எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்; 'ஹஸன்' எனும் ஆதாரபூர்வமான ஹதீஸின் வரிசையில் இருப்பதாகவே நடு நிலையான அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸலபுஸ் சாலிஹீன்களில் அதிகமானவர்கள் இந்தத் தொழுகையை நிரந்தரமாகக் கடைபிடித்து வந்திருப்பதுடன், பிறருக்கு ஆர்வமூட்டியும் உள்ளார்கள். மேலும் மத்ஹபுகளுடைய பெரும்பாலான அறிஞர்கள் அந்தத் தொழுகை ஸுன்னத் எனவும் தீர்ப்பு வழங்களியுள்ளனர். இருப்பினும் சில அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான ஹதீஸ் பலவீனமானது என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் கருத்து வேற்றுமையான விடயங்களில் மறுப்புத்தெரிவித்தல் கூடாது என்ற பொதுவிதிக்கமைய தஸ்பீஹ் தொழுபவர் தொழாதவர் மீதோ, அல்லது தஸ்பீஹ் தொழாதவர் தொழுபவர் மீதோ, மறுப்புத் தெரிவிப்பது பொருத்தமான செயல் ஆகாது.
அத்துடன் மேற்கண்ட தொழுகை ஜமாஅத் ஸுன்னத்தாக்கப்பட்ட தொழுகை வகையில் சேர்ந்தது அல்ல என மார்க்க சட்ட அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். பொதுவாக நபில் வணக்கத்தைப் பொறுத்த வரையில் சில சந்தர்ப்பங்களில் ஜமாஅத்தாக தொழுவது அனுமதிக்கப்பட்டது என்றிருந்தாலும் குறித்த தொழுகையை ஜமாஅத்தாகவே தொழுதாக வேண்டும் என பொதுவாக மக்கள் மனதில் பதிந்து உள்ள காரணத்தினால் அதைக் கூட்டாக தொழுவதை விடவும் தனியாக தொழுதுகொள்வதே சாலச் சிறந்ததாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.