எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்றும் அதற்கடுத்துவரும் மூன்று நாட்களிலும் அல்லாஹ்வுக்காக ஆடு மாடு மற்றும் ஒட்டகை ஆகிய பிராணிகளை அறுத்து நிறைவேற்றப் படும் ஓர் இபாதத்தாகும்.
பொதுவாக முஸ்லிமல்லாதவர்களுக்கு இறைச்சியை தர்மமாகக் கொடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருப்பினும், வாஜிபான மற்றும் சுன்னதான உழ்ஹிய்யா, அகீக்கா, நேர்ச்சை போன்ற இபாதத்தோடு சம்பந்தப்பட்ட இறைச்சிகளை முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுப்பதில் மார்க்க அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஷாபிஈ மத்ஹபின் சரியான கருத்து உழ்ஹிய்யா இறைச்சி குறிப்பிட்ட ஒரு வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு இதைக் கொடுக்க முடியாது என்பதாகும். மேலும், ஹனபி, ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களும் மற்றும், ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய அறிஞரான இமாம் நவவி (ரஹ்) போன்றவர்கள் உழ்ஹிய்யா இறைச்சி பொதுவான ஸதகாவாக இருப்பதால் இதை முஸ்லிமல்லாதவர்களுக்கும் உணவுக்காகக் கொடுக்;கலாம் என்று கூறுகின்றனர்.
முஸ்லிமல்லாதவர்களுடன் ஒன்றாக வாழும் நாம், வழமை போன்று எம்மால் முடியுமான அளவு அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்வதுடன், அவர்களது சுக துக்கங்களில் பங்களிப்பு செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும். உழ்ஹிய்யா போன்ற இபாதத்துடன் சம்பந்தப்பட்ட இறைச்சிகளை முஸ்லிம்களுக்கு மத்தியில் பங்கிட வேண்டும். நீங்கள் வாழும் சூழலைக் கவனத்திற்கொண்டு முஸ்லிமல்லாதவர்களுக்கு இவ்விறைச்சியைக் கொடுக்க வேண்டிய நிலை கட்டாயம் என உணரப்பட்டால் உங்கள் பிரதேச உலமாக்களுடன் ஆலோசனை செய்து நிலைமைக்கேற்ப நடந்துகொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு