மரணித்தவர்களின் உடல்களை பூமியில் அடக்கம் செய்வது தொடர்பான மார்க்க விளக்கம் 

 

2021.01.16

1442.06.02

 

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூ


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


அல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய நான்கும் இஸ்லாத்தின் சட்டவாக்க மூலாதாரங்களாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே புனித இஸ்லாம் மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் அமையப்பெறுகின்றன.

  • அல் குர்ஆன் என்பது அல்லாஹூ தஆலாவினால் இறக்கி வைக்கப்பட்ட வேதநூல்களில் இறுதி நூலாகும் என்பது முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடாகும்.
  • அல் ஹதீஸ் என்பது நபி முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், மற்றும் அங்கீகாரம் என அன்னாரின் வழிகாட்டல்களாகும்.
  • அல் இஜ்மாஃ என்பது அல் குர்ஆன் மற்றும் அல் ஹதீஸின் ஒளியில் பெறப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின், கருத்து வேற்றுமை காணப்படாத ஏகோபித்த தீர்வாகும்.
  • அல் கியாஸ் என்பது அவ்வப்போது ஏற்படும் நவீன விடயங்களை அல் குர்ஆன், அல் ஹதீஸின் ஆதாரங்களுடன் ஒப்பீடு செய்து தீர்வுகளை காணும் முறையாகும்.


இஸ்லாமிய மார்க்க சட்டவாக்கத்தைப் பொறுத்தவரையில், அல் குர்ஆன் முதலிடத்தை வகிக்கின்றது. அல் குர்ஆனின் சில வசனங்கள் மற்றைய சில வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. அதே போல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களும் அல்குர்ஆனுக்கு விளக்கமாகும். அல் குர்ஆனில் விரிவாக சொல்லப்படாத விடயங்கள் ஹதீஸ்களின் மூலமாகவே விளங்கிக் கொள்ளல் வேண்டும். உதாரணமாக, அல் குர்ஆன் தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ்ஜு ஆகியவற்றை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளது; எனினும், அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்ற விரிவான விளக்கமும் அவற்றுடன் தொடர்புபடும் உட்பிரிவு சட்டங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்படவில்லை; ஹதீஸ்கள் ஊடாகவே அவற்றை விளங்கிக்கொள்ள வேண்டும். இதனைப் பின்வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன:


وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ. (سورة النحل :44


அவ்வாறே இந்தக் குர்ஆனையும் (நபியே!) உங்களுக்கு இறக்கி வைத்தோம்; மனிதர்களுக்காக (உங்கள்மீது) இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக விளக்கப்படுத்துவதற்காக (இறக்கிவைத்தோம்). (அந்நஹ்ல் : 44).


وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ ۚ (سورة الحشر : 07)


மேலும், (நம்)தூதர் உங்களுக்கு எதைக் கொண்டுவந்தாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல் ஹஷ்ர் : 07).يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا ((سورة النساء : 59)


நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்;; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புபவர்களாக இருப்பின், அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள்; இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
(அந்நிஸா : 59).

அல் குர்ஆனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பினை நபி முஹம்மத் ஸல்லல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சாட்டப்பட்டுள்ளது என்பதுடன், அவர்களது ஏவல்களை எடுத்துநடத்தல்; அவர்களது விலக்கல்களை தவிர்ந்துநடத்தல் வேண்டும் என்பதையும் அல்குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.


மேற்சொல்லப்பட்ட சட்டவாக்க மூலாதாரங்களின் அடிப்படையில், நேரடியாக அல் குர்ஆனில் ஒரு விடயத்திற்கான தீர்வு கிடைக்கப்பெறாத போது, அல் ஹதீஸில் பெற்றுக்கொள்ளப்படும். அதில் கிடைக்கப்பெறாத போது, முறையே அல் இஜ்மாஃ, அல் கியாஸ் போன்ற துணை மூலாதாரங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்; இதுவே, சட்டவாக்க முறைமையாகும். எந்த ஒரு விடயத்தையும் இம்முறைகளைப் பேணியே ஆரம்பகாலம் தொட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றது.


அந்த வகையில், மரணித்த ஒருவரின் உடலை பூமியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதையே அல் குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய மூலாதாரங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.


அடக்கம் செய்வது பற்றிய அல் குர்ஆனின் வசனங்கள் :


1.   مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ ( سورة طه : 55)


இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம் இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும் வெளிப்படுத்துவோம். (தாஹா : 55).
இவ்வசனத்தில் “நீங்கள் மரணித்ததும் நாம் உங்களை பூமியினுள்ளே மீட்டுவோம்” என்று அல்லாஹ் கூறுவதன் மூலம், மரணித்த அனைவரும் பூமியின் பக்கம் மீட்டப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லாஹூ தஆலா குறிப்பிடுகின்றான்.


இக்கருத்தையே பின்வரும் வசமும் தெளிவுபடுத்துகின்றது :


2. قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْن (سورة الأعراف : 25) 


“அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், இன்னும் அதிலேயே நீங்கள் இறப்பீர்கள், (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப்படுவீர்கள்” என்று கூறினான். (அல் அஃறாப் : 25)


3. فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْأَةَ أَخِيهِ (المائدة:31 )


பின்னர் தம் சகோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக, அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். (அல் மாஇதா : 31).
இவ்வசனத்தில் அல்லாஹூ தஆலா, முதல் மனிதரும் முதலாவது நபியுமான ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர் மரணித்த பொழுது, அவரது பிரேதத்தை என்ன செய்வது என்று அறியாமல் தவித்த அவரது சகோதரனுக்கு, மரணித்தவரின் உடலை பூமியில் அடக்கம்செய்ய வேண்டும் என்ற முறையை ஒரு காகத்தை அனுப்பி கற்றுக் கொடுத்துள்ளான். இதன்மூலம், உலகில் மரணித்த முதல் மனிதரே பூமியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.


4. ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ (سورة عبس : 21)


“பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில் ஆக்குகிறான்”. (அபஸ : 21).
இந்த வசனத்தில் அல்லாஹூ தஆலா, ஒரு ஜனாஸா கப்ரில் அடக்கம் செய்யப்படுவதை, மரணித்தவருக்குச் செய்யும் ஒரு அருட்கொடையாகக் குறிப்பிடுகின்றான். உண்மையில் மரணித்தவருடைய உடலை பறவைகளுக்கோ, ஐவாய் மிருகங்களுக்கோ இரையாக ஆக்காமல் அல்லது அதன் துர்வாடையைக் கொண்டு மனிதர்கள் நோவினை பெறாமல், கப்ரில் அடக்கம் செய்யப்படுவதன் மூலம் அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்ற கருத்தை தப்ஸீர்கலை வல்லுனர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.


5. أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا أَحْيَاءً وَأَمْوَاتًا. (سورة المرسلات : 25. 26)


“உயிருள்ளோரையும் மரணித்தோரையும் அரவணைக்கக் கூடியதாக நாங்கள் பூமியை ஆக்கவில்லையா?” அல்லாஹூ தஆலா பூமியின் மேற்பகுதியை உயிருள்ளவர்கள் வசிக்கும் இடமாகவும், அதன் கீழ்பகுதியை மரணித்தவர்களின் ஒதுங்கும் தளமாகவும் ஆக்கியுள்ளான்.
இந்த வசனமும் மரணித்தவரை பூமியில் நல்லடக்கம் செய்யவேண்டும் என்ற அவசியத்தையே வலியுறுத்துகின்றது.


அடக்கம் செய்வது பற்றி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்கள் :


6. (عن أبي سعيدٍ الخُدْريِّ رضِيَ اللهُ عنه، أنَّ رسولَ اللهِ صلَّى الله عليه وسلَّم قال: اذهبوا، فادْفِنوا صاحِبَكم. (صحيح مسلم : 2236)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம், நீங்கள் சென்று உங்களது தோழரை நல்லடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2236)


7. (عن جابرٍ رَضِيَ اللهُ عنه، أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال: ادفِنوا القَتْلى في مصارِعِهم. (سنن أبي داود : 8557)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் என்ற இடத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களைக் குறித்து தம்தோழர்களிடம், அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட இடங்களிலேயே அவர்களை நல்லடக்கம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள்.
(ஸூனன் அபீ தாவூத் : 8557)

 

8. عَنْ عَلِيٍّ رضي الله عنه، قَالَ: لَمَّا مَاتَ أَبُو طَالِبٍ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ إِنَّ عَمَّكَ الشَّيْخَ الضَّالَّ قَدْ مَاتَ، قَالَ: " اذْهَبْ فَوَارِهِ قُلْتُ: إِنَّهُ مَاتَ مُشْرِكًا، قَالَ: اذْهَبْ فَوَارِهِ وَلَا تُحَدِّثْ شَيْئًا حَتَّى تَأْتِيَنِي «، فَوَارَيْتُهُ ثُمَّ أَتَيْتُهُ فَقُلْتُ قَدْ وَارَيْتُهُ فَأَمَرَنِي فَاغْتَسَلْتُ» (سنن النسائي : 193)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், அலி றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் நீங்கள் சென்று, உங்கள் தந்தை அபூ தாலிப் அவர்களை அடக்கம் செய்வீராக என்று கூறினார்கள். (ஸூனன் நஸாஈ : 193)


மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள், மரணித்த ஒருவரை பூமியில் கட்டாயம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.


அல் குர்ஆனில், ஒருவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்யவேண்டும் என்பதைத் தவிர வேறு எம்முறைகளும் கூறப்படவில்லை. அதேபோன்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் தெளிவாகவும் நேரடியாகவும் “அடக்கம் செய்யுங்கள்” என்ற ஏவலே வந்துள்ளது.


பொதுவாக ஒரு விடயத்தை செய்யுமாறு ஏவப்படுவது, அதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதையே குறிக்கின்றது. எனவே, இவ்விருமூலாதாரங்களை வைத்தே மார்க்க அறிஞர்கள் அடக்கம் மாத்திரமே செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு மாற்றமாக வேறு ஒரு முறையை கையாள்வது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்ட (ஹராம்) ஆகும் என்றும் கூறியுள்ளனர்.


ஒரு விடயத்தைப் பற்றி ஏவல் வந்து விட்டால், அதற்கு எதிரான விடயம் தடுக்கப்பட்டது என விபரமாக வரவேண்டும் என்பது சட்டவாக்கத்தில் அவசியம் கிடையாது. ஏனெனில், அந்த ஏவலில், அதற்கு மாற்றமான விடயம் தடுக்கப்பட்டது என்பது உள்ளடங்கியுள்ளது.


அடக்கம் செய்வது பற்றி இஜ்மாஃ (இஸ்லாமிய அனைத்து மார்க்க அறிஞர்களின் ஒட்டுமொத்த தீர்ப்பு) :


மரணித்தவரை பூமியில் நல்லடக்கம் செய்வது கட்டாயம் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என இமாம் இப்னுல் முன்திர், இமாம் அந் நவவி, இமாம் அல் மர்தாவீ, இமாம் இப்னுல் முலக்கின் மற்றும் இப்னுல் ஆபிதீன் றஹிமஹ{முல்லாஹ் போன்றோர் குறிப்பிட்டுள்ளார்கள்.


மேற்கண்ட மூலாதாரங்களின் அடிப்படையில், ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால், அவரது உடலை பூமியில் அடக்கம் செய்வது அவசியமாகும் என்பது தெளிவாகின்றது. அடக்கம் செய்வதற்கு மாற்றமாக, அதனை எரிப்பதோ அல்லது எங்காவது வீசிவிடுவதோ மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பாவமான காரியமாகும்.


