ACJU/NGS/2022/209
2022.07.01 (1443.12.01)
துல்ஹஜ் மாதம் தியாகத்தை பறைசாட்டும் மாதமாகும். இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிகவும் சிறப்புப் பொருந்திய தினங்களாகும். இத்தினங்கள் மீது அல்லாஹ் அல்குர்ஆனில் சத்தியம் செய்து இவை சிறப்புப் பொருந்திய தினங்கள் என்பதை எமக்கு உணர்த்தியுள்ளான்.
(وَالفَجرِ وَلَيَالٍ عَشرٍ) (الفجر:1,2)
விடியக்காலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக' (அல்பஜ்ர் 1-2)
இவ்வசனத்திற்கு இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களும் ஏனைய சன்மார்க்க அறிஞர்களும் இங்கு குறிப்பிடப்படும் இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகள் என விளக்கமளித்துள்ளார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ - يَعْنِي أَيَّامَ الْعَشْرِ - ' (رواه أبي داود, في باب صيام العشر 2438)
'துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து தினங்களிலும் புரியப்படும் நல்லமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லமல்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதாக இல்லை.' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூத் 2438)
துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நோன்பு நோற்பது, இரவு நேரங்களை நல்லமல்களைக் கொண்டு அலங்கரிப்பது, அதிகமாக அல்லாஹ்வை நினைவூட்டுவது போன்ற விடயங்களில் ஈடுபடுவதின் மூலம் உயர்ந்த நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
துல்ஹஜ் மாதத்தின் ஆரம்பப் பத்து நாட்களில் செய்யப்பட வேண்டிய நல்லமல்கள்
1. துல் ஹஜ்ஜின் ஆரம்ப ஒன்பது நாற்கள் நோன்பு நோற்றல்
عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، عَنْ بَعْضِ، أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَالْخَمِيسَ. (سنن أبي داود : 2437)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல் ஹஜ் மாதம் (முதல்) ஒன்பது நாட்களும், ஆஷுராவுடைய தினத்திலும், அய்யாமு பீழுடைய மூன்று தினங்களிலும், மாதத்தின் முதல் திங்கள், வியாழன் தினங்களிலும் நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என ஹுனைதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல் : ஸுனனு அபீ தாவூத் : 2437)
2. அறபா நோன்பு நோற்றல்
துல் ஹஜ் மாதத்தின் பிறை ஒன்பதாவது தினம் அறபா தினமாகும். அத்தினத்தில் நோன்பு நோற்பது விஷேட ஸுன்னத்தாகும்.
عَنْ أَبِي قَتَادَةَ رضي الله عنه, قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ، صِيَامُ يَوْمِ عَرَفَةَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ، وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ» (صحيح مسلم - باب استحباب صيام ثلاثة أيام 1162)
அபூ கதாதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். அறபா தின நோன்பு பற்றி நபியவர்களிடம் வினவப்பட்ட போது, முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் (அவற்றில் செய்யப்பட்ட சிறு பாவங்;களுக்கு) குற்றப்பரிகாரமாக அது அமையும் என கூறினார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம் : 1162)
3. தக்பீர், தஸ்பீஹ், தஹ்லீல் கூறல்.
இப்னு உமர், அபூ ஹுறைரா றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் (துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் சந்தை பகுதிகளுக்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும்போது மக்களும் அவர்களுடன் (சேர்ந்து) தக்பீர் சொல்வார்கள். (நூல் : ஸஹீஹுல் புஹாரி)
عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه أن النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ، وَالتَّكْبِيرِ، وَالتَّحْمِيدِ ' (مسند أحمد: 5444)
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கோள்ளப்படும் அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதும் மகத்தானதும் வேறு ஏதும் இல்லை. எனவே, அந்நாட்களில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் அதிமாக கூறுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அனஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : முஸ்னத் அஹ்மத் : 5444)
4. உழ்ஹிய்யாஹ் நிறைவேற்றல்.
உழ்ஹிய்யாவை பெருநாள் தினத்தன்றும், அதனை அடுத்து வரும் மூன்று நாட்களுகளிலும் நிறைவேற்ற முடியும்.
عَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: «ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا. (صحيح مسلم : 1966)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள் என அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம் : 1966)
அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாழில்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா