உழ்ஹிய்யாப் பிராணியை அறுத்ததன் பின் விலையைத் தீர்மானிப்பது கூடுமா?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்களில் ஆடு மாடு மற்றும் ஒட்டகத்தை அல்லாஹ்வுக்காக அறுத்துக் கொடுக்கப்படும் அமலுக்கு உழ்ஹிய்யா என்று கூறப்படும். உழ்ஹிய்யா முக்கிய சுன்னத்துக்களில் ஒன்றாகும், உழ்ஹிய்யா பிராணி அறுக்கப்படும் நேரத்தில் உழ்ஹிய்யா கொடுப்பவருக்குச் சொந்தமானதாக இருப்பது அவசியமாகும்.

ஒரு பொருளை வாங்குவதன் மூலம் சொந்;தமாக்குவதற்கு, அதன் பெறுமதி முன்னதாகவே அறியப்பட்டிருப்பது முக்கிய நிபந்தனையாகும். 

சில பகுதிகளில் உழ்ஹிய்யா பிராணியை வாங்கும் போது அதை அறுத்ததன் பின் அதன் இறைச்சியின் நிறைக்கேற்ப பிராணியின் விலை தீர்மானிக்கப்படும் நடைமுறை உள்ளது.   

இந்நடைமுறை உழ்ஹிய்யா  பிராணியில் கூடாது.  ஏனெனில், இங்கு பிராணியின்  முழுமையான பெறுமதி அறுக்கப்பட்;டதன் பின்பே முடிவு செய்யப்படுகின்றமையினால், அது வாங்குபவருக்குச் சொந்தமானதா அல்லது விற்பவருக்கா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே அறுக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிராணி இறந்துவிட்டால் அல்லது அறுக்கப்பட்டதன் பின் உண்ணுவதற்கு உகந்ததாக இல்லாவிட்டால் அதன் உரிமையாளர் யார் என்பதிலும், அதன் விலை எவ்வளவு என்பதிலும் சர்ச்சை உண்டாகலாம்.

இதைத் தவிர்த்துக்கொள்ள உழ்ஹிய்யா பிராணியை வாங்குபவர் அதன் முழு விலையையும் தீர்மானித்து வாங்கி, தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டதன் பின்பே, அதனை அறுத்தல் வேண்டும். மேலும், அகீகா மற்றும் நேர்ச்சைக்காக அறுக்கப்படும் பிராணிகளின் சட்டமும் இதுவேயாகும்.

எனவே, இந்நிபந்தனையுடன் உழ்ஹிய்யா பிராணிகள் தமது பிரதேசங்களில் கிடைக்காவிடின், அது கிடைக்கும் இடங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதற்கான முயற்சிகளைச் செய்யலாம்.  

உழ்ஹிய்யா ஒரு வணக்கமாக இருப்பதால் அதற்;காகப் பிராணிகளை விற்பவர்கள்,     விலையை அளவுக்கதிகமாகக் கூட்டி விற்காமல் சாதாரண விலைக்கே விற்பது உழ்ஹிய்யாக் கொடுப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு