ACJU/NGS/2022/261
2022.08.12 (1444.01.13)
இளமைப்பருவம், மனித வாழ்க்கையின் மிகப் பெறுமதியான காலமாகும். குழந்தைப் பருவத்திற்கும் வயோதிகத்திற்கும் இடைப்பட்ட இப்பருவம் துடிப்பும் வேகமும் நிரம்பியது. எதையும் துணிந்து, முன்செல்லக்கூடிய தைரியமும் ஆர்வமும் கொண்டது.
அடக்குமுறை ஆட்சியாளனுக்கு முன்னால் சத்தியத்தை எடுத்துரைத்து தமது ஈமானைப் பாதுகாத்துக்கொள்வதற்காக குகையில் அடைக்;கலம் புகுந்த வாலிபர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
'அவர்களின் உண்மையான வரலாற்றை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். அவர்கள் தங்கள் இறைவனின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் முன்னேறச் செய்தோம்.' (கஹ்ப்: 13)
ஒருவர் தனது வாழ்வை இம்மைக்கும் மறுமைக்கும் பிரயோசனமாக அமைத்து, அர்த்தப்படுத்திக்கொள்ளவும் தனது ஆளுமையை, எதிர்கால சமூகத்தை வழிநடாத்துவதற்கான தலைமைப் பண்புகளை மற்றும் அதற்கான தகுதிவிதிகளை தயார்படுத்திக்கொள்வதற்குமான பொன்னான காலமாக இளமை காணப்படுகின்றது.
எனவேதான் மறுமை நாளில் இக்காலப்பிரிவு குறித்து விஷேசமாக விசாரிக்கப்பட இருக்கிறது. இளைஞர்களாகிய நாம் அதற்கு வகைசொல்ல எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
'மறுமை நாளில் ஐந்து விடயங்களைப் பற்றி வினவப்படும் வரை ஓர் அடியானின் கால் நகரமாட்டாது. அதில், ஆயுளை எவ்வாறு கழித்தாய் என்ற வினாவுடன் சேர்த்து குறிப்பாக இளமையை எவ்வாறு கழித்தாய் என்றும் வினவப்படும்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)
இஸ்லாமிய வரலாறு உட்பட உலக வரலாற்றில் மகத்தான சாதனைகளும் வெற்றிகளும் திருப்பங்களும் அதன் இளைஞர்களாலேயே சாத்தியமானது. இஸ்லாத்தின் ஆரம்பக்கட்டம் முதல் அதன் வரலாறு நெடுகிலும் வாலிபர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச்சூழ இருந்த இறையச்சமும் வீரமும் மிகுந்த இளம் ஸஹாபாக்களது வீரவரலாற்றினை நாம் இன்றும் படித்து வருகிறோம்.
எமது சமூகத்திலுள்ள இளைஞர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களைக் கொண்டாடுவதும் அவர்களது திறமைகள், ஆற்றல், ஆளுமைகளை மிகச்சரியாக இனங்கண்டு சமூகக் கட்டுருவாக்கல் பணியில் அவர்களை ஈடுபடுத்துவதும், சந்தர்ப்பங்களை வழங்குவதும் வழிநடாத்துவதும் சமூக நிறுவனங்கள் மற்றும் தலைமைகளின் பொறுப்பாகும்.
சமூகத் தளத்தில் இளைஞர்களின் பங்களிப்பை முன்னிறுத்தியும் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலும் ஐ.நா சபையானது ஆகஸ்ட் 12 ஆம் திகதியை சர்வதேச இளைஞர் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் வேலை திட்டங்களோடு நீங்களும் கைகோர்க்குமாறு ஜம்இய்யா அன்புடன் அழைப்பு விடுக்கிறது.
எனவே எதிர்கால சமூகத்தைத் தாங்கிப்பிடிக்கின்ற எமது இளைஞர்களின் அறிவு, ஆரோக்கியம், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் அல்லாஹ் அபிவிருத்தியையும் அதிகரிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் பொருத்தமாக தமது வாழ்வை ஒழுங்குபடுத்தி, நடுநிலை சிந்தனையோடும் மார்க்கம் பற்றிய விளக்கத்தோடும் சமூகம் மற்றும் தாய்நாட்டுக்குப் பங்களிப்புச் செய்யக்கூடியவர்களாகவும் சுவனத்தை இறுதி இலக்காகக் கொண்டு செயற்படவும் எமது பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா