முஹர்ரம் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் முதல் மாதமாகும். இது குர்ஆனில் புனிதப்படுத்தப்பட்ட மாதங்கள்அல்-அஷ்ஹுருல் ஹுரும் என குறிப்பிடப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும்.
'நிச்சயமாக அல்லாஹு தஆலாவிடத்தில் அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை.' (அத்-தவ்பா : 36)
அபூ பக்ரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நிச்சயமாக காலம் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த அதன் (பழைய) நிலைக்கு சுற்றிவந்து சேர்ந்திருக்கிறது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதஹ், துல் ஹிஜ்ஜஹ் மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஃபான் மாதத்திற்கும் இடையேயுள்ள 'முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம் - 1679)
இம்மாதத்தை ஷஹ்ருல்லாஹ் (அல்லாஹ்வின் மாதம்) என அழைக்கப்படுவது போன்று அல்-அஸம் எனவும் அழைக்கப்படுகின்றது.
முஹர்ரம் மாதத்தின் தனித்துவமான சில விடயங்கள்:
முஹர்ரம் மாதத்தின் நோன்பு:
அபூ ஹுரைரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: பர்ளான தொழுகைக்குப் பின்னர் மிகச் சிறந்த தொழுகை எது எனவும் ரமழான் மாதத்தின் பின்னர் மிகச் சிறந்த நோன்பு எது எனவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது பர்ளான தொழுகைக்குப் பின்னர் மிகச் சிறந்த தொழுகை நடுநிசியில் தொழப்படும் தொழுகை எனவும் ரமழான் மாதத்தின் பின்னர் மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம்- 1163)
ஆஷூரா நோன்பு
முஹர்ரம் மாதம் ஒட்டுமொத்தமாக புனிதப்படுத்தப்பட்ட மாதமாக இருந்தாலும், முஹர்ரம் மாதத்தின் 10வது நாள் அதன் எல்லா நாட்களிலும் மிகவும் புனிதமானது. அன்றைய தினம் நோன்பு நோற்பது ஸுன்னத்தாகும். அதனையே 'ஆஷூரா' தின நோன்பு என்று சொல்லப்படுகின்றது. ஆஷூரா தினத்திலும் அதற்கு முந்தைய தினம் அல்லது அடுத்த தினத்தில் நோன்பு நோற்பதும் ஸுன்னத்தாகும்.
அபூ கதாதஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம் 1162)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?' என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்' என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம் - 1134)
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது கூட்டமும் பாதுகாக்கப்பட்ட நாள்
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். 'நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், 'இது ஒரு மகத்தான நாள் இந்த நாளில்தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்' என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உங்களைவிட நாங்களே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்' என்று கூறினார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள். (நூல்: ஸஹீஹு முஸ்லிம் - 1130)