யஃஜுஜ் மஃஜுஜ் தொடர்பான மார்க்க விளக்கம்


2021.01.18
1442.06.04

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


யஃஜூஜ், மஃஜூஜ் என்பவர்கள் யாவர்? அவர்கள் வெளியாகிவிட்டனரா? உலக அழிவு நெருங்கிவிட்டதா? என்பன தொடர்பான கேள்விகள், பலர் மூலம் தொடராக வினப்படுகின்றன.


இவற்றைப்பற்றி அல் குர்ஆன் அஸ் ஸூன்னாவின் ஒளியில் தெளிவு பெறுவது பொருத்தமானதாகும். யஃஜூஜ், மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவது மறுமையின் இறுதியாக நிகழும் பெரிய அடையாளங்களில் ஓர் அடையாளமாகும் என்பது அல்குர்ஆனில் சுருக்கமாகவும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் தமது பகுத்தறிவு வாதங்களை முன்வைத்து, யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்ற தவறான ஒரு பிரச்சாரத்தை முன்வைத்து, சமூகத்தில் வீணான குழப்பங்களை உண்டுபண்ணுகின்றனர். இவர்களின் இந்தப் போங்கு ஆதாரபூர்வமான பல நபிமொழிகளை மறுக்கும் நிலையை ஏற்படுத்தி, சமூகத்தை ஒரு பேராபத்தின் பக்கம் இட்டுச்செல்ல வழிவகுக்கும்.


யஃஜூஜ், மஃஜூஜ்; கூட்டத்தினர் மனிதர்களில் உள்ள ஒரு பிரிவினராவர். நபி நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புதல்வர்களில் ஒருவரான யாபிஸ் என்பவரது சந்ததியினராவர். அவர்கள் உலகில் பெரும் குழப்பங்களில் ஈடுபட்டதன் காரணமாக துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூலம், அவர்கள் இருந்த இடத்திலிருந்து வெளிவர முடியாமல் பெரும் சுவர் கட்டப்பட்டு தடுக்கப்பட்டுள்ளனர்.


இதனை பின்வரும் அல் குர்ஆன் வசனம் உறுதி செய்கின்றது :

قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَاْجُوْجَ وَمَاْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَـنَا وَبَيْنَهُمْ سَدًّا‏ (سورة الكهف : 94)


(யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரால் துன்புறுத்தப்பட்ட) அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது (குழப்பம்) செய்கிறார்கள்;. ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள். (அல் கஹ்ஃப் : 94).

فَمَا اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا‏ قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّىْ‌ ۚ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّىْ جَعَلَهٗ دَكَّآءَ‌ ۚ وَكَانَ وَعْدُ رَبِّىْ حَقًّا ‏ (سورة الكهف : 97-98)


எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை; அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை; இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும். (மறுமைநாள் ஏற்படும் என்ற) என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே என்று (துல்கர்னைன் அலைஹிஸ் ஸலாம் அவர்கள்) கூறினார். (அல் கஹ்ஃப் : 97-98).


இவ்வசனத்தில் (மறுமைநாள் பற்றிய அல்லாஹ்வுடைய) வாக்குறுதி நிறைவேறும்போது அச்சுவர் தரைமட்டமாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அல் அன்பியாஃ என்ற அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:


حَتّٰٓى اِذَا فُتِحَتْ يَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ يَّنْسِلُوْنَ‏ وَاقْتَـرَبَ الْوَعْدُ الْحَـقُّ فَاِذَا هِىَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِيْنَ كَفَرُوْا ؕ يٰوَيْلَنَا قَدْ كُنَّا فِىْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُـنَّا ظٰلِمِيْنَ‏. (سورة الأنبياء : 97)


யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தினர்) ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவும் படியாக, அவர்களுக்கு வழி திறக்கப்பட்டுவிட்டால், உண்மையான வாக்குறுதி (அதாவது மறுமை நாள்) நெறுங்கி விடும். (அதைக்காணும்) காஃபிர்களின் பார்வைகள் திறந்தபடியே நிலைகுத்தி நின்றுவிடும்; (அன்றியும் அவர்கள்) எங்களுக்கு கேடுதான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப் படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; அது மட்டுமல்ல, நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம் (என்று கூறுவார்கள்). (அல்-அன்பியாஃ : 96,97).