ஏனெனில், மனிதன் உயிருடன் இருக்கும் போது எவ்வாறு கண்ணியமானானோ, அதே போன்று மரணித்த பின்பும் அவன் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவனாவான். அல்லாஹூ தஆலா அல் குர்ஆனில் 'நாம் மனிதர்களைக் கண்ணியப்படுத்தியுள்ளோம்' என்று கூறுகின்றான். (அல் இஸ்ரா : 70)


'மரணித்தவரின் எலும்பை முறிப்பது, உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போன்றாகும்.” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹூ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸூனனு அபீதாவூத் : 3207)


அந்த அடிப்படையில், முஸ்லிமான ஒருவர் மரணித்துவிட்டால், அவரது உடலைக் குளிப்பாட்டி, கபன்செய்து, தொழுகைநடாத்தி, முஸ்லிம்களது மையவாடியில் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது ‘பர்ளு கிபாயா’வாகும். இக்கடமைகளை முஸ்லிம்களில் சிலராவது கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். மார்க்கம் அனுமதித்திருக்கும் நிலைகளிலே தவிர இக்கடமைகளில் ஏதேனுமொன்று விடப்படுமேயானால், ஒட்டுமொத்த முஸ்லிம்கள் அனைவருமே அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக ஆகிவிடுவார்கள்.


எனவே, ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரை பூமியில் அடக்கம் செய்வதே இஸ்லாம் உலகில் தோன்றிய காலம் முதல் இன்றுவரை, இறுதிகாலம் வரைக்கும் உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் நடைமுறையாகும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்              

செயலாளர், பத்வாக் குழு                        

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா         

      

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)

தலைவர்,    

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்    

பதில் பொதுச் செயலாளர்,   

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

                          

 

___________________________________________________________________________________________________________________________________________________________________________________________

[1]  قال ابن المنذر رحمه الله : (وأجمعوا على أنَّ دَفْنَ المَيِّت لازِمٌ واجِبٌ على النَّاسِ لا يَسَعُهم تَرْكُه عند الإمكانِ، ومن قام به منهم سقط فَرْضُ ذلك على سائِرِ المُسلمين). ((الإجماع)) (ص: 44).

قال النووي رحمه الله: (دَفْنُ المَيِّت فرضُ كفايةٍ بالإجماعِ). ((المجموع)) (5/282). وقال: (واعلَمْ أنَّ غُسلَ الميِّت، وتكفينَه، والصَّلاةَ عليه، ودفنَه- فروضُ كفايةٍ بلا خلافٍ). ((المجموع)) (5/128).

قال المَرداويّ رحمه الله ُ: (قوله: (غُسل الميِّت، وتكفينُه، والصَّلاة عليه، ودفنُه- فرضُ كفايةٍ) بلا نزاعٍ). ((الإنصاف)) (2/330). وقال أيضًا: (حَمْله ودفْنه، فرضُ كفايةٍ إجماعًا). ((الإنصاف)) (2/378).

قال ابن الملقِّن رحمه الله : (الكَفَن للميِّت واجبٌ، وهو إجماعٌ، وكذا غُسلُه، والصَّلاةُ عليه، ودَفْنه). ((الإعلام)) (4/455).

قال ابن عابدين رحمه الله : (قوله (وحفْرُ قَبرِه... إلخ) شروعٌ في مسائِلِ الدَّفْن، وهو فرضُ كفايةٍ إن أمكَنَ، إجماعًا.حِلْيَة. واحترز بالإمكان عمَّا إذا لم يُمكِن؛ كما لو مات في سفينةٍ كما يأتي، ومُفادُه: أنَّه لا يُجزئ دفنُه على وَجْه الأرضِ ببناءٍ عليه، كما ذكره الشافعيَّة، ولم أرَه لأئمَّتنا صريحًا). ((الدر المختار وحاشية ابن عابدين)) (2/233).

[1]   دفن الميت فرض كفاية بالإجماع، وقد علم أن فرض الكفاية إذا تعطل أثم به كل من دخل في ذلك الفرض دون غيرهم، .....قال الشافعي رحمه الله: لو أن رفقة في سفر مات أحدهم فلم يدفنوه نظر إن كان ذلك في طريق آهل يخترقه المارة أو بقرب قرية للمسلمين فقد أساءوا ترك الدفن وعلى من بقربه دفنه، قال وإن تركوه في موضع لا يمر أحد أثموا وعصوا الله تعالى وعلى السلطان أن يعاقبهم على ذلك (المجموع شرح المهذب)

[1]  وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ (سورة الإسراء : 70) 

[1]  عن عائشة رضي الله عنها: أن رسول الله ﷺ قال: كسر عظم الميت ككسره حيًّا.( سنن أبي داود 3207)