நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கி நல்ல நிலைக்குத் திரும்ப குனூதுன்னாஸிலா ஓதிப் பிரார்த்திப்போம்

ஜூன் 23, 2022

ACJU/NGS/2022/168

22.06.2022
21.11.1443

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

 

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான இந்நிலையில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதுடன் மக்கள் அத்தியவச பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரிதும் சிரமப்படுவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.


இவ்வாறான நெருக்கடியான சோதனைகள் ஏற்படும்போது அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் அவன் பக்கம் திரும்ப வேண்டும். இச்சோதனைகள் நீங்குவதற்காக தொழுகை, நோன்பு, சதக்கா, திக்ர், தௌபா, இஸ்திஃபார், துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் நெருங்க வேண்டும்.


துஆ என்பது ஒரு வணக்கம் என்பதுடன், கஷ்ட நஷ்டங்களை அல்லாஹ்விடம் முறையிட்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் ஆயுதமுமாகும். எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:
'என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நான் உங்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்கிறேன்.' (சூரா அல்-ஙாபிர் : 60)


'எனது அடியான் என்னை அழைப்பானாயின் நிச்சயமாக நான் அவனுக்கு மிக சமீபத்தில் இருக்கிறேன். அழைப்போரின் அழைப்புக்கு பதில் சொல்பவனாகவும் இருக்கிறேன்.' (சூரா அல் பகரா : 186)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோதனைகளின் போது பிரார்த்தனைகளின் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குபவர்களாக இருந்தார்கள். குறிப்பாக தொழுகைகளில் குனூத்துன்னாஸிலா (சோதனைகளின் போது ஓதப்படும் குனூத்) ஓதியுள்ளார்கள்.


எனவேதான் பொதுவான சோதனைகளின் போது தொழுகைகளில் குனூத்துன்னாஸிலா ஓதுவது சுன்னத்தாகும் என மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.


இதனை அடிப்படையாக வைத்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நீங்கி நல்ல நிலைமை உண்டாகி மக்கள் தமது இயல்பு வாழ்க்கையின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக ஐவேளைத் தொழுகைகளில் குனூத்துன்னாஸிலாவை சுருக்கமாகவும் உறுதியான நம்பிக்கையுடனும் ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.


குனூத்துன்னாஸிலாவை ஓதும் போது பின்வரும் துஆக்களை ஓதுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

 

اللَّهُمَّ اهْدِنِا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِنا فِيمَا أَعْطَيْتَ، وَقِنا شَرَّ مَا قَضَيْتَ، فإِنَّكَ تَقْضِي وَلا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ (سنن أبي داود - 1425)

اللَّهُمَّ إِنّا نعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ (صحيح مسلم - 2739)

اللهُمَّ إِنّا نعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ (ابن أبي شيبة 10/ 190)

اللَّهُمَّ إِنِّا نعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَماتَةِ الأَعْدَاءِ (متفق عليه)

 

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022 05:42

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.