ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு வேண்டிக் கொள்ள வில்லை

அக் 13, 2017

2017.10.13 / 1439.01.22

ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவோ அதன் தலைவரோ யாரிடமும் வேண்டிக் கொள்ள வில்லை

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் 'வழக்குகளை வாபஸ் பெற்று ஞானசார தேரரை காப்பாற்ற முயற்சி' என்ற செய்தி பரவி வருகின்றுது. இதில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் வேண்டியதாக கூறப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். உண்மைக்கு புறம்பான இவ்வாறான செய்திகளை எழுதுகின்றவர்களும் பரப்புபவர்களும் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.

மேற்படி விடயம் சம்பந்தமாக பின்வரும் விடயத்தை அகில இகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா அனைவருக்கும் அறியத்தர விரும்புகின்றது.

இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்ப அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எடுத்துள்ள முயற்சிகள் நாம் அறிந்ததே. இதில் 2012 ஆம் ஆண்டு ஜம்இய்யா வெளியிட்ட சகவாழ்வு பிரகடனம் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வகையில் இஸ்லாம் பற்றிய தெளிவு பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும், சத்தியம் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜம்இய்யா செயற்படுகின்றது. அதற்கான முயற்சிகளாகவே ஜம்இய்யாவின் சமாஜ சங்வாத புத்தக வெளியீடும் பிற மதத் தலைவர்களுடனான சந்திப்புகளும் காணப்படுகின்றன.

ஞானசார தேரரோடு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று ஜம்இய்யாவோ ஜம்இய்யாவின் தலைவரோ யாரிடமும் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாக சிலர் குறித்த தேரர் இஸ்லாம் பற்றிய சில சந்தேகங்கள் பற்றி கலந்துரையாடி முஸ்லிம்களுடனான தனது பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்புவதாகவும் அதற்காக அவருடன் சந்திப்பொன்று நடாத்தப்பட இருப்பதாகவும் கூறி அதில் உலமாக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஜம்இய்யாவிடம் வேண்டிக்கொண்டனர். இதன்போது குறித்த இவ்விடயத்தில் அனுபமுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களையும் பிரிதொரு சட்டத்தரணியையும் ஜம்இய்யாவின் தலைவர் தொடர்பு கொண்டு இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என ஆலோசனை பெற்றார். அதன்போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் குறித்த தேரரை சந்திப்பதில் பிரச்சினையில்லை என்றும் தான் இச்சந்திப்பில் கலந்துக் கொள்ள போவதில்லை என்றும் ஞானசார தேரருடனான வழக்குகள் விடயத்தில் அவர் நீதிமன்றத்திலே தனது பிழையை ஏற்றுக் கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள அஷ்-ஷைக் பாழில் பாரூக் அனுப்பப்பட்டார்.

அடுத்தநாள் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அஷ்-ஷைக் பாழில் பாரூக் அவர்;கள் குறித்த தேரர் மீதான வழக்குகள் பற்றி அங்கு கலந்துரையாடவில்லை என்பதாகவும் மாறாக அவரிடம் காணப்பட்ட இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்கு பதில் வழங்கும் வகையியே சந்திப்பு நடைபெற்றதாகவும் உறுதிப்படுத்தினார்.

இவ்விடயம் ஜம்இய்யாவின் கடந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது, குறித்த தேரர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தான் முன்வைத்த கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்டு, உண்மையில் இஸ்லாம் பற்றிய அவரது தப்பபிப்பிராயங்களுக்கு தெளிவு பெற விரும்பினால் அவருடன் உரையாடலை தொடரலாம் என்றும் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக குறித்த சட்டத்தரணிகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

எனவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். பிழையான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறு சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017 12:35

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.