மனிதாபிமானம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

ஆக 19, 2022

Ref: ACJU/NGS/2022/323

2022.08.19 (1444.01.20)


மனிதாபிமானம், (Humanity) ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கவேண்டிய அடிப்படைப் பண்பாகும். அது இஸ்லாம் வலியுறுத்துகின்ற மார்க்கப் பெறுமானங்களில் ஒன்று.


இஸ்லாம் தனிப்பண்புகளைக் கொண்ட ஓர் உன்னத மார்க்;கமாகும். அந்தவகையில் 'இன்ஸானிய்யா' என்பதற்கு மனிதன் சார்ந்தது எனப் பொருள்படுகின்றது. அல்லாஹுதஆலா வகுத்திருக்கின்ற இறைசட்டங்களை நோக்கும்போது அவை மனித நலன்களை, இயல்பு சுபாவங்களை, பலவீனங்களை கருத்திற் கொண்டிருப்பதைக் காணலாம்.


மனிதனில் இஸ்லாம் மனிதத்தையே காண்கிறது. மொழி, நிறம், இனம், நாடு என்பவற்றை வைத்து மனிதனை அது கூறுபோட முனைவதில்லை. சிந்தனையில், கொள்கையில் வேறுபட்டவனையும் அது மனிதனாகவே கணிக்கிறது. அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான். 'மனிதர்களே! உங்களை நாம் ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.'(சூரா ஹுஜுராத்: 13)


மேலும் 'மக்களிடம் பேசும் போது நல்லதைப் பேசுங்கள்' (சூரா பகரா: 83) என அல்குர்ஆன் உபதேசிக்கின்றது. எனவே மக்களிடம் அன்பாகவும் முகமலர்ச்சியோடும் அழகிய வார்த்தைகளைக் கொண்டும் உரையாடுவது மனிதநேயத்தின் பண்பாகும்.


இப்பின்புலத்திலிருந்தே மனிதனை ஒரு முஸ்லிம் பார்ப்பான். மனிதனில் அவன் மனிதத்தையே காண்பான். இனம், மதம், மொழி, தேசம், நிறம், அந்தஸ்து பாகுபாடு அவனிடம் காணப்படமாட்டாது.


அடுத்த மனிதர்களுடனான உறவில் மனிதத்தை, மானுடத்தன்மையை, மனிதாபிமானத்தை மார்க்கம் வலியுறுத்துகிறது. மனிதாபிமானம், உறவுகளுக்கு அடிப்படையாக அமையும் பிரதான பண்புகளில் ஒன்று.


முஸ்லிம்களோடு மாத்திரமல்லாமல் பிறமதத்தவர்களுடனும் மனிதத்தன்மையோடு, சகோதர வாஞ்சையோடு நடந்துகொள்ள வேண்டும் என மார்க்கம் உபதேசிக்கிறது.


இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மனித நேயத்திற்கான ஏராளமான உதாரணங்களை நாம் கண்டுகொள்ளலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முழு உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட மனித நேயத்தூதராவார்.


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் கொண்டுசெல்லப்பட்ட ஒரு யூதனின் பிரேதத்திற்காக அவர்கள் எழுந்துநின்றார்கள். 'ஏன் எழுந்தீர்கள், அது யூதனின் பிரேதமல்லவா?' என கேட்கப்பட்டபோது 'அதுவும் ஓர் ஆன்மாவே' என பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புஹாரி)


மனிதர்களோடு மாத்திரமின்றி உயிரினங்களிடத்திலும் அன்பாகவும் ஜீவ காருண்யத்தோடும் நடந்துகொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அது ஈமானுக்கு மிக நெருக்கமான பண்பாகும். சுவனம் செல்வதற்கும் அது காரணமாக அமைந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.


மனிதநேயப் பண்புகளில் ஈடுபடுகின்றவர்களை ஊபுக்கப்படுத்தியும் மானுடப்பண்பை வலியுறுத்தியும் ஐ.நா சபை ஆகஸ்ட் 19 ஆம் திகதியை சர்வதேச மனிதாபிமான தினமாக பிரகடனப்படுத்தியிருக்கிறது.

 

உலகளாவிய ரீதியில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற அனைத்து தனிமனிதர்கள், நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் அல்லாஹ் அருள் பாலிக்க வேண்டும் என்றும் அவர்களது மகத்தான பணியை அவன் பொருந்திக்கொண்டு தொடர்ந்தும் அவரகள் அப்பணிகளில் ஈடுபடுவதற்கான ஆரோக்கியத்தையும் மனப்பக்குவத்தையும் வழங்க வேண்டும் எனவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.    


மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச தூதுத்துவத்தை சுமந்த நாமும் மனிதாபிமானத்தோடும் மானுடத்தன்மையோடும் எமது செயல்பாடுகளை ஒழுங்கமைத்து நாட்டின் முன்மாதிரிமிக்க பிரஜைகளாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.

 

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022 06:00

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.