இவ்வசனத்தில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர், பூமியில் பரவும்படியாக அவர்களது தடுப்புச் சுவர் திறக்கப்பட்டுவிட்டால், அப்போது ‘உண்மையான வாக்குறுதி (அதாவது மறுமைநாள்) நெருங்கிவிடும்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதன்மூலம் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர், வெளிவந்தவுடன், மிக அவசரமாக மறுமைநாள் வந்துவிடும் என்பது தெளிவாகின்றது.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “உண்மையான வாக்குறுதி” மறுமைநாள் தான் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மற்றும் தப்ஸீர் கலை வல்லுனர்களின் விரிவுரைகள் தெளிவுபடுத்துகின்றன.


இந்த விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு முன் மார்க்கத்தின் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

1. அல்லாஹ் அல் குர்ஆனை அரபுமொழியில் அருளியுள்ளான்; அரபுமொழி என்பது மிகவும் கருத்தாழமும் பொருற் செரிவும் கொண்ட வார்த்தைகளை உள்ளடங்கிய மொழியாகும்.

2. அல் குர்ஆனுக்கு சரியான தெளிவை வழங்க நபியவர்களின் (சொல், செயல், அங்கீகாரம்) எனும் ஸூன்னா ஆக்கப்பட்டுள்ளது.


وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ. (سورة النحل : 44)


(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அந்நஹ்ல் : 44).


3. அல் குர்அன் மற்றும் அஸ் ஸூன்னா ஆகியவை வஹிய்யாக இருப்பதனால், அவற்றில் ஒன்று மற்றறொன்றிற்கு மாற்றமாக இருக்க முடியாது; வெளிரங்கத்தில் ஏதேனும் ஒன்று மற்றொன்றிற்கு மாற்றமாக இருப்பது போன்று தென்பட்டால், அல் குர்ஆனின் ஒரு வசனம் மற்ற வசனத்திற்கு விளக்கமாக இருக்கும். அல்லது ஒரு வசனத்திற்கு ஹதீஸ்கள் விளக்கமாக இருக்கும்; ஹதீஸ்களிலும் அதுபற்றிய தெளிவு கிடைக்கப்பெறாவிட்டால், மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஏனைய மூலாதாரங்களின் ஊடாக அவற்றிற்குப் பொருத்தமான கருத்தை உறுதிமிக்க மார்க்க அறிஞர்களது கருத்தில் இருந்து விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

4. அல் குர்ஆன் வசனங்களுக்கு விரிவுரை செய்யும்போது கவனிக்க வேண்டிய பல நிபந்தனைகள் இருப்பதால், பிந்திய கால மார்க்க அறிஞர்கள் அத்தியாவசிய நிலையிலன்றி முஸ்லிம் உம்மத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சஹாபாக்கள், தாபிஈன்கள், மற்றும் ஆரம்பகால தப்ஸீர்கலை வல்லுனர்களின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டே விளக்கம் கொடுத்து வந்துள்ளனர்.

5. மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்த ஓர் ஆதாரமுமின்றி ஒருவர் தனது சுயசிந்தனை மற்றும் மனோஇச்சைப்படி அல் குர்ஆன், அஸ் ஸூன்னாவிற்கு கருத்துக் கூறுவதும், விளக்கமளிப்பதும் மார்க்கத்திற்கு முற்றிலும் முரணானதும் ஆபத்தானதும் தடுக்கப்பட்டதுமாகும்.

6. உறுதி மிக்க மார்க்க அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல் குர்ஆன் விரிவுரைகளில் முக்கிய இடம்வகிக்கும் தப்ஸீர் அல் குர்துபீ, தப்ஸீர் இப்னு கஸீர், தப்ஸீர் அல்கபீர், தப்ஸீர் அல் பைழாவி மற்றும் தப்ஸீர் ஸாதுல் மஸீர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றை அடிப்படையாகக் கொண்டே பிற்காலத்தில் பல அல் குர்ஆன் விளக்கவுரைகள் எழுதப்பட்டுள்ளன.


எனவே, மேற்கூறப்பட்ட அடிப்படைகளைக் கருத்திற் கொண்டே மேற்கண்ட வசனங்களுக்கும் தெளிவுபெற வேண்டும்.
அந்தடிப்படையில், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் வருகை பற்றிய உறுதியான நபி மொழிகளில், அவர்கள் உலக முடிவு ஏற்பட நெருங்கும் போது, நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பூமிக்கு வருகை தந்து, நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொட்டும் நபி ல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வரைக்கும் எச்சரிக்கப்பட்டு வந்த தஜ்ஜாலின் குழப்பங்கள் முடிவுற்ற பின்னரே இக்கூட்டத்தார் வெளிவருவர் என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அவ்வாறான சில ஹதீஸ்கள் பின்வருமாறு :
முதலாவது : ஸஹீஹூ முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்.


عن النواس بن سمعان ، قال : ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال ذات غداة ، فخفض فيه ورفع ، حتى ظنناه في طائفة النخل، فلما رحنا إليه عرف ذلك فينا ، فقال : " ما شأنكم؟ " قلنا : يا رسول الله ، ذكرت الدجال غداة ، فخفضت فيه ورفعت.... فيطلبه حتى يدركه بباب لد فيقتله ، ثم يأتي عيسى ابن مريم قوم قد عصمهم الله منه ، فيمسح عن وجوههم ، ويحدثهم بدرجاتهم في الجنة ، فبينما هو كذلك إذ أوحى الله إلى عيسى : إني قد أخرجت عبادا لي لا يدان لأحد بقتالهم ، فحرز عبادي إلى الطور . ويبعث الله يأجوج ومأجوج ، وهم من كل حدب ينسلون….. (صحيح مسلم – رقم الحديث: 2937 - بَابُ ذِكْرِ الدَّجَّالِ وَصِفَتِهِ وَمَا مَعَهُ – تبويب الإمام النووي رحمه الله)


பின்னர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள்; இறுதியில், பாபு லுத்து எனும் இடத்தில் அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார். இதற்கிடையே, ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ், நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை தூர் மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள் என்று வஹீ அறிவிப்பான். பின்னர், அல்லாஹ் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள்.
(ஸஹீஹ{ முஸ்லிம் :2937 – பாடம் : தஜ்ஜால்).


குறித்த ஹதீஸில், ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களினால் தஜ்ஜால் அழிக்கப்பட்ட பின்னர், அவர்கள் உலகில் வசிக்கும் காலத்தில் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகுவார்கள் என்பது தெளிவாகின்றது.


இரண்டாவது : முஸ்னத் அஹ்மதில் இடம்பெறும் ஹதீஸ்.


عَنِ ابْنِ مَسْعُودٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لَقِيتُ لَيْلَةَ أُسْرِيَ بِي إِبْرَاهِيمَ، وَمُوسَى، وَعِيسَى "، قَالَ: " فَتَذَاكَرُوا أَمْرَ السَّاعَةِ، فَرَدُّوا أَمْرَهُمْ إِلَى إِبْرَاهِيمَ، فَقَالَ: لَا عِلْمَ لِي بِهَا، فَرَدُّوا الْأَمْرَ إِلَى مُوسَى، فَقَالَ: لَا عِلْمَ لِي بِهَا، فَرَدُّوا الْأَمْرَ إِلَى عِيسَى، فَقَالَ : أَمَّا وَجْبَتُهَا، فَلَا يَعْلَمُهَا أَحَدٌ إِلَّا اللهُ، ذَلِكَ وَفِيمَا عَهِدَ إِلَيَّ رَبِّي عَزَّ وَجَلَّ أَنَّ الدَّجَّالَ خَارِجٌ، قَالَ: وَمَعِي قَضِيبَينِ ، فَإِذَا رَآنِي، ذَابَ كَمَا يَذُوبُ الرَّصَاصُ، قَالَ: فَيُهْلِكُهُ اللهُ، حَتَّى إِنَّ الْحَجَرَ، وَالشَّجَرَ لَيَقُولُ: يَا مُسْلِمُ، إِنَّ تَحْتِي كَافِرًا، فَتَعَالَ فَاقْتُلْهُ، قَالَ: فَيُهْلِكُهُمُ اللهُ، ثُمَّ يَرْجِعُ النَّاسُ إِلَى بِلَادِهِمْ وَأَوْطَانِهِمْ، قَالَ: فَعِنْدَ ذَلِكَ يَخْرُجُ يَأْجُوجُ، وَمَأْجُوجُ، وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ، فَيَطَئُونَ بِلَادَهُمْ، لَا يَأْتُونَ عَلَى شَيْءٍ إِلَّا أَهْلَكُوهُ، وَلَا يَمُرُّونَ عَلَى مَاءٍ إِلَّا شَرِبُوهُ، ثُمَّ يَرْجِعُ النَّاسُ إِلَيَّ فَيَشْكُونَهُمْ، فَأَدْعُو اللهَ عَلَيْهِمْ، فَيُهْلِكُهُمُ اللهُ وَيُمِيتُهُمْ، حَتَّى تَجْوَى الْأَرْضُ مِنْ نَتْنِ رِيحِهِمْ، قَالَ: فَيُنْزِلُ اللهُ عَزَّ وَجَلَّ الْمَطَرَ، فَتَجْرُفُ أَجْسَادَهُمْ حَتَّى يَقْذِفَهُمْ فِي الْبَحْرِ " قَالَ أَبِي: " ذَهَبَ عَلَيَّ هَاهُنَا شَيْءٌ لَمْ أَفْهَمْهُ، كَأَدِيمٍ "، وَقَالَ يَزِيدُ يَعْنِي ابْنَ هَارُونَ: " ثُمَّ تُنْسَفُ الْجِبَالُ، وَتُمَدُّ الْأَرْضُ مَدَّ الْأَدِيمِ " ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ هُشَيْمٍ، قَالَ: " فَفِيمَا عَهِدَ إِلَيَّ رَبِّي عَزَّ وَجَلَّ: أَنَّ ذَلِكَ إِذَا كَانَ كَذَلِكَ، فَإِنَّ السَّاعَةَ كَالْحَامِلِ الْمُتِمِّ، الَّتِي لَا يَدْرِي أَهْلُهَا مَتَى تَفْجَؤُهُمْ بِوِلَادَتِهَا لَيْلًا أَوْ نَهَارًا ". (مسند أحمد : 3556)


இஸ்ராவுடைய இரவில் நான் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம், மூஸா அலைஹிஸ் ஸலாம், மற்றும் ஈஸா அலைஹிஸ் ஸலாம் ஆகியோரை சந்தித்தேன். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மறுமைநாள் விடயமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த விடயத்தை இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள், எனக்கு அது சம்பந்தமான அறிவு கிடையாது என்று கூற, பின்னர் அதனை மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் எனக்கு அது சம்பந்தமான அறிவு கிடையாது என்று கூறினார்கள்.
பின்னர் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அது எப்போது உண்மையாக நிகழும் என்று அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; அவ்விடயத்தில் அல்லாஹூ தஆலா எனக்கு வாக்குறுதியளித்ததாவது, நிச்சயமாக தஜ்ஜால் வெளியாகக்கூடியவன்; என்னிடம் இரண்டு தடிகள் இருக்கும்; அவன் என்னைக் கண்டால், ஈயம் கரைவதைப் போன்று கரைந்துவிடுவான் என்று ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ் அவனை அழித்துவிடுவான்….
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள்: அந்த நேரத்தில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் எல்லாப் பக்கங்களிலிருந்தும் மேட்டுப் பகுதியிலிருந்து வெளியாகுவார்கள். அவர்கள் அவர்களது ஊர்களை கடந்து செல்வார்கள்; அவர்கள் செல்லக்கூடிய இடங்களில் இருக்கக்கும் அனைத்தையும் அழித்துவிடுவார்கள். மேலும், தண்ணீரைக் கடந்து சென்றால், அதனையும் குடித்துவிடுவார்கள். பின்னர் மனிதர்கள் என்பக்கம் திரும்பி அவர்களைப் பற்றி முறைப்பாடு செய்வார்கள்; நான் அல்லாஹூ தஆலாவிடத்தில் அவர்களுக்கு எதிராக துஆ செய்வேன்; அல்லாஹூ தஆலா அவர்களை அழித்துவிடுவான். மேலும், அல்லாஹூ தஆலா, அவர்களை இறக்கச் செய்வான். அவர்களது துர்வாடை காரணமாக பூமி துர்நாற்றமுடையதாக ஆகிவிடும்.


அதன்பிறகு அல்லாஹூ தஆலா மழை பொழியச் செய்து, அவர்களது உடம்புகளை அம்மழை இழுத்துச் சென்று கடலில் போட்டுவிடும் என்று ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு ஹாரூன் ரஹிமஹூல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்; பின்னர் மலைகள் தூசியாக மாற்றப்பட்டு, பூமி ஒரு தோலைப் போன்று நீட்டப்படும்.


இவ்வடையாளங்கள் எனக்கு அல்லாஹ் வாக்குறுதியளித்தவற்றில் உள்ளவைதான். இவ்வாறு நிகழ்ந்துவிடும் போது, மறுமைநாள் நிகழ்வது முற்றிலும் நெருங்கியிருக்கும்; அந்நேரம் நிறைமாதக் கற்பிணி, இரவிலா அல்லது பகலிலா எப்பொழுது குழந்தையை ஈன்றெடுப்பாள் என்று கூடத் தெரியாதவளாக இருப்பாள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்னத் அஹமத் : 3556).


இந்த ஹதீஸிலும், யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர், ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களினால், தஜ்ஜால் கொல்லப்பட்டதன் பின்னரே வெளியாவர் என்றும் இவை நடந்து முடிந்தவுடன் நிறைமாதக் கற்பிணி தீடீரென குழந்தை பிரசவிப்பது போன்று கியாமம் திடீரென ஏற்பட்டு விடும் என்பது தெளிவாகின்றன.
மேற்குறித்த இரண்டு நபிமொழிகளும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் இன்னும் வெளியாகவில்லை; மாறாக அவர்கள் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வானிலிருந்து இறங்கிய பின்னரே வெளியாவர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இவ்விரு ஹதீஸ்களும் ஆதாரபூர்வமானவையாகும்.


இவ்வாறான நபி மொழிகளை அடிப்படையாகக் கொண்டு, அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் கூறப்பட்டும், “எனது இரட்சகனின் வாக்கு” என்பது மறுமை நாளையே குறிக்கின்றது என மேற்குறிப்பிட்ட அல் குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுவே அல் அன்பியாஃ எனும் அத்தியாயத்திலும் தெளிவாக வந்துள்ளதெனவும் உறுதியிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இமாம் இப்னு கஸீர் றஹிமஹூல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்:


(فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي) أي : إذا اقترب الوعد الحق. (تفسير ابن كثير)


இரு அத்தியாயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள "வாக்கு" என்பது ஒரே தினத்தையே குறிக்கின்றது.
மேலும், பிரபல தஃப்ஸீர் கலை வல்லுனர் இமாம் அபூ ஜஃபர் அத்தபரீ றஹிமஹூல்லாஹ் அவர்கள் இதனைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:


حَتَّىٰ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَاقْتَـرَبَ الْوَعْدُ الْحَـقُّ وذلك وعد الله الذي وعد عباده أنه يبعثهم من قبورهم للجزاء والثواب والعقاب. ( تفسير الطبري)


யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் திறக்கப்பட்டால் உண்மையான வாக்கு நெருங்கி விட்டது. அதுதான் அல்லாஹ் அடியார்களை கேள்விகணக்குக்காக எழுப்பும் மறுமைநாளாகும்.


فأما الْوَعْدُ الْحَقُّ فهو القيامة ( زاد المسير في علم التفسير)


உண்மையான வாக்குறுதி என்பது, மறுமைநாளாகும்; என்று இமாம் இப்னுல் ஜவ்ஸீ றஹிமஹூல்லாஹ் அவர்கள் "ஸாதுல் மஸீர் பீஇல்மித் தப்ஸீர்" என்ற தப்ஸீரில் குறிப்பிடுகின்றார்கள்.


இலங்கையிலும் உலகத்தில் பல நாடுகளிலும் மத்ரஸா மாணவர்களுக்கு தப்ஸீர் பாடத்தில் பிரதானமான நூலாகிய, தப்ஸீர் அல் ஜலாலைன் என்ற நூலில் பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டடுள்ளது:


فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي بخروجهم القريب من البعث جعله دكا. ( تفسير الجلالين)


மக்கள் மண்ணறைகளில் இருந்து எழுப்பப்படும் மறுமைக்கு நெருக்கமாக அவர்கள் வெளியாகுவதைக் கொண்டு எனது இரச்சகனின் வாக்கு வந்து விட்டால் அதனைத் தரைமட்டமாக்கிவிடுவான்.


இக்கருத்தே உறுதியான எல்லா தப்ஸீர்களிலும் கூறப்பட்டுள்ள கருத்தாகும். இதற்கு மாற்றமாக யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்றும் அவர்கள் குறித்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சிலர் கூறுவது இவ்வசனங்களின் கருத்தை தவறாகப் புரிந்து கொண்டமையாகும்.


யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்று கூறுபவர்களுக்கு இவ்வாறான சந்தேகம் ஏற்படுவதற்கான காரணங்களாக பின்வரும் விடயங்களைக் காணலாம் :


1. அல் அன்பியாஃ என்ற அத்தியாயத்தில் வந்துள்ள “புதிஹத் யஃஜூஜூ” என்பதற்கு முன்னுள்ள வசனத்திற்கு பிழையாகக் கருத்துக் கொடுத்தமை, அவ்வசனம் பின்வருமாறு.


وَ حَرٰمٌ عَلٰى قَرْيَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا يَرْجِعُوْنَ‏. (سورة الأنبياء : 95)


நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
இங்கு கூறப்பட்டுள்ள ஊர் என்பது இஸ்ரேல் என்பதாக பொருள் கொண்டு அவ்வூர் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது. யஃஜூஜ், மஃஜூஜ் திறக்கப்படும் வரை அவர்களால் திரும்ப முடியாது. இப்போது அவர்கள் திரும்பி வந்துள்ளனர். எனவே, யஃஜூஜ், மஃஜூஜ் வந்து விட்டனர் என வாதிடுகின்றனர்.


இது முற்றிலும் பிழையான வாதமாகும். இந்த வசனத்தில் இஸ்ரேலைப்பற்றியோ யூதக் குடியேற்றத்தைப் பற்றியோ எக்குறிப்பும் கூறப்படவில்லை; மாறாக இதற்கு இப்னு இப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறும் விளக்கம் பின்வருமாறு:


حرام علي قرية قال ابن عباس رضي الله عنه : وجب يعني قد قدر أن أهل كل قرية أهلكوا أنهم لايرجعون الي الدنيا قبل يوم القيامة (تفسير ابن كثير)


ஏவ்வூர் மக்களை அல்லாஹ் அவர்களின் பாவத்தின் காரணமாக அழித்து விட்டானோ, அவர்கள் மறுமைநாள் வரை திரும்பவும் உயிர் பெற்று உலகிற்கு வர முடியாது.
எனவே, யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வந்து, உலகம் முடிந்த பின்னரேயே அவர்கள் (அவ்வூர் மக்கள்) கேள்வி கணக்குக்காக வருவார்கள் என்பதே இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் எனப் பொருள் கொள்வது முற்றிலும் பிழையாகும்.


2. பின்வரும் நபிமொழியையும் தமது வாதத்திற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.


عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، رَضِيَ اللَّهُ عَنْها أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ» (صحيح البخاري - بَابُ قِصَّةِ يَأْجُوجَ، وَمَأْجُوجَ. رقم الحديث : 3346)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் றழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் 'இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?” என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்..” என்று பதிலளித்தார்கள்.
(ஸஹீஹூல் புகாரி - யஃஜுஜ் மஃஜுஜ் பற்றிய பாடம். ஹதீஸ் இலக்கம் : 3346)


இந்த நபிமொழியில் யஃஜுஜ், மஃஜூஜ் மீது கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து இச்சிறிய அளவு துவாரம் நபியுடைய காலத்திலேயே ஏற்பட்டுவிட்டதெனில் இப்போது அது பெரிதாகி அவர்கள் வெளிப்பட்டிருக்க வேண்டுமென சுயவியாக்கியானம் கூறுகின்றனர்.


எனினும், இதற்கு ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும் கருத்தாவது:


المراد أنه يكن في ذلك الردم ثقبة الي اليوم وقد انفتحت فيه اذ انفتاحها من علامات قرب الساعة فاذا اتسعت خرجوا وذلك بعد خروج الدجال (مرقاة المفاتيح شرح مشكاة المصابيح - بَابُ الْبُكَاءِ وَالْخَوْفِ)


இமாம் முல்லா அலி காரீ ரஹிமஹூல்லாஹ் அவர்கள் கூறுவதாவது; அந்நேரத்தில் ஏற்பட்ட அச்சிறிய துவாரம் இன்று வரை அப்படியே இருக்கிறது. அது விசாலமானால் அவர்கள் வெளியாவார்கள்; அது தஜ்ஜால் வெளியான பின்னர் ஏற்படும்.
(மிர்காத்துல் மபாதீஹ் ஷர்ஹூ மிஷ்காத்தில் மஸாபீஹ்)


பிற்காலத்தில் வந்த மார்க்க அறிஞர்களில் சிலர், பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்துக்கு மாற்றமாக, அவ்வணைக்கட்டு உடைந்துவிட்டது என்ற கருத்தில் இருந்தாலும் கூட, ஹதீஸில் மறுமைநாளின் இறுதிப் பெரிய அடையாளமாகக் கூறப்பட்டிருக்கும் யஃஜுஜ், மஃஜுஜ் இன்னும் வெளியாகவில்லை; அவர்கள் தஜ்ஜாலின் வருகைக்குப் பின்னரே வெளியாவர் என்றே உறுதியாகக் கூறுகின்றனர். எனவே, அவ்வணைக்கட்டு உடைந்துவிட்டது என்று கூறும் ஓரிரு அறிஞர்களின் கூற்றைத் தவறாகப் புரிந்து கொண்டு, இக்காலத்தில் சிலர் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வெளியாகிவிட்டனர் என்று நம்புவது அல்லது வாதம்புரிவது முற்றிலும் தவறானவையாகும்.


3. மனிதன் முன்னேறி, பூமியின் மூளைமுடுக்கெல்லாம் அவனது விரல் நுனியில் இருக்கும் காலத்தில், இவ்வாறான ஓர் அணை கண்டுபிடிக்கப் படவில்லையெனில் அது உடைந்துபோய் இருக்க வேண்டும் என வாதிடுகின்றனர்.
இவர்களின் இக்கூற்று யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறானதாகும்.


மனிதர்களது அறிவு ஆற்றலில் எவ்வளவுதான் உயர்ந்திருந்தாலும், மனித பலவீனத்துடனேயே அவன் படைக்கப்பட்டுள்ளான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முந்தைய விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாமற்போன பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்கள் பிறகு வந்தவர்களால் கண்டுபிடிக்கப் படுகின்றமையானது, மனித பலவீனத்திற்கு மிகத் தெளிவான சான்றாகும். கடல் மற்றும் சமுத்திரங்களில் விமானங்கள், கப்பல்களை இழக்கின்றனர். கடுமையான முயற்சிகள் மேற் கொண்ட போதிலும் அவர்களால் எத்தடயங்களையும் கண்டு பிடிக்க முடியாமல் போய்விடுகின்றன. அதே போன்று அமெரிக்கா போன்ற நாடும் கூட கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரம் வருடங்கள் கூட ஆகவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


முற்காலத்தில் வரண்டுபோய் காணப்பட்ட எத்தனையோ நிலங்கள் இன்று நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. அன்று காணப்பட்ட எத்தனையோ நகரங்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு இன்று அழிந்து விட்டன.இவ்வாறான நிலையில் நாம் அதனைக் காணவில்லை என்பதற்காக அதனை மறுப்பது அறிவுடமையாகாது.
மேற்குறித்த இந்த விடயங்களில் இருந்து தெளிவாவது யாதெனில், யஃஜுஜ், மஃஜுஜ் வெளியாகுவது மறுமையின்; பெரிய அடையாளங்களில் பிரதானமான ஒன்றாகும். அவர்கள் ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வெளியாகி, தஜ்ஜால் அழிக்கப்பட்டதன் பின்பே தோன்றுவர். தற்போது யஃஜுஜ், மஃஜுஜ் தோன்றிவிட்டனர்; அவர்கள் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு பிரதேசத்தை அல்லது ஒரு கூட்டத்தினரைக் குறிப்பிட்டுக் கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும். இவ்வாறு யூகம் கூறுவதானது, அல் குர்ஆன், அஸ் ஸூன்னா மற்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் தெளிவான விளக்கங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.


ஆகவே, குறித்த விடயம் வஹிய்யுடன் சம்பந்தப்பட்டதாகவும், எமது மட்டுப்படுத்தப்பட்டள்ள சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதனால், இது போன்ற விடயங்களில் பகுத்தறிவுவாதத்தை பயன்படுத்துவதைத் தவிர்த்து, அல் குர்ஆன், ஹதீஸ்களில் கூறப்பட்டவற்றை அதற்குரிய நம்பத்தகுந்த உறுதிமிக்க அறிஞர்களின் கூற்றின் பிரகாரம் விளங்கிக் கொள்வதும் நம்புவதும் அவசியமாகும் என்பதுடன், எமது ஈமானுக்கும் பெரும் பாதுகாப்பாக இருக்கும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்                

செயலாளர், பத்வாக் குழு                        

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா          

      

 அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

 மேற்பார்வையாளர் - பத்வாக் குழு

 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா