நம் உயிரிலும் மேலான முஹம்மது முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய இழிவான கருத்துக்களை கூறியதை கண்டிப்பதற்காகவும் இலங்கைக்கு செய்யக்கூடிய மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு நன்றியை கூறுவதற்காகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு மேற்கொண்ட விஜயம்
சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் சமூகத்தினருக்கு மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் நம் உயிரிலும் மேலான முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய இழிவான கருத்துக்களை குறிப்பிட்டதையிட்டு இலங்கை முஸ்லிம்களுடைய அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் உட்பட ஒரு குழு நேற்று (09.06.2022) இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு சென்று தூதுவரை சந்தித்தது.
குழு தனது கண்டனத்தை தெரிவித்ததை அடுத்து, இது குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் தூதுவர், இது இந்திய அரசின் நிலைபாடோ இந்திய மக்களின் நிலைபாடோ அல்ல, இந்தியா எப்போதும் பல்லின, பல்மத சமூகத்தை மதிக்கும் ஒரு நாடாக ஆசிய கண்டத்தில் இருப்பதாகவும், அக்கட்சியுடைய தலைவர்கள் குறிப்பிட்ட இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியிந்தார்.
அத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கடியான இச்சூழ்நிலையில் இலங்கைக்கு அவர்கள் செய்யக்கூடிய மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து, அனைத்து இன மக்களுக்கு மத்தியில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக நாம் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்றும் ஜம்இய்யா சார்பாக தெரிவிக்கப்பட்டது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா