சமூக நீதி பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

பிப் 20, 2023

ACJU/NGS/2023/092

2023.02.20 (1444.07.28)

 

சமூக நீதி என்பது சமூகத்தில் வளங்கள், வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றின் சமமான பகிர்வைக் குறிக்கிறது. மேலும் சமூகங்களுக்கிடையில் பின்பற்றப்பட வேண்டிய நியாயம் என்று கூறப்படும்.


உலகில் சமூக நீதியை ஏற்படுத்துவதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியமாகும். இறையச்சத்துக்கும் சமூக, பொருளாதார நீதிக்குமிடையிலான இறுக்கமான தொடர்பை ஸுறா பகராவின் 177 ஆவது வசனம் தெளிவுபடுத்துகிறது. சமூகத்தில் வசதி வாய்ப்பும் பலமும் சக்தியும் படைத்தோர் பலவீனர்கள், வசதியற்றோர், வறுமையில் வாடுவோர், அநாதைகள் ஆகியோருக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் பங்களிக்க வேண்டும் என இவ்வசனம் வலியுறுத்துகிறது.


மேலும், 'முஃமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்)...' என்று அல்லாஹு தஆலா தனது திருமறையில் குறிப்பிடுகின்றான். (ஸுறா அந்நிஸா: 135)


எந்தவொரு மனிதனும் பசித்திருக்கவோ பட்டினியால் வாடவோ இஸ்லாம் இடமளிப்பதில்லை. அவர்களது உணவுக்கும் உடைமைக்கும் மானத்திற்கும் சம அந்தஸ்தையும் உரிமையையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.


'தைகிரீஸ் நதிக்கரையோரத்தில் ஒரு நாய் பட்டினியால் இறந்தாலும் அதற்கும் இறைவனிடம் பதில் சொல்லும் பொறுப்பு இந்த உமருக்கு உள்ளது' என்று இரண்டாவது கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய வாசகம், சமூக நீதியையும் காப்புறுதியையும் நிலைநாட்டுவதில் அதிகாரம், செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்களுக்கு எந்தளவு பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளது என்பதை உணர்த்துகிறது.


அதேபோன்று 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' எனும் கருத்தியல் இஸ்லாம் வலியுறுத்தும் சமூக நீதியின் மற்றுமொரு அடிப்படையாகும். நீதியில் யாருக்கும் சிறப்புரிமைகள் கிடையாது. எனும் தத்துவத்தை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளது.


ஒருமுறை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் சமூகத்தை நோக்கி, 'உங்களுக்கு முன்னைய சமூகங்களின் வீழச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றை நீங்கள் அறிவீர்களா? அவர்களில் வசதியும் செல்வாக்கும் படைத்த குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் திருடினால் அவர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டார். ஆனால் வசதியற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திருடினால் அவர் தண்டிக்கப்பட்டார். இறைவன் மீது ஆணையாகக் கூறுகின்றேன். முஹம்மதாகிய எனது புதல்வி பாத்திமா திருடினாலும் அவரது கரத்தை நான் துண்டித்து தண்டனை வழங்குவேன்' எனக் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)


ஒரு நாட்டின் மக்களுக்கிடையேயும் உலக நாடுகளுக்கிடையேயும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையிலும் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உயர்வு, சமூக ஒருங்கிணைப்பு என்பவற்றை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி உலக சமூக நீதி தினம் ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கப்படுகிறது.


சமூக மேலாதிக்க சிந்தனையற்ற, சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட மக்களாட்சியில் ஒற்றுமையும் இன ஒருமைப்பாடும் நீதிப்பகிர்வும் பாகுபாடற்ற மக்கள் நலனும் உறுதிசெய்யப்படுகிறது. அப்படியானதொரு முன்மாதிரி மிக்க தேசத்தை இந்நாட்டிலே நாம் கட்டியெழுப்புவோம். அல்லாஹு தஆலா எம்மனைவரையும் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நீதியையும் அறத்தையும் பின்பற்றக்கூடிய நடுநிலைச் சமுதாயமாக வாழ நல்லருள்பாலிப்பானாக.

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 22 பிப்ரவரி 2023 07:29

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.