அசாதாரண சூழ்நிலையில் ஜுமுஆத் தொழுகை தொடர்பான வழிகாட்டல் 

ACJU/FTW/2020/30-414

 

2020.11.16

1442.03.29

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலர், இக்கட்டான இச்சூழ்நிலையில் ஜுமுஆ தொழுகையை நிறைவேற்றும் விடயத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலை கோரிய வண்ணம் உள்ளனர்.

 

ஜுமுஆத் தொழுகை ஏனைய பர்ளான தொழுகைகளை விட்டும் சிறப்பாலும் சட்டத்தாலும், அதனை விடும் பொழுது எச்சரிக்கையாலும் வித்தியாசப்பட்ட ஒரு தொழுகையாகும். ஏனைய தொழுகைகளைப் போன்றல்லாது மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று சேர்ந்து தொழ வேண்டும் என்பதே ஜுமுஆத் தொழுகை விடயத்தில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலாகும்.


ஜுமுஆ நிறைவேறுவதற்கு பல ஒழுக்கங்களும் நிபந்தனைகளும் உள்ளன. அந்நிபந்தனைகளில் ஊரில் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அங்கு சமுகமளித்திருப்பதும் ஒன்றாகும். என்றாலும், குறித்த எண்ணிக்கை விடயத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற போதிலும், ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சேர்ந்த அறிஞர்கள் உட்பட இன்னும் பல அறிஞர்கள் 40 நபர்கள் சமுகமளித்திருப்பது கட்டாயம் என்றும் ஹனபி மற்றும் மாலிகி மத்ஹப்களில் அதைவிட குறைவான எண்ணிக்கையுடையோர் சமுகமளித்திருப்பதைக் கொண்டும் ஜுமுஆ நிறைவுறும் என்றும் கூறுகின்றனர்.


இதுபற்றிய விரிவான பத்வா 2017.11.02 ஆம் திகதி ACJU/FTW/2017/029-306 ஆம் இலக்கத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவு வெளியிட்டுள்ளது. https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1757-2019-10-11-05-26-46


ஏற்கனவே, 2020.06.16 ஆம் திகதியும், 2020.11.05 ஆம் திகதியும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களின்படி, ஷாபிஈ மத்ஹபின் மிக உறுதியான கருத்தை முன்வைத்து 40 நபர்கள் இல்லாதபட்சத்தில் ழுஹ்ரை தொழுது கொள்ள வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததை யாவரும் அறிந்ததே.


எனினும், நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் மஸ்ஜிதில் 25 நபர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் ஒன்று சேர முடியுமென்ற கட்டுப்பாடு உள்ளதாலும் தொடர்ந்து இந்நிலை நீடிப்பதால் மக்களுக்கு ஜுமுஆ விடயத்தில் பொடுபோக்கு ஏற்பட்டுவிடுமென்ற அச்சம் பலராலும் உணரப்படுவதாலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, மக்களுக்கு கீழ்வரும் வழிகாட்டலை வழங்குகிறது.

 

1. நாற்பது நபர்களை விடக் குறைந்த எண்ணிக்கையுடனும் ஜுமுஆ நிறைவேறும் என்ற ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த ஒருசில இமாம்கள் கருத்துத் தெரிவித்திருந்தாலும், ஷாபிஈ மத்ஹபின் பத்வாவுக்குரிய கருத்தின் பிரகாரம் அவ்வாறான நிலையில் ழுஹ்ர் தொழுவது கட்டாயமாகும். இந்தக் கருத்துவேறுபாடின் காரணமா ஜுமுஆத் தொழுது கொள்வது விரும்பத்தக்கதாகும் என்ற அடிப்படையில் ஜுமுஆத் தொழுது விட்டு ழுஹ்ரையும் தொழுது கொள்ளல்.

 

2. நாற்பது நபர்களை விடக் குறைந்த எண்ணிக்கையான 12 நபர்களைக் கொண்டும் ஜுமுஆ நிறைவேறும் என்று மாலிகி மத்ஹபிலும், இமாம் தவிர்ந்து மூன்று நபர்களைக் கொண்டும் ஜுமுஆ நிறைவேறுமென்று ஹனபி மத்ஹபிலும் கூறப்பட்டுள்ளதால், அவர்களின் மத்ஹபில் கடைபிடிக்க வேண்டிய சகல நிபந்தனைகளையும் கடைபிடித்து அம்மத்ஹபைப் பின்பற்றி ஜுமுஆத் தொழுதல். அதன்பின்னர் ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் ழுஹ்ர் தொழுது கொள்வது விரும்பத்தக்கதாகும்.


எமது நாட்டின் தலைசிறந்த ஆலிம்களில் ஒருவரான அல்-ஆலிம் அப்துஸ் ஸமத் (மக்தூமீ, பஹ்ஜீ) றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இதேவிதமாக தீர்ப்பு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.1

 

குறிப்பு : மேல் சொல்லப்பட்ட வழிகாட்டலின் மேலதிக விளக்கங்களை உங்கள் பகுதி ஆலிம்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 


அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் ஸூரி

மேற்பார்வையாளர் - பத்வாக் குழு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முப்தி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

____________________________________________________________________________

 1.  பார்க்க நூல் : (ழவ்உஷ் ஷிர்அஹ் பிஅததில் ஜுமுஆ- பக்கம்: 11, 12, 13)