எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
'ஸுன்னத்தான தொழுகை என்பது ஒரு சிறந்த அமலாகும். விரும்பியவர் அதிகமாகவும் விரும்பியவர் குறைவாகவும் தொழலாம்' என்ற அஹ்மத், தபரானி, ஹாகிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிக்கமைய ஸுன்னத்தான தொழுகைகளைத் தாம் விரும்பும் அளவு அதிகமாகத் தொழுவது நன்மையான காரியமாகும்.
குறிப்பாக வித்ரு, தஹஜ்ஜுத் போன்ற இரவு நேரத் தொழுகைகளைத் தொடர்ந்து தொழுவதை வழமையாக்கிக் கொள்வதன் சிறப்புக்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். அதேபோன்று சில நேரங்களில் சில ஸுன்னத்தான தொழுகைகளைக் கூட்டாகவும் தொழுதுள்ளார்கள்.
குறிப்பாக, இத்பான் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கண் பார்வையை இழந்த சமயம் ஜமாஅத்துடன் தொழுவதற்கு மஸ்ஜிதுக்கு செல்ல முடியாது என்பதனால், வீட்டில் தொழுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி வேண்டினார்கள். அனுமதி வழங்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இத்பான் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களது வீட்டுக்கு சென்று, அவர் தொழும் இடத்தைக் கேட்டு, பரக்கத்துக்காக
இரண்டு றக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழுது ஆரம்பித்துவைத்தார்கள். இந்த ரிவாயத் ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ளது. அதே போன்று உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்கு இன்னும் ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு அருந்த சென்ற சமயம் ஜமாஅத்தாகத் தொழுதுள்ளார்கள்.
என்றாலும், ஸுன்னத்தான இரவுத் தொழுகைகளைக் கூட்டாகத்; தொழுவதற்கு மாதத்தில் பிரத்தியேகமாக ஒரு நாளை ஒதுக்கி, அந்நாளில் பொதுமக்களை ஒன்று சேர்த்து, தொடராகத் தொழும் வழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலோ அல்லது சஹாபாக்கள் காலத்திலோ இருக்கவில்லை. அல்லது செய்யும் படி ஆர்வமூட்டப்படவுமில்லை. மாறாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுன்னத்தான காரியங்களில் தனக்கு முடியாதவைகளைச் சிரமப்பட்டு மேற்கொள்வதைத் தடுத்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு தடவை ஒரு பெண் இரவு முழுவதும் தூங்காமல் வணக்கத்தில் ஈடுபட்ட பொழுது,
'உங்களுக்கு முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நீங்கள் சடைவடையாத வரை அல்லாஹ் சடைவடைய மாட்டான்.' (சஹீஹுல் புகாரி – 1151) என்று கூறினார்கள்.
எனவே, இதைத் தவிர்த்து, சுன்னத்தான தொழுகைகளின் சிறப்புக்களை மக்களுக்கு உணர்த்தித் தனியாக தமக்கு வசதியான இடங்களில் தொழுவதற்கு ஆர்வமூட்டுதல் வேண்டும்.
சுன்னத்தான தொழுகைகளை வீடுகளில் தொழுதுகொள்ளும் படியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
'மக்களே உங்களது வீடுகளில் தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகைகளைத் தவிர்த்து ஏனைய தொழுகைகளில் வீட்டில் தொழப்படும் தொழுகையே சிறந்ததாகும்.' நூல்: சஹீஹுல் புகாரி - 731
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.