ஜும்ஆப் பிரசங்கம் செய்பவர் பிரிதொருவரை ஜும்ஆத் தொழுகை நடாத்துவதற்காக நியமித்தல்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

குத்பாப் பிரசங்கத்தை நிகழ்த்தியவரே தொழுவித்தலையும் ஏற்பது அடிப்படையும் நபி வழியுமாகும். பேருரை நிகழ்த்தியவருக்கு ஏதேனும் தங்கடம் ஏற்படின் இன்னும் ஒருவரை தனக்குப் பதிலாக்கிக் கொள்வதில் எவ்வித கருத்து வேறுபாடும் அறிஞர் பெருமக்களுக்கிடையில் இல்லை.

காரணம் எதுவும் இன்றி இன்னொருவரை தொழுவிப்பதற்குப் பதிலாக்கம் செய்தலை மாலிக் மத்ஹபைத் தவிர்ந்த ஏனைய இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், அபூ ஹனீபா (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர்கள் ஆகுமாக்கியுள்ளார்கள்.    

“குத்பாவின் நடுவிலும், தொழுகைக்கும் குத்பாவிற்கு மத்தியிலும் இன்னொருவரை நியமிக்க முடியும்” என்பதை முக்னி அல்-முஹ்தாஜ் எனும் ஷாபிஈ மத்ஹபின் முக்கிய ஒரு கிரந்தத்தில் காணமுடிகிறது.

மேற்குறிப்பிடப்பட்ட கருத்துப் பிரகாரம் குத்பா செய்தவருக்கு இன்னுமொருவரை தொழுகை நடாத்த நியமிக்க முடியுமென்பது தெரியவருகின்றது. எது எவ்வறாயினும், நபி வழியில் உள்ளதே நடைமுறைக்கு சாலச்சிறந்தது. பதிலாக்கம் செய்வதில் நலன் ஒன்று நாடப்படும் இடத்து அவ்வாறு செய்வதில் தவறில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு