தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்தில் கழித்து அதை தான் கொடுக்கும் ஸக்காத்தாக மாற்றுவது சம்பந்தமாக பத்வாக் கோரி 2009.08.10 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஸக்காத் எண்ணமும் செயலும் ஒருங்கே சம்பந்தப்பட்ட ஓர் இபாதத் ஆகும். ஸக்காத் கொடுக்க கடமையானவர் கடமையாகிய சமயத்தில் கடமையான பொருளில் இருந்து குறிப்பிட்ட ஸக்காத் பங்கை, பெறுமதியை வேறாக்கி அதனை ஸக்காத் பெற தகுதியானவர்களுக்கு உரிய முறைப்படி வழங்கிவிட வேண்டும்.
ஸக்காத் பெற தகுதியான ஒருவரிடமிருந்து தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத் கொடுக்க கடமைப்பட்டவர் ஸக்காத்துக்கு பகரமாக கழித்து விடுவது மேற்சொல்லப்பட்ட ஸக்காத் கொடுக்கும் முறைக்கு முரண்பட்டதாகும். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நடைமுறையில் பொருள், பணம் ஸக்காத்தாக கையளிக்கப்பட வேண்டும். அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு இயம்புகிறான்:
“நபியே! அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஸக்காத்தை) எடுப்பீராக!” (09 : 103)
மேலும் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் முஆத் (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பி வைத்த சமயத்தில் பின்வருமாறு கூறினார்கள்:
“அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களின் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ஸக்காத்தை அவர்களின் செல்வங்களில் அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என அவர்களுக்கு நீர் அறிவிப்பீராக!”
(நூல்: சஹீஹ் அல்-புகாரி, பாடம்: ஸக்காத் கடமையாதல், அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூமா)
மேற்படி அல்-குர்ஆன் வசனத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஸக்காத் கைக்குக்கை மாறுவது செயலில் நடைபெறவேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவேதான் இமாம்களான ஷாபிஈ, அபூ ஹனீபா, அஹ்மத் (ரஹிமஹூமுல்லாஹ்) ஆகியோரும் இன்னும் பல இமாம்களும் ஒருவர் தனக்கு வரவேண்டிய கடனை ஸக்காத்திற்கு பகரமாக கழித்துக்கொள்ள முடியாது என்கின்றனர்.