பேராசிரியர் சன்ன ஜயசுமான அவர்களுக்கான பதில்

ஜன 07, 2022

ACJU/NGS/2022/002

ஜனவரி 07, 2022

பேராசிரியர் சன்ன ஜயசுமான அவர்களுக்கான பதில்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை “திட்டவட்டமான தவறு” என்று மறுதலிக்கின்றது.

மருந்துப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் சன்ன ஜயசுமான அவர்கள், 42 வருடங்களுக்கு முன்பாக அன்றைய ஜம்இய்யதுல் உலமாவினால் விடுக்கப்பட்ட, சட்ட ரீதியாக பிணையாத மார்க்க கருத்துரையொன்று தொடர்பில் நீதி அமைச்சருக்கு முறைப்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆழ்ந்த கவலையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துக்கொள்கின்றது. பொறுப்புள்ள கல்விமானாக, இவ்விடயத்தை மூன்றாம் தரப்புக்கு எடுத்துரைப்பதை விட, முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட, இலங்கையில் நன்கு அறிமுகமான நிறுவனமான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் இது தொடர்பான தெளிவுகளை பெற்றிருக்கலாம்.

42 வருடங்களுக்கு முன்பு ‘அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான சட்டத்துக்கு புறம்பான தீர்ப்பொன்றை வழங்கி உள்ளது’ என்ற பேராசிரியர் சன்ன ஜயசுமான அவர்களின் குற்றச்சாட்டு, திட்டவட்டமான பொய்யானதாகவும், பாரதூரமான விஷமம் நிறைந்ததும், முன்னைய காலத்தில் இலங்கை முஸ்லிம்களால் நன்கு மதிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் மூத்த, பிரபலமான அறிஞர்களை இழிவு படுத்துவதாகவும் உள்ள கருத்தாக அமைந்துள்ளது.

முன் எப்போதோ தீர்த்து வைத்த விடயம் ஒன்றை, அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட் பிரதேசத்தில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்துடன் தொடர்பு படுத்தி, பாகிஸ்தான் அரசும், அங்குள்ள மக்களும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு தம்மால் முடிந்த பேருபகாரத்தை செய்துள்ள நிலையில், பேராசிரியர் ஜயசுமான அவர்கள் இவ்விடயத்தை நினைவூட்டுவதன் காரணம் என்ன என்பதை வினவுவதற்கு நாம் உந்தப்படுள்ளோம்; அதுவும், குறிப்பாக இலங்கையர்களாகிய நாம் பொருளாதார இடரில் சிக்கித்தவிக்கும் இச்சந்தர்ப்பத்தில், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வெளி நிதியுதவிகளை பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையில்.

என்றாலும் தெளிவிற்காக, பின்வரும் விடயங்களை குறிப்பிட விரும்புகின்றோம்:

இஸ்லாமிய மார்க்க விடயங்களுக்கு மாத்திரம் அறிவுரை வழங்கும் இஸ்லாமிய மார்க்க அமைப்பு என்ற வகையில், எந்த விடயத்துக்கும் சட்டரீதியான தீர்ப்புக்கள் வழங்குவது என்பது எமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையானது இஸ்லாமிய மார்க்க விடயங்களில் சட்டரீதியாக பிணையாத கருத்துரைகளையே வழங்கி வருவதுண்டு.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கை முஸ்லிம்கள், ஏனைய பிரஜைகளைப் போன்றே இந்நாட்டின் ஒரே நீதித்துறைக்கு கீழ் கட்டுப்பட்டவர்களே என்பதனை ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

என்றாலும், தமது சமூகங்களை வழிகேடான, தத்தமது மதங்களின் அடிப்படை கொள்கைகளுக்கு அந்நியமான சிந்தனைகள் தொடர்பாக அறிவுறுத்துவதும், தெளிவூட்டுவதும் அந்தந்த மதச் சபைகளின் பொறுப்பாகும். மேலும், எவராவது மதத்தின் பெயரில் சமூகத்தை பிழையாக வழிநடாத்த முயற்சித்தால், குறித்த சிந்தனைகள் வழிகேடனாவை என்றும், பிழையென்றும் பிரகடனப்படுத்தி சட்டரீதியாக பிணையாத மார்க்க கருத்துரைகளை வழங்குவது மதச் சபைகளின் தார்மீகப் பொறுப்பாகும்.

நாட்டினது ஒவ்வொரு துறையும் மிகப்பாரதூரமான பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில் பேராசிரியர் ஜயசுமானவின் கதை எழுத்தாளர், சியால்கோட் சம்பவத்தை பொருத்தப்பாடு இல்லாமல் குறிப்பிட்டு எமது பாகிஸ்தானுடனான உறவை சீர்குலைப்பதற்கும், பொது மக்களை நாட்டின் அபிவிருத்திக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் ஒன்றிணைப்பதனை விடுத்து, எமது சமூகங்களை உள் மத விவகாரங்கள் அடிப்படையில் பிரிப்பதற்கும் முயற்சி செய்துள்ளமையானது எம்மை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பேராசிரியர் அவர்கள் தீய சக்திகளினால் வழிநடாத்தபடுவதிலிருந்து தன்னை காத்து, எம்முடன் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தருமாறு அன்பாக அழைப்புவிடுக்கின்றோம்.

உண்மையும், நீதியும் நிலைக்கட்டுமாக!

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

Last modified onஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2022 15:21

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.