2022.06.18 (1443.11.17) ஆம் திகதி நடைபெறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலில் பின்வரும் விடயங்கள் பிரகடனப்படுத்தப்படுகின்றன.
இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவதுடன் அவன் பக்கம் திரும்புவது அவசியமானதாகும். எனவே, எல்லா சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்களாகிய நாம் நல்லமல்களில் அதிகளவு ஈடுபட்டு அவனது திருப்பொருத்தத்தை அடைந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
சமூக ஒற்றுமை
• இலங்கைத் திருநாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தைச் சார்ந்தவர்களாக நின்று தமது சன்மார்க்க கடமைகளையும் கிரியைகளையும் நிறைவேற்றி வருகின்றனர்.
• முஸ்லிம்களின் ஆன்மீக, அறிவு, ஒழுக்க, பண்பாட்டு மேம்பாட்டுக்காக உழைக்கும் பொருட்டு பல தரீக்காக்களும் தஃவா அமைப்புக்களும் வரலாறு நெடுகிலும் செயற்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மத்தியில் சிற்சில கருத்து வேறுபாடுகளும் அபிப்பிராயப் பேதங்களும் நிலவி வந்த போதும் இவையனைத்தும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற நோக்கிலும் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்பும் எதிர்ப்பார்ப்புடனும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒற்றுமைப் பிரகடனத்தை கடந்த 2009.08.18 ஆம் திகதி வெளியிட்டது.
• அதனைத் தொடர்ந்து கடந்த 2022.01.30 ஆம் திகதி முஸ்லிம் சமூகம் தனது செயற்பாடுகளை எந்த வரையறைக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 'மன்ஹஜ்' மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வலழிகாட்டல்களும் என்ற ஆவணத்தை வெளியிட்டது.
• இவ்விரு பிரகடனங்களிலும் கூறப்பட்டுள்ள விடயங்களைப் பின்பற்றி முஸ்லிம் சமூகம் ஒற்றுமையைக் கடைபிடித்து செயலாற்ற வேண்டும் என்று இச்சபை வலியுறுத்துகின்றது.
சகவாழ்வு
• நம் தாய் நாடான இலங்கை பல இனத்தவர்களும் பல மதங்களைச் சார்ந்தவர்களும் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்குள்ள இனங்களுக்கு இடையிலும் மதத்தவர் மத்தியிலும் நிலவுகின்ற நல்லுறவிலேயே இந்நாட்டின் மேம்பாடும் முன்னேற்றமும் தங்கியுள்ளது.
• முஸ்லிம்கள் எவ்வாறு பிரமதத்தவர்களுடன் சகவாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற வழிகாட்டல்களை உள்ளடக்கிய ஒரு பிரகடனத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2012.12.27 ஆம் திகதி வெளியிட்டது.
• இந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களைப் பின்பற்றி முஸ்லிம் சமூகம் பிர சமூகங்களுடன் சகவாழ்வை கடைபிடித்து செயலாற்ற வேண்டும் என்று இச்சபை வலியுறுத்துகின்றது.
இளைஞர்கள்
• இளம் சமுதாயம் ஒரு சமூகத்தின் அச்சாணியாகும். இவர்களை சரியாக வழிநடாத்துவது சமூகத்திலுள்ள ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். அந்தவகையில் இளைஞர்களை போதை வஸ்துப் பாவனையிலிருந்து பாதுகாத்து வழிகாட்டுவதற்கு பெற்றோர்கள், ஊர்த் தலைமைகள், உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் என சகல தரப்பினர்களும் நாட்டின் சட்டத்தைப் பேணி ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று இச்சபை வலியுறுத்துகின்றது.
• தீவிர சிந்தனையிலிருந்து இளைஞர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இளைஞர்களை தீவிர சிந்தனையிலிருந்து பாதுகாப்பது தொடர்பான வழிகாட்டல்களை உள்ளடக்கிய ஒரு கையேடை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 'தீவிரவாதம் வேண்டாம்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டல்களை பிற்பற்றிச் செயலாற்றுமாறு அனைத்து முஸ்லிம் இளைஞர்களையும் இச்சபை கேட்டுக் கொள்கின்றது.
பொருளாதார நெருக்கடி
• தற்போது எமது நாடு பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு, பொருட்களின் விலைவாசி அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கை பல வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
• ஆன்மீகம்: சகல முஸ்லிம்களும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழவும், ஹலால் ஹராம் பேணி நடந்து கொள்ளவும், பொருளாதார நெருக்கடிகளின் போது சன்மார்க்க ரீதியாக வழிகாட்டப்பட்டுள்ள வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் உலமாக்களால் வழிகாட்டப்பட வேண்டும் என்றும் இச்சபை கேட்டுக் கொள்கின்றது.
• பொருட்களை பதுக்கல் செய்தல் மற்றும் அதிக விலையில் விற்றல்: இஸ்லாம் பதுக்கல் செய்வதைத் தடுத்துள்ளது. வியாபாரிகள் இக்கட்டான இந்நிலையில் பொருட்களை பதுக்கி அல்லது கூடுதல் இலாபம் வைத்து மக்களுக்கு நெருக்கடி கொடுக்காது நடுநிலையான இலாபத்தை நிர்ணயித்து விற்க வேண்டும் என்று இச்சபை கேட்டுக் கொள்கின்றது.
• வீண்விரயத்தைத் தவிர்த்தல்: இஸ்லாம் எவ்விடயத்திலும் நடுத்தரமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் வீண்விரயத்தை தவிர்க்க வேண்டும் என்றும் போதிக்கின்றது. எனவே நெருக்கடியான இச்சந்தர்ப்பத்தில் அத்தியவசிய தேவைகளுடன் மாத்திரம் தமது செலவினங்களைப் போதுமாக்கிக் கொண்டு வீண்விரயங்களைத் தவிர்த்து செயற்படுமாறு சகலரையும் இச்சபை கேட்டுக்கொள்கின்றது.
• பயிர்ச்செய்கை: மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாக பயிர்ச்செய்கை காணப்படுகின்றது. இஸ்லாம் பயிர்ச்செய்கையை பலவகைகளிலும் ஆர்வமூட்டுகின்றது. எனவே, இதற்காக எமது பொது இடங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை பயன்படுத்தி துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு இச்சபை கேட்டுக் கொள்கின்றது.
• உதவி செய்தல்: நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நெருக்கடியான சூழ்நிலையால் பொது மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்விடயத்தினை கவனத்திற் கொண்டு நல்லுள்ளம் கொண்டோர் சமூக நலன்விரும்பிகள் உட்பட அனைவரும் தங்களால் முடியுமான அளவு சிரமத்திலுள்ளோரையும் பாதிக்கப்பட்டோரையும் தேவையுடையோரையும் இனங்கண்டு இன, மத பேதமின்றி உதவிகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென இச்சபை கேட்டுக்கொள்கின்றது.
மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலிம்கள், சமூகப் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், ஊர்த் தலைமைகள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஓன்றிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இச்சபை வேண்டிக் கொள்கிறது.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா