எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஸகாத் கடமையாகும் தானியங்களில் நெல்லும் ஒன்றாகும். நெல்லுக்கு ஸகாத் கொடுக்கும் போது பின் வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.
- நீர் பாய்ச்சுவதற்கான செலவுகள் எதுவுமின்றி, மழை நீர் மூலம் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லாக இருந்தால் முழு விளைச்சல் நெல்லிலிருந்தும் பத்தில் ஒரு பங்கு (1/10) அளவு ஸகாத் கொடுத்தல் வேண்டும்.
- பணம் செலுத்தி நீர் பாய்ச்சி அறுவடை செய்த நெல்லாக இருந்தால் இருபதில் ஒரு பங்கு (1/20) ஸகாத் கொடுத்தல் வேண்டும்.
இதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாகும்.
மழை நீராலோ, ஊற்று நீராலோ, தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம் கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். (அறிவிப்பவர் : இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள். நூல் : புகாரி, 1483)
- பொதுவாக தானியத்தில் ஸகாத் கடமையாகும் ஆகக்குறைந்த அளவு 5 வஸக்குகளாகும். 1 வஸக் என்பது 60 'ஸாஃ' ஆகும். 1 'ஸாஃ' என்பது 4 'முத்' ஆகும். ஒரு 'முத்' என்பது ஒருவரது இரு உள்ளங் கைகளால் நிறைத்து அள்ளப்படும் ஒரு அள்ளைக் குறிக்கும்.
அள்ளு என்பதின் சரியான நிறுவை அளவினை மட்டிடுவது சிரமமான காரியமாகும். எனினும், நவீன கால மார்க்க சட்ட அறிஞர்கள் 'ஸாஃ' எனும் அளவினை சர்வதேச (எஸ்.ஐ.) அளவுத் திட்டத்தின் அடிப்டையில் நிறுவை அளவுடன் ஒப்பிட்டு அதனை 2,400 கிராம் (2.4 கிலோ கிராம்) என்று தீர்மானித்துள்ளனர். இவ்வடிப்படையில் தானியத்தில் ஸக்காத் கடமையாகுவதற்கான அளவு 720 கிலோ கிராம்களாகும். நெல்லில் இதன் இரு மடங்குகளாகிய 1440 கிலோ கிராம்களாகும்.
நெல்லுக்கு ஸக்காத் கொடுக்கும் பொழுது பயிர் செய்யும் வேளையில் ஏற்படும் செலவினம் மேலும் விதை நெல், கிருமி நாசினி மற்றும் பசளைகளின் கொள்வனவு, அறுவடை செய்தல், உழவு இயந்திரக் கூலி போன்ற தேவைகளுக்கான செலவுகளைக் கழித்ததன் பின் எஞ்சியுள்ள நெல்லுக்கு மாத்திரம் ஸகாத் கொடுத்தாற் போதுமாகும் என்ற விடயத்தில் நான்கு மத்ஹப்களையும் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் உட்பட அதிகமானவர்கள் 'விளைச்சல் மற்றும் அறுவடைச் செலவுகளைக் கழித்து ஸகாத் கொடுக்க முடியாது என்றும், அறுவடை செய்யும் பொழுது கிடைக்கப் பெறும் மொத்த நெல்லுக்கே ஸகாத் கொடுக்க வேண்டும்' என்றும் கூறுகின்றனர்.
இது பற்றி இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றார்கள் :
பேரீத்தம் பழத்தைக் காயவைத்தல், அறுவடை செய்தல், தானியத்தை சுமத்தல், சூடடித்தல், தூசி நீக்குதல், மேலும் களஞ்சியப்பத்தல் போன்ற செலவுகள் உரிமையாளரின் செலவிலிருந்தே கொடுக்கப் படல் வேண்டும். ஸகாத் பணத்திலிருந்து அவை கழிக்கப்படமாட்டாது என்ற விடயத்தில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
இதற்கான ஆதாரம் நபி ஸல்லல்லாஹு அவர்களது காலத்தில், இது போன்ற செலவுகள் இருந்தும் நபியவர்கள் ஸகாத்தின் அளவில் நீர் பாய்ச்சுவதற்கு ஏற்படும் செலவினை மாத்திரம் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த அடிப்படையில் நெல்லுக்கு ஸகாத் கொடுக்கும் போது உற்பத்தி மற்றும் அறுவடை செலவுகளை கழிக்காது அறுவடை செய்த நெல் அனைத்திற்கும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு