கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு ஏற்பட்டு விவாகரத்துச் செய்வதற்கான முடிவுக்கு வருவதற்குமுன் அவர்களைச் சமாதானம் செய்துவைப்பது குடும்ப உறவினர்களின் கடமையாகும்.
இதன் அடிப்படையில், இரு தரப்பினர்; சார்பாகவும் இரண்டு நபர்கள், அந்தக் கணவன் மனைவிக்கிடையில் உள்ள பிணக்கை நல்லுபதேசம், ஆலோசனைகள் மூலம் தீர்த்துவைக்க முயற்சி செய்தல் வேண்டும்.
அத்துடன், தலாக்கின் மூலம் ஏற்படும் பின்விளைவுகளைத் தெளிவுபடுத்தி அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு கணவன் மனைவியின் பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக இரண்டு நபர்களை அனுப்புவது கட்டாயமாகும் என பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களின் முயற்சி கைகூடவில்லை என்றால், இறுதித் தீர்மானமாக அவர்கள் தலாக், பஸ்கு மற்றும் குல்உ ஆகியவற்றில் மிகப்பொருத்தமான ஏதாவது ஒன்றின் மூலம் விவாக ஒப்பந்தத்தை முறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.