துல் ஹிஜ்ஜஹ் மாதம்

ஜூலை 01, 2022

துல்ஹிஜ்ஜஹ் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமாகும். இது துல்கஃதஹ் மாதத்தை அடுத்து வரக்கூடியதாகும். இதுவே இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் கடைசி மாதமாகும்.

 

துல்ஹிஜ்ஜஹ் மாதம் பற்றி

துல்ஹிஜ்ஜஹ் மாதம் அல்குர்ஆனில் புனிதப்படுத்தப்பட்ட மாதங்கள் (அல்-அஷ்ஹுருல் ஹுரும்) என குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாதங்களில் ஒன்றாகும்.
'நிச்சயமாக அல்லாஹு தஆலாவிடத்தில் அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை'.
(அத்-தவ்பா: 36)


அபூபக்ரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்ளூ 'நிச்சயமாக காலம் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த அதன் (பழைய) நிலைக்கு சுற்றி வந்து சேர்ந்திருக்கிறது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஃதஹ், துல்ஹிஜ்ஜஹ் மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஃபான் மாதத்திற்கும் இடையேயுள்ள 'முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹு முஸ்லிம் - 1679)


மேலும், துல்ஹிஜ்ஜஹ் மாதம் என்பது 'அஷ்ஹுருல் ஹஜ்' (ஹஜ் மாதங்கள்) என பெயரிடப்பட்ட மூன்று மாதங்களில் இறுதி மாதமாகும். ஷவ்வால் மற்றும் துல்கஃதஹ் மாதங்கள் ஹஜ்ஜுடைய மாதங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், ஹஜ்ஜின் பெரும்பான்மையான முக்கியமான வணக்கங்கள் இம்மாதத்திலேயே நிறைவேற்றப்படுகின்றன.

 

ஹஜ்(ஜுக்கான காலம்) குறிப்பிட்ட சில மாதங்களாகும். அந்த மாதங்களில் ஒருவர் (தம்மீது) ஹஜ்ஜைக் கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் போது தாம்பத்திய உறவு கொள்வதோ, குற்றம் புரிவதோ, தர்க்கம் செய்வதோ கூடாது.
(அத்தியாயம்: அல்பகரஹ், வசனம்: 197)

 

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: 'ஷவ்வால், துல்கஃதஹ் மற்றும் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் (ஆரம்ப) பத்து நாட்கள் ஆகியவை ஹஜ்ஜுடைய மாதங்களாகும்'
(நூல்: தப்ஸீர் இப்னு கதீர், பாகம்: 01)

 

இம்மாதத்தின் சில நாட்களுக்குரிய குறிப்பான பெயர்கள்:


• 08 ஆம் நாள் 'யவ்முத் தர்வியஹ்' தர்வியா தினம் என அழைக்கப்படுகின்றது.
• 09 ஆம் நாள் 'யவ்மு அரபா' அரபா தினம் என அழைக்கப்படுகின்றது.
• 10 ஆம் நாள் 'யவ்முன் நஹ்ர்' ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அழைக்கப்படுகின்றது.
• 11, 12 மற்றும் 13 ஆம் நாட்கள் 'அய்யாமுத் தஷ்ரீக்' தஷ்ரீக்குடைய தினங்கள் என அழைக்கப்படுகின்றன.

 

துல்ஹிஜ்ஜஹ் மாதத்துடைய ஆரம்ப பத்து நாட்களின் சிறப்புக்கள்:

• அதன் பத்து இரவுகளின் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறுதல்.
அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான். 'விடியற் காலையின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக'
(அத்தியாயம்: அல்ஃபஜ்ர், வசனம்: 01, 02)

 

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: பத்து இரவுகள் என்பது துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் பத்து நாட்களாகும்.
(நூல்: தப்ஸீர் இப்னு கதீர், பாகம்: 08)


• இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் வணக்கங்கள் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறப்பானவையாக இருத்தல்:

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹிஜ்ஜஹ்; முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலை விடச் சிறந்ததல்ல' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், 'ஜிஹாத் செய்வதை விடவுமா?' என்று வினவினர். 'ஜிஹாத் செய்வதை விடவும் தான்;. ஆயினும், தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி – 969)

 

• இந்த நாட்கள் இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களை உள்ளடக்கி இருத்தல்:

ஹாஃபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் பத்து நாட்கள் தனித்து விளங்கக் காரணம் தொழுகை, நோன்பு, ஸதகா மற்றும் ஹஜ் போன்ற அடிப்படையான வணக்கங்கள் இந்நாட்களுள் ஒன்று சேர்ந்திருப்பதாகும். இவை வேறு நாட்களில் ஒன்று சேர்ந்து வருவதில்லை.
(நூல்: ஃபத்ஹுல் பாரி, பாகம்: 02)

 

• இந்நாட்களுல் அரஃபா தினம் காணப்படுதல்:

இந்த நாள் மிகவும் சிறப்புக்குரிய ஒரு நாளாகும். ஏனெனில் இந்த நாளில் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு நரகத்திலிருந்து விடுதலையும் வழங்கப்படுகின்றன.

ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். 'இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?' என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
(ஸஹீஹு முஸ்லிம் - 1348)

 

ஆரம்ப பத்து நாட்களின் வணக்கவழிபாடுகள் பற்றி:

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: 'நல்லமல்கள் செய்யக்கூடிய நாட்களில் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களை விட அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானதாக வேறு எந்த நாட்களும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் தான். ஆனால் 'தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர' என்று கூறினார்கள்.
(நூல்: ஸுனன் அபீ தாவூத் - 2438)


1. ஹஜ் செய்தல்:
ஹழ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: தீய பேச்சுக்கள் மற்றும் பாவச்செயல்களில் ஈடுபடாமல் இந்த(க் கஅபா) ஆலயத்திற்கு வந்(து ஹஜ் செய்)தவர், அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.
(ஸஹீஹு முஸ்லிம் - 1350)

 

2. உம்ரா செய்தல்
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹூ அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் மத்தியில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், ஹஜ்ஜும் உம்ராவும் கொல்லனின் துருத்தி இரும்பு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் அழுக்குகளை அகற்றிவிடுவதைப் போன்று வறுமையையும் பாவங்களையும் அகற்றிவிடும். (பாவச் செயல்கள் எதுவும் கலவாத) ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தை விட(க் குறைந்த) நற்கூலி வேறில்லை என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸுனனுத் திர்மிதீ – 810)


3. நோன்பு நோற்றல்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிகளில் ஒருவர் கூறினார்கள்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல்ஹிஜ்ஜாவின் முதல் ஒன்பது நாட்களிலும், 'ஆஷூரா' நாளிலும் இன்னும் ஒவ்வொரு மாதத்தின் மூன்று நாட்களிலும் அதாவது மாதத்தின் முதல்; திங்கள் மற்றும் வியாழன் (ஆகிய நாட்களில்) நோன்பு நோற்பார்கள்.
(ஸுனன் அபீ தாவூத் - 2437)

 

4. அரஃபா நோன்பு நோற்றல்

ஹழ்ரத் அபூ கத்தாதா அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, 'முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹு முஸ்லிம் - 1162)

குறிப்பு: அரஃபா நோன்பு பற்றிய மேலதிக தெளிவுகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலைப் பார்வையிடவும் https://acju.lk/news-ta/acju-news-ta/item/1148-2017-08-30-14-13-21?highlight=WyJcdTBiODVcdTBiYjFcdTBiYWFcdTBiYmUiXQ==

 

5. தஹ்லீல், தக்பீர் மற்றும் தஹ்மீத்களில் அதிகம் ஈடுபடுதல்:

ஹழ்ரத் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிப்பதாவது: (துல்ஹிஜ்ஜஹ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல்லமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகவும், அல்லாஹ்விடத்தில் மகத்தானவைகளாகவும் இல்லை. எனவே நீங்கள் (துல்ஹிஜ்ஜஹ் மாத முதல் பத்து நாட்களில்) லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற வர்த்தைகளை அதிகமாகக் கூறுங்கள் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்னத் அஹ்மத் - 6154)


6. தக்பீர் சொல்லுதல்:

அரஃபா (துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் ஒன்பதாவது) தினத்தின் ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் மூன்றாவது நாள் (துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் பதின்மூன்றாவது நாள்) அஸர் தொழுகை வரைக்கும் பர்ழான தொழுகைகளின் பின்னரும் பொதுவான நேரங்களிலும் தக்பீர் சொல்வது ஸுன்னத்தாகும்.
(நூல்: அல் மஜ்மூஃ, பாகம்: 05)

 

7. ஹஜ்ஜுப் பெருநாள் இரவில் பிரார்த்தனையில் ஈடுபடுதல்:

'ஜுமுஆவுடைய இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தின் முதலாம் இரவு மற்றும் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவு ஆகிய ஐந்து இரவுகளில் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்றது' என்று கூறப்பட்டு வந்த விடயம் எமக்கு எட்டியுள்ளது என இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: அல்உம்மு, பாகம்: 01)

 

8. ஹஜ்ஜுப் பெருநாள் அனுஷ்டித்தல்:

ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் இருந்தன. அதில் அவர்கள் விளையாடிக் கொண்டாடுவார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இந்த இரண்டு நாட்களும் என்ன?' என்று கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் இந்த இரண்டு நாட்களிலும் விளையாடிக் கொண்டாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்' என்று கூறினார்கள்.
(நூல்: ஸுனன் அபீ தாவூத் - 1134)


9. ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் குத்பாவும்:

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாள் இன்னும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். பிறகு இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி - 957)

 

10. உழ்ஹிய்யா (குர்பான் கொடுத்தல்):

ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஹஜ்ஜுப் பெருநாளன்று இரத்தம் சிந்துவதை (குர்பானியை) விட அல்லாஹ்வுக்கு விருப்பமான எந்தச் செயலையும் யாரும் செய்ய மாட்டார்கள். மறுமை நாளில் (குர்பானிக்கு அறுக்கப்பட்ட) பிராணி அதன் கொம்புகள், அதன் முடிகள் மற்றும் குளம்புகளுடன் வரும். மேலும், இரத்தம் தரையில் விழுவதற்கு முன்பே அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறுகிறது. அதனால் மகிழ்ச்சியாக இருங்கள்' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸுனனுத் திர்மிதீ – 1493)

 

குறிப்பு: உழ்ஹிய்யா பற்றிய மேலதிக தெளிவுகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாவைப் பார்வையிடவும்.

 

01. உழ்ஹிய்யாவுக்குரிய பணத்தை சதகா செய்வதால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா? https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1735-2019-08-05-12-00-05


02. ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத வேறு பிராணிகளை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாமா? https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1734-2019-08-05-11-45-09


03. கூட்டு உழ்ஹிய்யா பற்றிய மார்க்க விளக்கம் https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1380-2018-08-17-12-38-25


04. உழ்ஹிய்யாப் பிராணியை அறுத்ததன் பின் விலையைத் தீர்மானிப்பது கூடுமா? https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/897-2016-09-05-14-41-07


05. நிர்ப்பந்தத்தால் உழ்ஹிய்யா கொடுக்க முடியாமற் போனால் அதன் சட்டமென்ன? https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/569-2016-08-01-06-40-46

 

நல்லமல்கள் செய்யப்படும் நாட்களில் இந்நாட்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நாட்கள் என்பதால் குறிப்பாக இந்த வணக்கங்களுடன் குர்ஆன் ஓதுதல், பாவ மன்னிப்புத் தேடுதல், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல், பெற்றோரை கண்ணியப்படுத்துதல், உறவுகளுடன் சேர்ந்து நடத்தல், ஸலாமைப் பரப்புதல், உணவளித்தல், நன்மையை ஏவுதல் மற்றும் தீமையைத் தடுத்தல், அண்டை வீட்டாருடன் சேர்ந்து நடத்தல், மனைவி மற்றும் குழந்தைகளுக்குச் செலவு செய்தல், அனாதைகளுக்கு உதவி செய்தல், நோயாளிகளை சேமம் விசாரித்தல், சகோதரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், குடிமக்களிடம் கருணை காட்டுதல், துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தல், மற்றும் நல்லவற்றில் முஸ்லிம்களுடன் ஒத்துழைத்தல் போன்ற இன்னும் பல நல்லமல்களில் அதிகம் ஈடுபடுவோமாக!

 

வல்ல அல்லாஹ் இந்நாட்களில் அதிகமான நல்லமல்கள் செய்ய நம்மனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.