முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் மார்க்க அறிஞர்கள் ஒன்றியத்தின் அறிக்கை

நவ 11, 2021

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

 

22 ஜனவரி 2021


2021 ஜனவரி 22 அன்று கொழும்பில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலின் பின்னர், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட அறிஞர்கள், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான கீழ்குறிப்பிடப்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்களில் ஏகமனதான நிலைப்பாடுகளை எட்டினர். இந்த அறிஞர்களின் ஒருமித்த கருத்தானது, இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இந்த விடயத்தில் நிலவும் தெளிவின்மைகளை அகற்றுவதற்கு முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் திருத்தங்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

1. திருமண வயது


முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணவயது 18 வருடங்கள் ஆகும். ஆணும் பெண்ணும் 18 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் திருமணத்தை பதிவு செய்வதை தடைசெய்யும் வகையில் பிரிவு 23 இல் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது திருத்தப்படவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆணும் பெண்ணும் 18 வயதிற்குட்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் (16 வயதுக்குக் குறையாமல்) திருமணத்திற்கு தேவையான முன்நிபந்தனையாக காதியின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். அத்தகைய திருமணம் இருதரப்பினதும் நலனுக்காக என திருப்தி அடைந்தால் மட்டுமே காதி அத்தகைய அனுமதியை வழங்குவார். 16 வயதிற்குட்பட்ட திருமணம் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

 

2. பொருண்மைச் சட்டம் (Substantive Law)


முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 16 ஆவது பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது:


'இந்தச் சட்டத்திலுள்ள எந்தவொரு விடயமும் பதிவுசெய்தல், பதிவு செய்யாமை என்ற காரணத்தினாலன்றி செல்லுபடியாகும் அல்லது செல்லுபடியாகாது எனப் புரிந்து கொள்ளப்படலாகாது. விவாகத்தையோ விவாகரத்தையோ செய்துகொள்ளும் தரப்பினர் சார்ந்துள்ள குறித்த பிரிவை நிர்வகிக்கும் முஸ்லிம் சட்டத்தின் பிரகாரமே முஸ்லிம் விவாகம் அல்லது விவாகரத்து செல்லுபடியாகும் அல்லது செல்லுபடியாகாது.'


வழக்குகளில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட மத்ஹபை கடைப்பிடிப்பது விரும்பத்தக்கது மற்றும் அவசியமானது என்று நாங்கள் கருதுகிறோம். இந்தச்சூழலில், இலங்கை முஸ்லிம்கள் ஷாபி பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று எமது உயர்நீதிமன்றம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும், சில சூழ்நிலைகளில் மற்றும் குறிப்பாக ஒரு திருமணத்தில் அல்லது விவாகரத்துக்கு ஒரு தரப்பு அவனது அல்லது அவளது விருப்பப்படி, ஒரு மத்ஹபை ஏற்றுக்கொள்ள விரும்புவது அல்லது அத்தகைய தரப்புகள் இரண்டும் வௌ;வேறு மத்ஹப்களைச் சேர்ந்தவை எனும்போது எந்த மத்ஹப் ஆட்சி செலுத்தும் என்ற கேள்வி எழ முடியும் என்ற உண்மையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.


திருமணத்தில் பங்கெடுப்பவர்கள் திருமணத்தின்போது தங்கள் மத்ஹபை வெளிப்படுத்தவில்லை அல்லது வௌ;வேறு மத்ஹப்களைச் சேர்ந்தவர்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பொருந்தக்கூடிய சட்டத்தை தீர்மானிப்பதற்கு முஸ்லிம் சட்டத்தில் ஆழமான அறிவு தேவை. இந்த விவகாரத்தை கையாள்வதற்கு பொதுவாக காதிகள் போதுமானளவு தகுதியையும் அறிவையும் கொண்டிருக்கவில்லை. எனவே, திருமணத்தின்போது தரப்புகள் தங்கள் மத்ஹபை வெளிப்படுத்துவதை ஊக்குவிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.


எவ்வாறாயினும், அத்தகைய நிலைமைகளில் இருதரப்பினரும் அவ்வாறு செய்யத் தவறும்போது, அல்லது இரு பிரிவுகளைச் சார்ந்தவர்களாக இருக்கும்போது, குறித்த காதி இவ்விடயத்தில் பிரயோகிக்கப்படக்கூடிய மத்ஹப் குறித்து உறுதிப்படுத்தலைப் பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து ஆலோசனைச்சபையிடம் ஆலோசனை கேட்கவேண்டும் என்கிற சட்டரீதியான தேவைப்பாட்டினை உருவாக்குதல் வேண்டும். இந்த சபைக்கு அனைத்து சிந்தனைப் பள்ளிகளையும் கருத்திற்கொண்டு இவ்விடயம் தொடர்பில் காதிக்கு கருத்துரை கூறும் அதிகாரம் வழங்கப்படுவதோடு, பெண் அங்கத்தவர்கள் இருவர் உட்பட நன்மதிப்புள்ள இஸ்லாமிய அறிஞர்களை உள்ளடக்கக் கூடியதாக மீள் நிறுவப்படவேண்டும். அவர்களது கருத்து பொருத்தமான மத்ஹபைத் தெரிவு செய்வதற்கான வழிகாட்டலை வழங்கும்.

 

3. திருமணப்பதிவு


திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும், பதிவு மேற்கொள்ளப்படாத பட்சத்தில் மணமகன் குற்றம் இழைத்தவராகக் கருதப்படுதல் வேண்டுமெனவும் நாம் முன்மொழிகிறோம். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரு மாதங்களுக்குள் திருமணப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தினால் குற்றவாளிக்கு அறிவித்தல் விடுக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்படாத திருமணங்கள் வலிதற்றவை என அறிவிப்பதனால் அவற்றின் மூலம் பிறந்த பிள்ளைகள் முறைகேடாகப் பிறந்தவர்களாகக் கருதப்படக்கூடும் என்பதால் ஷரீஆவுக்கு இணங்குதல் என்ற விடயத்தையும் தாண்டி அவ்வாறான திருமணம் ஒன்றின் மூலம் பிறந்த பிள்ளைகளுக்கும் அது அநீதியாகவே அமையும். ஏனெனில், அவர்கள் எதுவித குற்றமும் இழைத்திராதவர்களாக இருப்பதோடு ஷரீஆவின்படியும் அவர்கள் செல்லுபடியாகக்கூடிய திருமணம் ஒன்றின் மூலம் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

 

4. வலி ஒருவரின் தேவைப்பாடு


மாலிக்கி, ஷாஃபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப்களின்படி, திருமணத்தில் வலி ஒருவரின் பங்கேற்பு இன்றியமையாத பகுதியாகக் கொள்ளப்படுவதுடன், அவ்வாறான ஒப்புதல் இல்லாத பட்சத்தில் திருமணம் வலிதற்றதாகக் கருதப்படும்.

ஹனஃபி மத்ஹபின் நிலைப்பாடு யாதெனில், சுதந்திரமான, சுயபுத்தி உள்ள, வயதுவந்த பெண்ணொருத்தி அவளது பாதுகாவலரின் (வலி) ஒப்புதல் இல்லாமல் செய்துகொள்ளும் திருமணம் கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் அது செல்லுபடியாகும் என்பதாகும். அவள் திருமணம் செய்துகொள்ளும் நபர் பொருத்தமான இணையராக (குஃப்) இல்லாத பட்சத்தில், வலியின் ஒப்புதல் பெறப்படாவிட்டால் அந்தத்திருமணம் வலிதற்றதாகக் கருதப்பட்டு காதியால் ரத்து செய்யப்படலாம்.


வலி தனது அதிகாரத்தை தவறாகப் பிரயோகித்து பொருத்தமற்ற இணையர் ஒருவருக்கு பெண்ணை திருமணம் முடித்துக்கொடுப்பதைத் தடுப்பதற்காக, திருமணப்பத்திரத்தில் மணமகள் கையொப்பமிடுவதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மற்றும்ஃஅல்லது திருமணப்பதிவை அவளது சம்மதத்துக்கான சான்றாகக் கொள்ளவேண்டும் எனவும் நாம் பரிந்துரைக்கிறோம்.


அத்துடன், காதிக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் 47 (2) பிரிவு மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என நாம் கருதுகிறோம். இதன்மூலம் மணமகளுடைய சம்மதத்துக்கு மாற்றமாக வலி தனது அதிகாரத்தை நியாயமற்ற முறையில் தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு மணமகளினால் முறைப்பாடு மேற்கொள்ளப்படும்போது காதி அவ்விடயத்தில் நேரடியாக பங்குகொள்ளமுடியும்,
'(2) ஒரு பெண்ணின் திருமணத்துக்கான ஒப்புதலை நியாயமற்ற விதத்தில் வழங்காதிருப்பதாக வலிக்கு எதிராக அந்தப்பெண்ணால் அல்லது அவள் சார்பாக மேற்கொள்ளப்படும் முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதோடு, தேவை ஏற்படின் அந்த திருமணத்தை அங்கீகரிக்குமாறும் தேவைப்பாடான வலியின் இருப்பு அல்லது ஒப்புதலை வழங்குமாறும் உத்தரவிட முடியும்.'

 

5. பலதாரமணம்


காதியின் அனுமதியின்றி எந்தவோர் ஆணும் பலதாரமணம் செய்துகொள்வதை அனுமதிக்கக்கூடாது என நாம் பரிந்துரைக்கிறோம். பலதாரமணம் செய்துகொள்ள அனுமதிக் கோரி ஒரு விண்ணப்பம் விடுக்கப்படும்போது, பின்வரும் நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்கு அமைவாக காதி குறித்த விண்ணப்பதாரருக்கு அடுத்த திருமணத்திற்கான அனுமதியை வழங்கலாம்:


1. மேற்குறித்த விண்ணப்பத்துக்கு எதிராக தற்போதைய மனைவி ஒரு விசாரணையைக் கோருவதற்கு உரித்துடையவர் என்பதை கருதி காதி அவருக்கு அறிவிக்க வேண்டும்.

2. அடுத்த திருமணத்திற்கான சட்டபூர்வமான காரணம் குறித்து காதி விசாரிப்பார்.

3. அனுமதியளிக்க முன் காதி பின்வரும் நிபந்தனைகளை கருத்திற்கொள்ள வேண்டும்:


 விண்ணப்பதாரரிடம் தன் மனைவிகளைப் பராமரிக்கப் போதுமான நிதி ரீதியிலான கொள்திறன் காணப்படுதல்.
 விண்ணப்பதாரர் தன்னால் நீதமான முறையில் தன் மனைவிகளைப் பராமரிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 காதியின் அனுமதியின்றி ஒருவர் அடுத்த திருமணத்தை செய்துகொள்வாரெனில், அவர் குற்றமிழைத்தவராகக் கருதப்படவேண்டும் எனவும் நாம் பரிந்துரைக்கிறோம்.


ஹன்பலி மத்ஹபில் காணப்படும் ஷரீஆவுக்கு முரணற்ற நிபந்தனைகளுடன் கூடிய திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தங்களை நிலைநிறுத்துவதற்கான அதிகாரம் குறித்து நாம் ஆராய்ந்தோம். அதில் மனைவியின் ஒப்புதலின்றி கணவன் பலதாரமணம் செய்துகொண்டால், அவளுக்கு உள்ள ஃபஸக் விவாகரத்துக் கோரும் உரிமையும் உள்ளடங்குகிறது.


தனது ஒப்புதலின்றி தன் கணவன் பலதாரமணம் செய்துகொண்டால், மனைவிக்கு ஃபஸக் விவாகரத்து கோரமுடியும் என்ற நிபந்தனையையும், ஏனைய ஷரீஆவுக்கு முரணற்ற திருமணத்துக்கு முந்தைய ஒப்பந்தங்களையும் ஒன்றிணைத்து உரிய சட்ட ஏற்பாடுகளைச் செய்யுமாறும் நாம் பரிந்துரைக்கிறோம்.


இவ்வாறான ஒப்பந்தங்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தினால் நிர்வகிக்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். பலதாரமணம் தொடர்பான சட்டத்தினை துஷ்பிரயோகம் செய்வதனால் ஏற்படும் சமூக அவலங்களை இல்லாதொழிப்பதில் இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.

 

6. பெண் காதிகள்


காதிகளின் பொதுநிலைப்பாடு பெண்களுக்கு பாகுபாடு காட்டுவதாக உள்ளதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் திருமணம், விவாகரத்து மற்றும் பராமரிப்பு தொடர்பான காதி நீதிமன்றத் தீர்ப்புகளால் பெண்கள் மோசமாக பாதிக்கப்படுவதாகவும் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் குறித்து நாம் மிகுந்த அவதானிப்புடன் உள்ளோம்.


ஃபஸக் விவாகரத்துக்கான விண்ணப்பங்கள் குறித்து விசாரிக்கும் சந்தர்ப்பங்களில் காதி மதிப்பீட்டாளர்களுடன் அமர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தலுடன் பரிந்துரைக்கிறோம். முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து ஆலோசனை சபையினால் பரிந்துரைக்கப்படும் குழாமிலிருந்து காதியின் ஆலோசனையுடன் மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறைந்தது இரு பெண் அங்கத்தவர்களுடன் குறைந்தபட்சம் மூன்று மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


மதிப்பீட்டாளர்கள் மூவரினதும் எழுத்து மூலமான கருத்துகள் தனித்தனியாக பதிவுசெய்யப்பட வேண்டும். காதி முடிவெடுக்கும்போது அவர்களது கருத்தை கருத்திற்கொள்ளவேண்டும். மதிப்பீட்டாளர்களின் கருத்துக்கள் பதிவின் ஒரு பகுதியாக இருப்பதோடு மேன்முறையீடு அல்லது தீர்ப்பு மீளாய்வு கோரப்படும் சந்தர்ப்பத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு காதிக்கும் பயிற்சி பெற்ற திருமண ஆலோசகர்கள் மற்றும் மத்தியஸ்தர்களை உள்ளடக்கிய குழாம் உதவவேண்டும். அந்தக் குழாம்கள் அனைத்தும் பெரும்பான்மையாக பெண்களைக் கொண்டவையாக இருத்தல் வேண்டும்.


பதிவாளர்களாக பெண்களை நியமனம் செய்வதை நாம் பரிந்துரைக்கிறோம். அவ்வாறான நியமனங்களை வழங்கும்போது, கலாசார மற்றும் சமூக அக்கறைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


மேற்கூறிய பரிந்துரைகளை சில ஆண்டுகள் நடைமுறைப்படுத்தியதன் பின்னர் பெண் காதிகளின் நியமனம் குறித்து மீள்பரிசீலனை செய்யலாம் என நாம் கருதுகிறோம்.

7. மதாஉ


திருமண பந்தத்திலிருந்து பிரிதல் என்பது மூன்று வழிமுறைகளில் நிகழ முடியும்:


• தலாக் (விவாகரத்து)
• ஃபஸக் (நீதிமன்றம் ஊடாகப் பிரிதல்)
• ஃகுல்உ

 

தலாக் மற்றும் ஃபஸக் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடாவது, தலாக் செய்யும்போது கணவனது முனைப்பினால் திருமண உறவு முடிவடைகிறது, அத்துடன் இம்முறையானது குறிப்பிட்ட, நன்கறியப்பட்ட சொற்றொடர்களை உள்ளடக்கியதாகும். ஃபஸக் முறையானது திருமண ஒப்பந்தத்தை வலிதற்றதாக்குவதும் திருமணபந்தம் ஒருபோதும் இருந்திராதது போல் முற்றிலுமாக முடிவுறுத்துவதும் ஆகும். இதனை காதியினால் அல்லது ஷாஃபிஈ தீர்ப்பின் மூலம் மட்டுமே செய்யமுடியும்.


குல்உ என்பது குல்உ அல்லது தலாக் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் திருமணத்தை முடிவுறுத்துவது ஆகும். இங்கு திருமண பந்தத்திலிருந்து மனைவிக்கு விடுதலை வழங்குவதற்காக கணவன் ஓர் இழப்பீடு வழங்கலை ஏற்றுக் கொள்கிறான்.


