சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

அக் 01, 2022

 

ACJU/NGS/2022/342
2022.09.21 (1444.02.24)

 

சிறுபராயம் என்பது இனிமையானதொரு பருவம். மனதில் எவ்விதப் பாரமும் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் முழுமையாக அனுபவிக்கக்கூடிய காலம். பொதுவாக ஒரு குழந்தை பருவமடையும் வரையிலான காலத்தை சிறுவர் பிராயம் என அடையாளப்படுத்தப்படுகிறது.


சிறுவர்கள் கள்ளங்கபடமற்ற, மென்மையான உள்ளங்களைக் கொண்டவர்கள். அவர்கள் வளரும் பயிர்கள். பிஞ்சு மொட்டுகள். அவர்களுடன் அன்பாகவும் கனிவாகவும் அரவணைப்போடும் நடநதுகொள்வது எம்மனைவரதும் கடமையாகும்.


'சிறுவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும் பெரியொர்களுக்கு மரியாதை செய்யாதவரும் எம்மைச் சார்ந்தவர் அல்லர்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதி)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவர்களுடன் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தார்கள். அவர்களை சந்திக்கும்போது ஸலாம் சொல்வார்கள். அவர்களுடன் அன்பாக உரையாடுவார்கள். அவர்களுக்கு துஆச் செய்வார்கள். முத்தமிடுவார்கள். அவர்களது குறும்புத்தனங்களை அங்கீகரிப்பார்கள். அவற்றை ரசிப்பார்கள். அவர்களோடு உரிமையுடன் நெருக்கமாகப் பழகுவதற்கு இடமளிப்பார்கள். அவர்களை முதுகில் ஏற்றி குதிரைச் சவாரி செய்து மகிழ்விப்பார்கள். அவர்களுடைய உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் இவை எல்லாவற்றுக்கும் ஏராளமான முன்மாதிரிகளும் அழகிய சம்பவங்களும் குவிந்து கிடக்கின்றன.


இஸ்லாம் மனிதர்களில் பலவீனர்களுக்கு கூடிய கவனம் செலுத்தியுள்ளது. குழந்தைப் பருவம் போலவே வயோதிகப் பருவமும் அதில் ஒன்று. அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.


'அல்லாஹ்தான் உங்களைப் பலவீனத்திலிருந்து படைத்தான். பின்பு அவனே பலவீனத்தின் பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பின்பு பலத்தின் பின்னர் பலவீனத்தையும் (முதுமையின்) நரையையும் அவன் ஏற்படுத்தினான்...' (ஸூறா அர்ரூம்: 54)


எமது வீடுகளிலுள்ள வயோதிகர்களை நாம் அன்போடும் கனிவோடும் பராமரிப்பதோடு அவர்களுடன் மரியாதையாக, கண்ணியமாக நடந்ததுகொள்ளவும் வேண்டும்.


குழந்தைகளும் சிறுவர்களும் எமது கண்குளிர்ச்சிகள் போலவே வயோதிகர்கள் எமக்கு கிடைத்த அனுபவங்கள். இருவருமே எமக்குக் கிடைத்த இறை அருள்களாகும்.


சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஐ.நா சபை ஒக்டோபர் 01 ஆம் திகதியை சர்வதேச சிறுவர்கள் தினமாகவும் அதேபான்று முதியோர்களைக் கொண்டாடும் வகையில் சர்வதேச முதியோர் தினமாகவும் இந்நாளை பிரகடனம் செய்துள்ளது.


இவ்வாண்டு சிறுவர் தினமானது, 'ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த எதிர்காலம்' எனும் தொனிப்பொருளிலும் முதியோர் தினமானது, 'மாறிவரும் உலகில் முதுதியோர்களின் பின்னடைவு' எனும் தொனிப்பொருளிலும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.


எமது சிறார்களது எதிர்காலம் வளமாக அமையவும் முதியோர்கள் ஆரோக்கியத்துடன் நல்வாழ்வு வாழவும் மேலும் எம்மனைவருக்கும் ஈருலக வெற்றி கிடைக்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.