ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் கைது சம்பந்தமாக ஜம்இய்யாவின் நிலைப்பாடு

ஆக 03, 2022

ACJU/NGS/2022/253

2022.08.03 (1444.01.04)


கடந்த காலங்களில் நமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் காரணமாக இந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும், அரசியல் முறைமையில் மாற்றத்தை வேண்டியும் முழு நாட்டிலும் பல மாதங்களாக ஜனநாயக விழுமியங்களுக்கேற்ப தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வந்தனர். இதன் விளைவாக அரசியல் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்று நாட்டுப் பிரஜைகள் எதிர்பார்ப்பதோடு, பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு சரியான தீர்வைப் பெறாததன் காரணமாக தொடர்ந்து போராடியும் வருகின்றனர்.


இந்நிலையில் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்று பௌத்த, கிறிஸ்தவ மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள், விசேட வைத்திய நிபுணர்கள், ஏராளமான சிவில், சமூக அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


தற்போது நமது நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர சர்வதேசத்தின் உதவியும் ஒத்துழைப்பும் மிக அவசியமாக இருக்கின்ற இந்நிலையில் ஜனநாயக விழுமியங்களுக்கு மாற்றமாக அரச அதிகாரிகள் செயற்படுவதன் காரணமாக சர்வதேசத்தின் உதவியையும், ஒத்துழைப்பையும் நாம் இழக்க நேரிடலாம்.


ஆகவே, இந்நாட்டின் அரச அதிகாரிகள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் ஜனநாயக விழுமியங்களையும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளையும் பேணி நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளுமாறும், இப்போராட்டத்திற்குக் காரணமாக இருக்கின்ற அனைத்து விடயங்களுக்கும் வெகு சீக்கிரமாக தீர்வு வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.


நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்நிலை அவசரமாக நீங்கி, நம் தாய்நாட்டுக்கும் முழு உலகுக்கும் சுபீட்சமும் அபிவிருத்தியும் ஏற்பட வேண்மென்றும், இந்நாட்டில் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் சிறப்பான இம்முஹர்ரம் மாதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிடம் நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.

 


அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவியாழக் கிழமை, 04 ஆகஸ்ட் 2022 04:39

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.