Subject : கர்ப்பினி, பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விடுதல்

FATWA # 004/ACJU/F/2009

ஆக 04, 2023

வெளியிடப்பட்ட

நோன்பு

கர்ப்பினி, பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விடுவது பற்றி தீரப்புக் கோரி தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம்  இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

நோன்பு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். நோன்பு நோற்பது வயது வந்த ஒவ்வொரு ஆண், பெண் மீதும் அவசியமாகும். எனினும் கர்ப்பினி, பால் கொடுக்கும் தாய்மார்கள் நோன்பை விடுவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதியுண்டு. அவர்கள் அதைக் கழாச் செய்வது, ஃபித்யாக் கொடுப்பது பற்றி இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு விபரிக்கின்றார்கள்:

'எமது மத்ஹப் அவ்விருவரும் (கர்ப்பினியும், பாலூட்டும் தாயும்) தம் மீது மட்டும் பயந்தால் அல்லது தம் மீதும் தமது குழந்தை மீதும் பயந்தால் அவ்விருவரும் நோன்பை விட்டுவிட்டு, கழாச் செய்வார்கள். எவ்வித கருத்துவேறுபாடுமின்றி அவ்விருவர் மீதும் ஃபித்யா கடமையில்லை. குழந்தை மீது பயந்து நோன்பை விடுவதாக இருந்தால், நோன்பை விட்டுவிட்டு கழாச் செய்வார்கள். சரியான சொல் ஃபித்யா அவசியம் என்பதாகும்'. (நூல்: அல்-மஜ்மூஃ - பாகம்: 06, பக்கம்: 178) (பதிப்பு : தார் இஹ்யா அல்-துராஸ் அல் அரபி,2001)

எனவே, ஒரு கரப்;பினி அல்லது பாலூட்டும் தாய் தனக்கோ அல்லது தனக்கும் தனது பிள்ளைக்கும் ஏதாவது பாதகம் ஏற்படும் என பயந்து நோன்பை விட்டால் அந்நோன்பை கழா செய்யவேண்டும். ஃபித்யா கொடுப்பது அவசியமில்லை. ஆனால் தனது பிள்ளைக்கு மாத்திரம் 

ஏதாவது பாதகம் ஏற்படும் என பயந்து நோன்பை விட்டால் நோன்பை கழா செய்வதுடன் ஃபித்யா கொடுப்பதும் அவசியமாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.