ஸுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுவது பற்றிய வழிகாட்டல்  

ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது பற்றி மார்க்க அறிஞர்கள் கருத்து வேறுபாடு அடைந்துள்ளனர். இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது முக்கியமான சுன்னத் என்றும், இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ்  'முஸ்தஹப்' என்றும்  இதற்கு நபி வழியில் தகுந்த ஸஹீஹான ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.

அதேவேளை, இமாம் அஹ்மத், இமாம் அபூ ஹனீபா றஹிமஹுமல்லாஹ் போன்றவர்கள், ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவதற்கு எவ்வித தகுந்த ஸஹீஹான ஆதாரங்களும் இல்லையென்று கூறுகின்றனர்.

இக்கருத்து வேற்றுமைக்கான காரணம் நபி மொழிகளில் வந்துள்ள வார்த்தைப் பிரயோகங்களுக்கு அறிஞர் பெருமக்களுக்கிடையில் ஏற்பட்ட விளக்க வித்தியாசமும், அந்த நபி மொழிகள் ஸஹீஹானதா அல்லது ழஈ(f)பானதா என்பதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளுமாகும்.

மேற்கூறப்பட்ட இக்கருத்து வேற்றுமை, முன்னோர்களின் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது என்பதையும், இக்கருத்து வேற்றுமை அறிவு பூர்வமான கருத்து வேற்றுமை என்பதால் பிழையான முடிவைப் பெற்றவருக்கும் நன்மையுண்டு என்பதையும், மேலும் இக்கருத்து வேற்றுமை கருத்துகளில் மட்டும் வேற்றுமையாக இருக்கவேண்டுமே தவிர கல்புகள் வரைக்கும் சென்று உம்மத்தில் பாரிய பிளவை ஏற்படுத்தி விடக்கூடிய விடயமல்ல என்பதைக் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் செயற்படவேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக்கொள்கிறது.

அத்துடன், இவ்விடயத்தில் கண்ணியமிக்க ஆலிம்கள் தாம் வாழும் காலத்தையும், சூழலையும் கவனத்திற் கொண்டு பொதுமக்களையும், மஸ்ஜித் நிர்வாகிகளையும் இது போன்ற விடயங்களில் நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் கூறிக்கொள்கிறது.

இக்கருத்து வேற்றுமை சமூகத்தைப் பிளவு படுத்தி ஒற்றுமையைச் சீர்குலைக்குமளவு பாரிய ஒரு பிரச்சினை என கருத முடியாதென்றும், மேற்கூறப்பட்ட ஆய்வுக் கேற்ப கருத்துக்களை தேர்ந்தெடுத்து செயற்படுவதில் எத்தவருமில்லையெனவும் கூறிக் கொள்வதோடு, ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுபவர்கள் ஓதாதபவர்கள் மீதோ, ஓதாதவர்கள் ஓதுபவர்கள் மீதோ, அதனைத் திணிக்க முயற்சிப்பதும், ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதப்படும் மஸ்ஜித்களைவிட்டு ஒத்தமுடிவாக 'பித்அத்' என்றோ வழிகேடு என்றோ கூறி அம்மஸ்ஜித்களையும், ஜமாஅத்தினரையும் விட்டு ஒதுங்குவதும் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணான செயல்பாடாகும் என எச்சரிக்கை செய்கின்றது.

கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட ஒற்றுமைப் பிரகடனத்தில் கூறியுள்ளது. அதைச் செயற்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு