எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
துஆ என்பது மார்க்கத்தில் பிரதானமான ஒரு வணக்கமாகும். துஆவை தனியாக செய்வதற்கு ஆதாரங்கள் இருப்பது போன்று கூட்டாக செய்வதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
இன்று வழமையில் ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின் தொடரான வடிவில் ஓதப்படுகின்ற கூட்டுப் பிராத்தனையை பொறுத்த வரையில் உலமாப் பெருந்தகைகளுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை காணப்படுகின்றது.
தொழுகையின் பின் கூட்டாக துஆ கேட்பதற்கு நபி வழியில் ஆதாரம் கிடையாது என்பதால் அது கூடாது என்று ஆலிம்களில் ஒரு சாரார் கருதுகின்றனர். அதே வேளை தொழுகைக்குப் பின் கேட்கப்படுகின்ற பிராhத்தனை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது, கூட்டாகக் கேட்கப்படும் துஆ மறுக்கப்படுவதில்லை என்பன போன்ற கருத்துகள் உள்ளடக்கிய ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறைமை கூடுமென்று வேறொரு சாரார் கருதுகின்றனர்.
எனவே மேற்கண்ட இக்கருத்துவேற்றுமை சமூகத்தை பிளவுபடுத்தி ஒற்றுமையை சீர்குழைக்குமளவு பாரிய ஒரு பிரச்சினையென கருத முடியாதென்றும் விரும்பியவர்கள்
தத்தமது ஆய்வுகளுக்குகேட்ப கருத்துகளை தேர்ந்தெடுத்து செயற்படுத்தவதில் எத்தவறுமில்லை எனவும் கூறிக் கொள்வதோடு, இதன் மூலம் ஒற்றுமைக்கு வழிகோலுமாறு எமது சகோதரர்களை வேண்டிக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.