கடன் கொடுத்தவர் அடகு வைக்கப்பட்ட பொருளிலிருந்து பயனடைவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். இதுவே இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். இன்னும், கடன் கொடுத்தவர் அதனை பயன்படுத்தினால் அதற்குப் பொறுப்பாளியாக ஆகிவிடுவார் என்பது ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். அவ்வாறு கடன் கொடுத்தவர் அடகுப்பொருளிலிருந்து பயனடைவதாக உடன்படிக்கையில் நிபந்தனையிட்டிருப்பின் அவ்வுடன்படிக்கை தானாக செல்லுபடியற்றதாக ஆகிவிடும்.
எனினும், வியாபாரத்தில் அடகு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அவ்வடகுப் பொருள் காலம் நிர்ணயிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என்று நிபந்தனையிடப்பட்டிருப்பின்(உதாரணமாக்ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் என்று குறிப்பிடல்) அவ்வடகுப் பொருளை அடகு வைக்கப்பட்டவருக்குப் பயன்படுத்த முடியும். அவ்வாறான நிலையில் அடகுப் பொருள், கூலிக்கு வழங்கப்பட்ட பொருளாகவும், விற்பனை செய்யப்பட்ட பொருள் அதன் கூலியாகவும் கணிக்கப்படும். அடகு வைக்கப்பட்டுள்ள பொருளிலிருந்து அடகு வைத்தவர் பயனடைவதாயின் கடன் கொடுத்தவருக்கு பங்கம் ஏற்படாதவிதத்தில் பயன்பெற முடியும்.அதனை முழுமையாக விற்பனை செய்வது அல்லது அன்பளிப்பாக வழங்குவது அல்லது வக்ப் செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கூடாது.
அடகு வைத்தவர் தான் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அடமானமாக வைக்கப்பட்ட பொருளை கடன் கொடுத்தவரின் அனுமதியுடன் விற்று தனது கடன் தொகையை திருப்பிக் கொடுப்பார் அல்லது கடன் கொடுத்தவர் (அடகுவைக்கப்பட்டவர்) அடகு வைத்தவருடைய அனுமதியுடன் அவர் முன்னிலையில் அப்பொருளை விற்று தனது கடன் தொகையை மீட்டி எடுத்துக்கொள்வார்.