துவான் சமீன் சதியான் ஆகிய நான் கிபுலாஎல மஹல்லாவைச் சேர்ந்தவர். மூன்று பிள்ளைகளின் தகப்பனாகும். எனது மூத்த மகளாகிய நெய் பாஹிமா நுஸ்லா பத்து வருடங்களுக்கு முன் தன் விருப்பப்படி முஸ்லிம் அல்லாத ஒருவரைக் காதலித்;துத் திருமணம் முடித்தாள். நாங்கள் அவரை தீனுக்கு எடுத்தோம். நல்ல முறையில் இரண்டு குழந்தைகள் கிடைத்தன. பெண் பிள்ளை ஒன்றும் ஆண் பிள்ளையொன்றும் இருக்கின்றார்கள். கணவன் (மருமகன்) தொழிலுக்காக வெளிநாடு போய் வந்து கொண்டு இருந்தார். இருவரும் சந்தோசமாகக் காலம் கழித்தார்கள்.

மருமகன் வெளிநாட்டில் இருந்த போது, மகள் வேறு அந்நியர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளாள். மருமகன் இலங்கையில் வந்திருந்த சமயம் இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு போய்விட்டாள். அவர்கள் இருவரும் ஹராமான முறையில் வாழ்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்நியர்களைப் போல் வாழ்கின்றார்கள். ஆனால் எனது மருமகன் தற்பொழுதும் தீனுடன் எங்களுடன் தான் இருக்கின்றார். அவர்சார்பாக இரண்டு பிள்ளைகளையும் நாங்கள் கேட்கிறோம். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். இது சம்பந்தமாக இஸ்லாம் மார்க்கப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கடிதம் ஒன்று அல்லாஹ்வுக்காகத் தரும்படி உலமா சபை தலைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தனது காரியங்களைச் சுயமாகச் செய்ய முடியாத பிள்ளையைப் பாதுகாத்து சீராக வளர்ப்பதற்குப் பராமரித்தல் என்று சொல்லப்படும். பிள்ளையைப் பராமரிப்பதும், வளர்ப்பதும் அதன் தாய், தகப்பனது கடமையாகும். தாயும் தகப்பனும் பிரிந்து, தாய் உயிருடன் 

இருந்து மறுமணம் செய்யாதவிடுத்து அவளே அப்பிள்ளையை பராமரிப்பதற்கு உரிமையுடையவளாவாள்.

'நபி ஸல்லல்லா{ஹஅலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்வந்து கூறினாள்: அல்லாஹ்வின் தூதரே எனது வயிறு என்னுடைய இம்மகனை சுமக்கும் உறையாகவும், எனது மார்பு இவன் (பால்) அருந்தும் பையாகவும், எனது மடி இவனது விரிப்பாகவும் இருந்தன, இந்நிலையில் அவனது தகப்பன் என்னை தலாக் சொல்லிவிட்டு என்னிடமிருந்து மகனை எடுத்துச்செல்ல நாடுகிறான் என்று கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லா{ஹஅலைஹி வஸல்லம் அவர்கள் 'மற்றுமொரு திருமணம் முடிக்காத வரை நீயே அவனை வளர்க்க உரித்தானவள்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர், நூல்: அபூ தாவூத்)

தாய் மரணித்தல், பராமரிக்க மறுத்தல், பராமரிக்கத் தகுதியான பண்புகள் இல்லாமல் இருத்தல், மறுமணம் செய்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், அல்லது சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற நிலைமைகள் ஏற்படும் பொழுது தாய்க்கு அடுத்து உறவினர்களில் ஆண்களைவிட பெண்களே பராமரிக்கத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.

முக்னி அல்-முஹ்தாஜ் எனும் கிதாபில் 'அல்-ஹளானா' எனும் பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

( الإناث أليق بها ) لأنهن أشفق وأهدى إلى التربية وأصبر على القيام بها وأشد ملازمة للاطفال. 'كتاب الحضانة. مغنى المحتاج'

'பெண்களே அதற்கு தகுதியானவர்கள் ஏனெனில் அவர்கள் மிகவும் இரக்கமானவர்கள், பராமரிக்கத் தெரிந்தவர்கள், பொறுமையானவர்கள், அதிகமாகப் பிள்ளைகளுடன் சேர்ந்து இருப்பவர்கள்'.

எனவே, தாய்க்கு அடுத்து தாயின் தாயே (உம்மம்மா) தகுதியானவர் என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். மேற்கூறிய அதே கிரந்தத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 'தாய்க்குப்பின் தாயின் பெண்வழித்தாய்களே தகுதியானவர்கள் (அதாவது தாயின் தாய் (உம்மம்மா) அல்லது பாட்டி'

உங்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று, குறிப்பிட்ட பிள்ளைகளின் தாய், தனது சட்ட பூர்வ கணவராகிய அப்பிள்ளைகளின் தகப்பனை விட்டும் முறையாகப் பிரியாமலும், அவளது உறவினர்களை விட்டும் தனியாகி,  இன்னுமொரு  ஆணுடன் முறை கேடாக வாழ்ந்துகொண்டிருக்கும் போது, அவளது பிள்ளைகளை முறையாக வளர்க்க முடியாது என்ற படியால் அவள் பராமரிக்கும் தன்மையை இழந்துவிடுகிறாள்.

பிள்ளைகளின் தாய் அப்பிள்ளைகளைப் பராமரிக்கும் தகைமையை இழந்துவிட்டதனால் பிள்ளைகள் சுயமாக முடிவுகளை எடுக்கும், பிரித்தரியும் வயதை அடையும்வரை பராமரிக்கும் பொறுப்பு அப்பிள்ளையின் தாயின் தாய்க்கே உரித்தாகும்.

பிள்ளைகள் சுயமாக முடிவுகளை எடுக்கும், பிரித்தரியும் வயதை அடைந்தபின், அப்பிள்ளைகளின் விருப்பத்துக்கிணங்க, அவர்கள் தெரிவு செய்யும் தாய் அல்லது தந்தையிடம் இருத்தல் வேண்டும். இருவரையும் விரும்பினால் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுபவரிடம் இருத்தல் வேண்டும்.

இருந்தாலும், அவர்கள் தாயைத் தெரிவு செய்யும் பட்சத்தில் அவள் மறுமணம் செய்தருந்தால், அல்லது தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவர் கெட்ட நடத்தை உள்ளவராக இருந்தால் மற்றவரிடம் அப்பிள்ளைகளை ஒப்படைத்தல் வேண்டும்.

இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்களின் 'மின்ஹாஜுத் தாலிபீன' எனும் கிதாபில் 'அல்-ஹளானா' எனும் பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

والمميز ان افترق أبواه كان عند من اختار منهما فإن كان في أحدهما جنون أو كفر أو رق أو فسق أو نكحت فالحق للآخر 

'பிரித்தரியும் வயதை அடைந்த பிள்ளை, அப்பிள்ளையின் தாயும், தகப்பனும் பிரியும் பட்சத்தில் அப்பிள்ளை தெரிவு செய்யும் தாய் அல்லது தகப்பனிடம்; இருத்தல் வேண்டும். அவர்களில் ஒருவர் பைத்தியம் பிடித்தவராக, முஸ்லிம் அல்லாதவராக, அடிமையாக, அல்லது கெட்டவராக இருந்தால் அல்லது, தாய் மறுமணம் செய்துகொண்டால் மற்றவருக்கு பராமரிக்கும் உரிமை சென்றுவிடும்.'

எனவே, குறிப்பிட்ட பிள்ளைகள் பிரித்தரியும் வயதை அடையாவிட்டால், அப்பிள்ளைகளின் தாயின் தாயே பராமரிக்க தகுதியானவள். அப்பிள்ளைகள் பிரித்தரியும் வயதை அடைந்திருந்தால் அப்பிள்ளைகளின் தகப்பனே பராமரிக்க தகுதியானவர். எவ்வகையிலும் அப்பிள்ளைகளின் தாய் மேற்குறிப்பிட்ட காரணத்தினால் ஷரீஆவின் அடிப்படையில் பராமரிக்கத் தகுதியற்றவளாகிவிடுவாள்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு