ACJU/NGS/2022/161
2022.06.22 (1443.11.21)
மொணராகலை, அலுபொதயை பிறப்பிடமாகக் கொண்ட நம் நாட்டின் முக்கிய ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷைக் எம். அமானுல்லாஹ் ஸீலானி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மொணராகலை மாவட்டக் கிளையின் கௌரவ தலைவராக இருந்த அஷ்ஷைக் எம். அமானுல்லாஹ் ஸீலானி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் நேற்று (2022.06.21) சொவ்வாய்க் கிழமை தனது 50 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் தனது ஆரம்பப் படிப்பை அலுபொத முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் முடித்து விட்டு, பதுளை ஸீலானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் 1991 ஆம் ஆண்டு தனது ஆலிம் பட்டத்தைப் பெற்றுள்ளார்கள். தொடர்ந்து, காலி கடுகொட ஜும்ஆ மஸ்ஜித், கண்டி மாவில்மட ஜும்ஆ மஸ்ஜித், தெலும்புகஹவத்தை ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் பிரதான கதீபாகவும் அன்னார் கடமையாற்றியுள்ளார்கள்.
அவர்கள், ஆரம்ப காலம் முதல் சமூகச் சேவைளில் ஈடுபாடு கொண்டவராகவும், சகவாழ்வை கட்டியெழுப்பும் பணியில் அயராது உழைப்பவராகவும் காணப்பட்டார்கள். இதனால் அவர்களுக்கு தனது பிரதேசத்தில் உள்ள பிற மத சகோதரர்கள் மற்றும் மதகுருமார்களின் உள்ளங்களை வென்றெடுத்து பல பணிகளை மேற்கொள்ள முடியுமாக இருந்தது. அன்னார், 2013 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மொணராகலை மாவட்டக் கிளையின் கௌரவ தவைராகவும், மத்திய சபை உறுப்பினராகவும் செயற்பட்டு சமூகத்துக்கு பாரிய சேவைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா