ACJU/NGS/2022/246
2022.07.29 (29.12.1443)
மனித வாழ்க்கையை அர்த்தப்படுத்தி அழகுபடுத்தவே அல்லாஹுதஆலா உறவுகளைப் படைத்திருக்கிறான். உறவுகளே மனித வாழ்வின் ஆதார பலம். நட்பு, அவ்வாறான உறவுகளில் முக்கியமானதாகும். நட்பு, சினேகம், தோழமை என்பன எப்போதும் நெருக்கமான, ஆத்மார்த்தமான பிணைப்பைக் கொண்டது. எமது சிறுபிராயம் முதல் வயோதிகம் வரை வாழ்வின் அத்தனை பருவங்களிலும் அது தொடர்ந்து வருகிறது.
நட்புப் பாராட்டுதல் ஈமானுக்கு மிக நெருக்கமான ஓர் அம்சம். அல்லாஹ்வுக்காக நாம் ஒருவரை நேசிக்கும் போது எமது ஈமான் பூரணமடைகின்றது. அதுவே நாம் சுவனம் நுழைவதற்குக் காரணமாகவும் அமைந்துவிடுகிறது.
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாத வரை சுவனம் நுழையமாட்டீர்கள். பரஸ்பரம் நேசம் கொள்ளாதவரை ஈமான் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் விடயமொன்றை சொல்லித்தரட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்'. (அறிவிப்பவர்;: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிழலே இல்லாத மஹ்ஷர் மைதானத்தில் ஏழு பேருக்கு அல்லாஹ் அவனது அர்ஷின் நிழலை அளிக்கிறான். அவர்களில், அல்லாஹ்வுக்காக இணைந்து அல்லாஹ்வுக்காக பிரிந்து செல்கின்ற இரு நண்பர்களும் அடங்குவர். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி)
நட்பு, எமது வாழ்வில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. நல்ல நண்பனுக்கு கஸ்தூரி வியாபாரியையும் மோசமான நண்பனுக்கு இரும்புப் பட்டறையில் வேலை செய்பவனையும் நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள்.
எனவே நல்ல நண்பர்களைத் தெரிவு செய்வதும் அவர்களை அல்லாஹ்வுக்காக நேசிப்பதும் எமது நேசத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதும் தொடர்ச்சியாக அவர்களுடன் நட்புப் பாராட்டுவதும் நன்மையான விடயங்களில் அவர்களுக்குத் துணைநிற்பதும் அவசியமாகிறது.
ஐ.நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச நட்பு தினமானது (ஜுலை, 30) இனம், மதம், சமயம், கலாச்சாரம், நாடுகளுக்கிடையே நட்பையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆகவே நாமும் நட்புக்குரிய நற்குணங்களோடு பழகுவதோடு எமக்கும் அல்லாஹ் நல்ல நண்பர்களின் தோழமையை அருளவேண்டும் எனப் பிரார்த்திப்போம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா