இரத்ததானம் இஸ்லாமிய ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்டதா என்று வினவி 2007.10.26 தேதியிடப்பட்டு தங்களால் அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மனித சமுதாயத்துக்கு மத்தியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் தேவைகளும் ஏற்படுகின்ற வேளையில் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வது மனிதாபிமானக் கடமையாகும். இவ்வாறு உதவி செய்யும் போது நன்மையான விடயங்களுக்கு மட்டும் உதவ வேண்டும், பாவமான விடயங்களுக்கு உதவக் கூடாது என்பதை பின் வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது:

'இன்னும் நன்மைக்கும், பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள் பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.'  (அல்-மாயிதா: 02)

இரத்தம் மனித உடலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். எனவே மனிதனுக்கு சத்திரசிகிச்சை செய்யும் போது அல்லது வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் போது இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது முன்கூட்டி இரத்த வங்கியில் சேமிப்பதற்கு நாடினாலோ பின்வரும் நிபந்தனைகளுடன் அதை வழங்கி உதவி செய்வது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது:                                   

  1. இரத்தம் வழங்கக் கூடியவருக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.
  2. தேவையான அளவு இரத்தம் மாத்திரமே பெறப்பட வேண்டும்.
  3. இரத்தம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
  4. சிகிச்சையளிப்பதற்கு இரத்தம் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லாமலிருத்தல்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.