஹு தஆலா குடும்பவாழ்வு முறையை ஏற்படுத்தித் தந்திருப்பது கூட எம்மிடம் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் அமைதி ஏற்படவேண்டும் என்பதற்காகவே என்று அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"நீங்கள் மன நிம்மதி பெறவேண்டும் என்பதற்காகவே உங்களிலிருந்தே அவன் உங்களுக்கான துணையைப் படைத்தான்." (ஸூறா ரூம் : 21)
பல தலைமுறைகளாக யுத்தங்களிலேயே மூழ்கியிருந்த அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்களை தங்களுக்குள் இருந்த பகைமைகளைக் களைந்து ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல ஒற்றுமையாக்கி அவர்களது பிரதேசத்தில் அமைதியும் அபிவிருத்தியும் நிலவ இஸ்லாத்தின் போதனைகள்தான் காரணமாக அமைந்தன.
இருதரப்பினரிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை தீர்த்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி ஒற்றுமையாக்கி வைப்பதே அல்குர்ஆனின் போதனையாக இருக்கிறது. (பார்க்க : ஸூறா அல்ஹுஜ்ராத் : 09)
தாம் வாழும் சமூக சூழலில் அமைதியை நிலைநாட்டுவதும், அதனை பரவச் செய்வதும் மார்க்கத்தில் மிகச் சிறந்த செயல்களாகும். 'இஸ்லாத்தில் எது சிறந்தது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்ட சமயத்தில், (பசித்தோருக்கு) உணவளிப்பதும் அறிமுகமானவர்களுக்கும் அறிமுகமற்றவர்களுக்கும் ஸலாம் சொல்வதுமாகும் என்று கூறியிருக்கிறார்கள். (நூற்கள் : புஹாரி, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று சில காலங்களிலேயே மதீனா சாசனம் ஒன்றை எழுதினார்கள். சமாதானம், அமைதி, நியாயம், ஒவ்வொருவருக்கும் இஸ்லாம் அளித்திருக்கும் உரிமைகள் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக அந்த சாசனம் அமைந்திருந்தமை இஸ்லாம் போதிக்கும் சாந்தி, சமாதானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
அல்லாஹு தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து "அவர்கள் சமாதானத்தின்பால் திரும்பிவிட்டால் நீங்களும் அதன் பக்கம் திரும்பிவிடுங்கள்" என்பதாக பகைவர்கள் விடயத்தில் அல்குர்ஆனிலே வழிகாட்டியிருக்கிறான். இறைவன் எந்தளவிற்கு அமைதியையும் சாந்தியையும் ஊக்குவித்திருக்கிறான் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். (பார்க்க- ஸூறா அன்பால்: 61)
இஸ்லாம் இந்தளவிற்கு அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியிருக்கக் காரணம், பிறருடனான வெறுப்புணர்வே, சண்டைகளுக்கும் வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றமையாகும். சிறுகுழுக்கள், சமூகம், தேசியம் என்ற ரீதியில் வியாபித்து பெரும் யுத்தங்களாகவும் குழப்பங்களாகவும் மாற்றமடைய அதுவே வழிவகுக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையும் உலகில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் செப்டம்பர் 21ஆம் திகதியை உலக சமாதான தினமாக பிரகடனம் செய்து போர் நிலைமைகளை நிறுத்துவதற்கு வழிகோலியிருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தமது தாய்நாட்டுக்காக அல்லாஹு தஆலாவிடம் 'யா அல்லாஹ்! மக்காவாகிய இந்நகரத்தை அமைதியளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக!' என்று பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். நாமும் எமது தாய்நாட்டின் அமைதிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
இஸ்லாத்தின் இலக்குகளில் ஒன்றான சமாதானத்தை உலகில் நிலைநாட்ட அனைவரும் முன்வரவேண்டும். அதற்குத்தேவையான முயற்சிகளை மேற்கொள்ள யாரும் எக்காரணங்கொண்டும் பின் நிற்கக்கூடாது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஐ.நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சமாதான தினமான இன்றைய தினத்தில் அனைவரையும் வேண்டிக்கொள்கிறது.
அல்லாஹு தஆலா எம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்விலும், நாட்டிலும், முழு உலகத்திலும் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவானாக!
அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா