புத்தர் சிலை சேதம் செய்யப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

டிச 26, 2018

ஊடக அறிக்கை

26.12.2018 / 17.04.1440

புத்தர் சிலை சேதம் செய்யப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது

நேற்று முன் தினம் மாவனல்லை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள சமய நிந்தனைக்கான செயற்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் பௌத்தர்கள் வழிபடக்கூடிய புத்தரின் சிலையை சேதம் செய்தமை இனங்கள் மத்தியிலுள்ள சௌஜன்யத்தையும், புரிந்துணர்வுகளையும் இல்லாமல் செய்து விடும் செயலாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காண்கிறது. இவ்வாறு சிலைகளை சேதம் செய்வதோ, அல்லது அவற்றை இழிவு படுத்துவதோ இஸ்லாமிய போதனைகளல்ல என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றது.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்நாட்டில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பேதமின்றி ஐக்கியமாகவும், புரிந்துணர்வுடனும் தத்தமது சமயப்போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் இத்தருணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்து விடும்.

எனவே இவ்விடயத்தை யார் மேற்கொண்டிருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குரிய தீர்ப்பை உரிய முறையில் வழங்கி இத்தகைய செயல்கள் இனிவரும் காலங்களில் நடை பெறாத வண்ணம் இருக்க ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதனை காரணமாக வைத்து வன்முறையை தூண்டுவதை தடுத்து நிறுத்துமாறும்  ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

 

அஷ்-ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்

செயலாளர் அகில இலங்கை ஜமஇய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.