Subject : தொழுகைக்காக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் ஒன்றை கைவிடுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 07/ACJU/F/2006

ஆக 04, 2023

வெளியிடப்பட்ட

வக்ப் மற்றும் மஸ்ஜித்

தொழுகைக்காக வக்ஃப் செய்யப்பட்ட மஸ்ஜித் ஒன்றை கைவிடுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2006.12.01 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது. 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வக்ஃப் என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ஃப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

ஒரு பொருளை வக்ஃப் செய்த நபர் எந்த நோக்கத்துக்காக அதை வக்ஃப் செய்தாரோ அந்த நோக்கத்துக்குப் பங்கம் ஏற்படாமலும், அதனை மாற்றாமலும் அதனைப் பயன்படுத்துவது  அதன் நிருவாகிகளின் கடமையாகும் என்பதுடன் தக்க காரணம் இன்றி அப்பொருளை அது வக்ஃப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்தவது மிகப் பெரிய தவறுமாகும். ஆயினும் தங்களின் கடிதத்தில்

  1. தொழுகை போன்ற இபாதத்களை நடத்த இடவசதி போதாமை,
  1. போதிய ஹவ்ழ், கழிவறை வசதிகள் இன்மை,
  1. மஸ்ஜித் ஊழியர்களுக்கு தங்குமிட வசதி இன்மை,
  1. தற்போதைய மஸ்ஜிதை விரிவுபடுத்திக் கட்டுவதற்கு இடவசதி இல்லாமை

போன்றவை புதிய பள்ளிவாசல் அமைப்பதற்கான தக்க காரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இரண்டு காணிகளையும் வக்ஃப் செய்தவருடைய நோக்கத்துக்கு மாற்றமில்லாமல் அவற்றைப் பயன்படுத்துவது நிர்வாகத்தினதும், சம்பந்தப்படடோரினதும் கடமையாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.