மதாஉ என்பது திருமண உறவிலிருந்து விலகியவுடன் ஒரு கணவனால் மனைவிக்குச் செலுத்தப்படும் ஆறுதல் தொகை ஆகும். இத்தகைய கட்டணம் தலாக் மற்றும் குல்உ மண விலக்குகளின்போது மட்டுமே செலுத்தப்படுகிறது. இருப்பினும், ஷாஃபிஈ சிந்தனைப்பள்ளியின்படி, ஒரு சந்தர்ப்பத்தில் ஃபஸக் முறையிலும் மதாஉ கட்டாயமாகிறது. அதாவது, மணவிலக்குக்கு கணவன் மட்டுமே காரணமாக இருக்கும் பட்சத்தில் அல்லது அவனது குறைகளுக்காக அவனே ஃபஸக் முறையில் பிரிவதற்காக காதியை நாடினால் மதாஉ கட்டாயமாகும். (உதாரணமாக, கணவனின் ஆண்மைக்குறைவு போன்ற காரணங்கள்.)


எவ்வாறெனினும், தலாக், ஃகுல்உ முறைகளில் மாத்திரம் விதியாகும் மதாஉ கொடுப்பனவைத் தவிர்க்கும் நோக்கில் ஃபஸக் முறையில் விவாகரத்துக் கோருமாறு மனைவி கணவனால் கட்டாயப்படுத்தப்பட்டதாக காதி கருதினால், அவர் தனது நாட்டத்தின்படி மதாஉ செலுத்துமாறு கணவனுக்கு உத்தரவிடமுடியும்.

 

8. விவாகரத்து


பிரிவு 27 (1) இற்கான திருத்தங்களைப் பொறுத்தவரை, தலாக் மொழிய விரும்பும் கணவனுடன் சமரசம் மேற்கொண்டு தீர்வினைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கமுடியுமாக இருந்தால் அதனை நாம் வரவேற்கிறோம். மேலும் திருமண பந்தத்தை பாதுகாப்பதற்கு இது ஒரு சரியான வழிமுறையாகும்.


தலாக் தொடர்பான சட்டத்தை ஆண்கள் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பிலும் அதன் விளைவாக பெண்கள்மீது சுமத்தப்படும் துயரங்கள் மற்றும் சிரமங்கள் காரணமாக அவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பிலும் நாம் மிகுந்த அவதானிப்புடன் உள்ளோம். நீதிமன்றுக்கு வெளியே தலாக் மொழியும் அறமற்ற தவறான பழக்கத்திலிருந்து ஆண்களைத் திருத்தி நெறிப்படுத்த அவ்வாறு நீதிமன்றுக்கு வெளியே தலாக் மொழிவதை ஒரு குற்றமாகக்கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எமது கருத்தாகும். அது ஆண் இணையர்கள் நீதிமன்றுக்கு வெளியே தலாக் சொல்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும். அவ்வாறான துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தால் தற்போதைய சட்டத்தின் பிரிவு 30 இன்படி வழக்குப்பதிவு செய்யப்படவேண்டும்.


இது போன்றதொரு நடைமுறையை சிங்கப்பூரின் AMLA சட்டமும் எடுத்தாள்கிறது.


46B. — கணவனது மொழிதலால் விவாகரத்து


1. திருமணமான ஒருவர் முஸ்லிம் சட்டத்தின்படி விவாகரத்துக்கோரி நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்.


2. விண்ணப்பம் கிடைக்கப்பெற்றவுடன், உப பிரிவு (1) இன் கீழ் சம்பந்தப்பட்ட மனைவிக்கு நீதிமன்ற அறிவித்தலை விடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.


3. குறித்த நபர் விவாகரத்தை மொழிந்து, முஸ்லிம் சட்டத்தின்படி அவ்விவாகரத்து செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் திருப்தி அடையும் பட்சத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, விவாகரத்தைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.


அறிக்கையின் முடிவு.

Last modified onவெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2021 11:45

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.